மருந்து, மாத்திரை விற்பனை 2023 பிப்ரவரியில் 25 விழுக்காடு வரை அதிகரிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

மருந்து, மாத்திரை விற்பனை 2023 பிப்ரவரியில் 25 விழுக்காடு வரை அதிகரிப்பு!

புதுடில்லி, மார்ச் 12- கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த் தொற்று போன்ற காரணங்களால், இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மருந்து, மாத்திரைகளின் விற்பனை 20 முதல் 25 விழுக்காடு வரை அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பாக, காய்ச்சல் மருந்துகளான பாரசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்கள் மிகப்பெரிய அளவிற்கு விற்பனையாகி உள்ளது. இந்தியா முழுவதும், புளூ காய்ச்சலுடன் எச்1 என்1 எனும் ஒரு வகை இன்புளூயென்சா வைரஸ்  கிருமித் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. 

காய்ச்சல், உடல்வலி, தலை வலி, சளி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். சிலருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் வறட்டு இருமல் உள்ளது. தொற்றிலிருந்து மீண்ட பிறகும் கூட தொடர்ந்து இருமல் உள்ளது.  இவைதான், காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையில் ஒரு வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  அதாவது, கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால், பிப்ரவரி மாதத்தில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல் மருந்து களான பாரசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

2023 பிப்ரவரியில், நோய்த் தொற்று  எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 விழுக்காடு அதிகரித்து, அதன் மொத்த வர்த்தகம் ரூ. 22 ஆயிரத்து 883  கோடியாக இருந்துள்ளது. இதேபோல சுவாச மருந்துகள் 8.1 விழுக்காடு அதிகரித்து ரூ. 14 ஆயிரத்து 880  கோடி அளவிற்கு வர்த்தகம் நடை பெற்றுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி  அளிக்கக் கூடிய மருந்துகள் விற்பனை 26.1 விழுக்காடு அதிகரித்து, அவற்றின் வர்த்தகம் ரூ. 2 ஆயிரத்து 766 கோடியாக உயந்துள்ளது. 

நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கப்பயன்படும் சிப்லாவின் புட்கார்ட் விற்பனை 23.3 விழுக்காடு அதிகரித்து, அதன் வர்த்தகம் ரூ. 2 ஆயிரத்து 385 கோடியாக இருந்துள்ளது. வலி நிவாரணி மருந்துகள் விற்பனையும் 10.7 விழுக்காடு அளவிற்கு அதிகரித்து ரூ.12 ஆயிரத்து 898 கோடி அளவிற்கான வர்த்தகமாக இருந்துள்ளது. 

இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவிய காய்ச்சல் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ  காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது. 2 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல்  நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற  பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே  மாதிரியாகத்தான் இருக்கும். 

ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப் படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்  பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் உரிய மருத்துவரை அணுகவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புளூ காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுவாக கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நன்கு  சூடாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் சாப்பிட லாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


No comments:

Post a Comment