நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி!

முனைவர் துரை.சந்திரசேகரன்


பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்



“பாராட்டிப் போற்றிவந்த பழமைலோகம்


ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுதுபார்...


அய்யாவின்


வெண்தாடி அசைந்தால் போதும்


கண்ஜாடை தெரிந்தால் போதும்


கருப்புடை தரிப்போர் உண்டு


கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள்!”


என்று முத்தமிழறிஞர் கலைஞரால் புகழாரம் சூட்டப்பெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டிப் பூரித்தார்; சிலை எழுப்பிட வேண்டும் என்றும் பெருமை சூட்டினார். கலைஞரின் பகுத்தறிவுப் பான்மையை சிறப்பித்து தலைவர் பெரியார் சூட்டிய புகழாரத்தைப் பார்ப்போமா!


“கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார். இத்தகைய பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய இராஜதந்திரியாகவும் முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர். அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர் பணி வெற்றி அடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்”


(கலைஞர் 48ஆவது பிறந்த நாள் மலரில்


தந்தை பெரியார்)


தலைசிறந்த பகுத்தறிவுவாதி என்று அறிவுலக ஆசான் பெரியாரால் பாராட்டப்பெற்ற டாக்டர் கலைஞ ரின் பகுத்தறிவுக் கருத்துக்களை, அறிவுசார் சிந்தனை களை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கம்.


மானமிகு சுயமரியாதைக்காரன் என்றும், நான் நாத்திகன் என்றும் தன்னைப் பற்றி பிரகடனப்படுத்திக் கொண்ட தமிழர் வாழ்வில் புத்தொளி பரப்பிய அரசிய லாளர் கலைஞரின் பகுத்தறிவு பாய்ச்சும் படைப்புகளை படம் பிடித்துக் காட்டுவதே இக்கட்டுரை.


பள்ளிப் பருவத்திலேயே


பகுத்தறிவுக் கேள்வி!


திருவாரூரில் கலைஞர் அவர்கள் மாணவராக படித்துக் கொண்டிருந்த அந்த இளம் பருவத்திலேயே கிருபானந்தவாரியாரிடம் கேள்வி கேட்டு தனது பகுத் தறிவுப் பான்மையை வெளிப்படுத்தினாராம். வாரியாரி டம் துடுக்குத்தனமாக காலட்சேபம் எனும் பொது நிகழ்வில் கேள்விக்கணை தொடுப்பதற்கு துணிச்சல் வேண்டும்தானே! விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்களே... அது இப்படித்தானோ! இதோ தனது இளம் பிராயத்தில் நடைபெற்ற நகைச்சுவையும் கலந்த அந்த நிகழ்ச்சி பற்றி அவரே கூறுவதைக் கேளுங்கள்:


“எனது பள்ளிக் காலத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் திருவாரூருக்கு அடிக்கடி காலட்சேபம் செய்ய வருவார். அவருடன் வாதிப்பதற்காகவே பள்ளிக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு அவ ரது கூட்டத்துக்குச் செல்வேன்.


ஒரு முறை வாரியார் காலட்சேபத்தில் உயிருள்ள எதையும் மிருகமோ - பறவையோ மனிதன் கொன்று தின்பதற்கு கடவுள் படைக்கவில்லை என்றார். உடனே நான் சிங்கத்துக்குக் கடவுள் என்ன உணவு படைத்தார்? எனக் கேட்டபோது என்னை உட்காரச் சொல்லிவிட்டார். அதைத் தொடர்ந்து தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே அதைச் சாப்பிடலாமா? எனப் பல பேர் கேட்கலாம். காய்கறிகளைப் பறித்த பின்பும் அவற்றின் வளர்ச்சி தடைபடுவது இல்லை. எனவே மனிதன் தாராளமாய்ச் சாப்பிடலாம் என்றார். நானும் விடவில்லை. கீரைத் தண்டை வேரோடு பறித்துச் சாப்பிடுகிறோமே அது எப் படி? எனக் கேட்டேன். அப்போதும் வாரியார் என்னை அடக்கி உட்காரச் சொன்னார்.


வாரியார் சுவாமிகளை அதற்குப் பிறகும் பலமுறை சந்தித்திருக்கிறேன். நான் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை அவரிடம் இருந்து மட்டுமல்ல, வேறு எவரிடம் இருந்தும் பதில் வரவில்லை. அதனால் என் கொள்கையை நானும் மாற்றிக் கொள்ளவுமில்லை.”


(நூல்: கலைஞரின் நகைச்சுவை நயம்)


தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் கலைஞரைப் பற்றிக்  கொண்டது பிள்ளைப் பருவத்தி லேயே அதாவது பதின்ம வயதில்! அவர் அன்று எழுப் பிய வினாவுக்கு வாரியாரோ, மற்ற எவரோ இதுவரை பதில் சொல்லவில்லை என்பது கேள்வியின் நியாயம். கேள்வியின் உண்மை. பெரியார் கொள்கையின் வலி மையை வெளிப்படுத்துகின்றது.


பகுத்தறிவு நீரோடை


பாய்ந்திட வேண்டும்


பகுத்தறிவு உணர்ச்சியே மூடநம்பிக்கைகளை அகற்றும்; ஜாதீயத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் என்பதையும், பகுத்தறிவின் அவசியத்தையும் நாட்டு மக்களுக்கும், தி.மு.க. தோழர்களுக்கும் தம் கடிதங்கள் வழியே அடிக்கடி வலியுறுத்திட தயங்காதவர் பேரறிவா ளர் கலைஞர்.


“ஜாதி, மதமென்னும் சமூக அமைப்புக்களால் ஏற் பட்ட பேதங்களை அகற்றுவதற்கு மட்டுமல்ல, உழைக்க ஓர் பிரிவு, உண்டு கொழுக்க ஓர் பிரிவு என்ற பொருளா தார பேதத்தையும் சுட்டிக்காட்டி ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் அமைத்திடவும் பகுத்தறிவு மன்றமே தீர்ப்பு எழுதியது” (கலைஞர் கடிதம், தொகுதி 7).


“சமுதாயத்துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை அனைத்திலுமே பகுத்தறிவு நீரோடை தங்கு தடையின்றிப் பாய்ந்தோடிட வேண்டும்; அப்போதுதான் நாடு வாழும்! நலிவு தீரும்! பண்பு சிறக்கும்! பளிங்கெனத் தெளிவு பிறக்கும்! (கலைஞர் கடிதம், தொகுதி 3).


“சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும், நேர்மையையும் நெறியையும் மூடநம்பிக்கைகளால் நிலை நிறுத்த முடியாது” (கலைஞர் கடிதம், தொகுதி 6).


“அதிசய வேலைகள், ஆருடக் கணிப்புகள், ஜோசிய மோசடிகள் இவைகள் நம்பத்தகாதவை என்று கட்சிக்கும் அப்பாற்பட்ட மேதைகள் அனைவரும் திடமாகக் கூறியாயிற்று. ஆகவே இந்தக் கொடுமையை ஒழிக்க - இந்திய நாட்டு அளவில் உடனடியாகச் சட்டம் தேவை! கள்ளக் கடத்தல் போல, அந்நியச் செலவாணி மோசடி போல, இதுவும் “மிசா” அல்லது “போசா” போன்ற சட்டத்தால் தடுக்கப்பட்டாக வேண்டும். இல்லையேல் இந்த நோய் சமுதாயத்தை - நாட்டை மிக வேகமாகப் பின் னுக்குத் தள்ளி, மக்களை கோழைகளாக்கி வீழ்த்திவிடும்.”


இப்படியெல்லாம் எழுதிடும் கலைஞர் “தம் இயக்கத் தவர்கள் பெரியார், அண்ணா வழி நின்று இயக்கப் பணிகளோடு பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் செய்தல் வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.


“ஜாதி வெறி, மதக்குரோதம், மூடநம்பிக்கை இத்யாதி கொடுமைகளை அகற்றுவதற்கு, அடிக்கும் தாயைப் போல் பெரியார் ஆத்திரம் காட்டினார்” என தந்தை பெரியாரின் கோபக்கனலை சுட்டிக்காட்டவும் தவற வில்லை.


முத்தமிழறிஞர் கலைஞரின் சிறுகதைகளாக இருந் தாலும், புனிதனங்களாக இருந்தாலும், நாடகங்களாக இருந்தாலும், திரைப்படங்களாக இருந்தாலும் பகுத்தறிவு வாதங்கள், சிந்தனைகள், எள்ளல்கள இடம் பெறாமல் போகாது. பெரியார் எனும் கலாசாலையில் பயிற்சி பெற்ற மாணவர் என்பதை ஒவ்வொரு இடத்திலும் நிரூபித் திருக்கிறார். கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு மிக்க வராகவே தமது எழுத்துக்களை பகுத்தறிவை பரப்பிட பயன்படுத்தி உள்ளார்.


‘நடுத்தெரு நாராயணி’ சிறுகதையில் அய்யர்வாள் பேசுவதாக மகாபாரதத்தை எள்ளி நகையாடி இருப்ப தைப் பாருங்கள், “ஒரு குலஸ்திரீ அய்ந்து பேர் வரை ஆடவாளிடம் தொடர்பு வச்சிக்கலாம்னு நம்ம பாரதமே சொல்லுதடி.”


இன்னொரு இடத்தில் “வெள்ளைக்காரன் மீனைப் பார்த்து ‘சப்மரீன்’ செய்தான்; நாம் ‘மச்ச அவதாரம்’ செய்வோம்” என்று நமது மக்களின் மூடநம்பிக்கையை விளக்கம் செய்தார்.


‘சங்கிலி சாமியார்’ எனும் சிறுகதை மக்களிடம் மடமை, அறியாமை இருக்கும் வரை பக்தியின் பேரால் பகல் வேடம் புனைவோருக்கு இலாபம் குறையாது என்பதை லாவகமாக குத்திக் காட்டும் கலைஞரை கவனியுங்கள்.


“சாமிகளுக்கு மாபெரும் மடம். சம்பந்தம் மடத்தின் சாமி. முதலியார் மடத்தின் சொந்தக்காரர். 2000 ரூபாய் எடை வெள்ளிக்கட்டி நட்டம்! ஆனால்... 20,000 ரூபாய் எடையுள்ள வெள்ளிக்கட்டி இலாபம்!... மக்களிடம் மடமை இருக்கும் வரை அந்த இலாபம் குறையாது."


மனிதனின் படைப்புதான் ஆண்டவன்


கடவுள், மத, மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டும் கலைஞரின் ‘வெள்ளிக்கிழமை’ புதினம். எள்ளல் முறையில் வைதீகத்தை வறுத்தெடுக்கிறார் அறியாமைக் கருத்துக்களை! பகுத்தறிவாளராக நின்று அவர் சொல்ல நினைக்கும் கருத்துக்களை சிவநேசர் பாத்திரத்தின் மூலம் அம்பலப்படுத்தும் அறிவார்ந்த வீச்சைப் பாருங்கள்...


“நான்தான் சிவபெருமான்; தாருகாவனத்து ரிஷி பத்தினிகளையெல்லாம் சோதனை செய்ய எழுந்தருளி இருக்கிறேன்.”


“நான் தான் சிவபெருமான்; நெற்றிக்கண்ணன்! இயற்பகை நாயனாரின் மனைவியைப் பரிசோதிக்கப் புறப்பட்டிருக்கிறேன். சிறுத்தொண்டரின் பிள்ளையைக் கறி சமைத்துச் சாப்பிடப் புறப்பட்டிருக்கிறேன்.”


“இராமாயணத்திலே முக்கால்வாசி கதை காட்டிலே நடந்தது - நாட்டிலே நடந்தது நாலில் ஒன்று! இராமாய ணம் என்பது ஒரு கட்டுக்கதை. காட்டிலே உள்ள பிராணிகள் சிலவற்றைக் கதாநாயகனாகவும், கதாநாயகி யாகவும் வைத்து எழுதப்பட்ட கதை.”


“கன்னி கழியாமல் பிள்ளைப் பெற்றவள்; அவள்தான் அசல் குந்தி தேவி! ஏ! பாண்டு மகாராஜனே! அவளைக் கல்யாணம் செய்து தர முடியாது! ஓடிவிடு.”


“நான் நம்பிய நாளோ - நட்சத்திரமோ - கோயிலோ - தெய்வமோ எதுவுமே என்னையும் என் குடும் பத்தையும் மானத்தோடு வாழ விடவில்லை.”


கலைஞரின் கனல்தெறிக்கும் பகுத்தறிவைத் தூண் டும், மூடநம்பிக்கையை முறியடிக்கும் உரையாடலை படித்தீர்களா? சிவபெருமானின் லீலா விநோதங்கள் சில வரிகளில்... இராமாயண - மகாபாரத கண்டனங்கள் சில வரிகளில்... இப்படியே இந்த கதை மாந்தர் பலர் பேசும் உரையாடல்கள் தந்தை பெரியாரின் அறிவார்ந்த சொல்லாடல்களே என்றால் மிகையான கருத்தல்ல.


“மதம் மாற வேண்டாம் - மனம் மாறாமலிருந்தால் போதும்” ஆனந்தி பேசுவதாக...


“மனிதனுக்கு மனிதன் அவயவங்களைச் சில மாறுதல் பண்ணிக் கொள்வதுதானே மதம்” கதை மாந்தர் நயினா பேசுவதாக... அமைந்துள்ள உரையாடல்கள் மதம் மக்களுக்கு அபின் என்பதை பறை சாற்றுகின்றன. எல்லா கிழமைகளைப் போன்றதே வெள்ளிக்கிழமை. அதற்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு? ‘வீட்டுத் தெய்வத் துக்கு விளக்கேற்றிப் படையல் போட உகந்தநாள்’, ‘ஏசு பிரானுக்கு ஏற்ற நாள்’, ‘அன்றுதான் வீடு வாசல் தூய்மை செய்து கோலமிட்டு அழகூட்டுவதற்கு உரிய நாள்’ என்றெல்லாம் எண்ணிச் செயலாற்றுவது மூடத்தனமே" இன்னமும் மூடநம்பிக்கையை முனைமழுங்கச் செய்யும் வண்ணம் வெள்ளிக்கிழமையில் நடைபெற்ற கெட்ட செயல்களை நினைவூட்ட பகுத்தறிவு வெளிச்சத்தை படிப்போர் உள்ளத்தில் பாய்ச்சுவதை பாருங்கள்...


- தொடரும்


No comments:

Post a Comment