எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சந்தித்து ‘விடுதலை'யை நடத்தி வழிகாட்டினார் தந்தை பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சந்தித்து ‘விடுதலை'யை நடத்தி வழிகாட்டினார் தந்தை பெரியார்!

‘விடுதலை' விளைச்சல் விழா - காணொலிமூலம் ‘விடுதலை' ஆசிரியர் விளக்கம்சென்னை, ஜூன் 6  எத்தகைய எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சந்தித்து ‘விடுதலை'யை நடத்தி வழிகாட்டினார் தந்தை பெரியார் என்பதை விளக்கி ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் விளக்கி சிறப்புரையாற்றினார்.


கடந்த 1.6.2020 அன்று மாலை  ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி  வருமாறு:


சுதந்திரமான விடுதலையா?


அடிமை விடுதலையா?


சுதந்திரமான ‘விடுதலை' வெளிவரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அடிமை ‘விடு தலை'யாக வரவேண்டும் என்று நினைக் கின்றீர்களா?


மற்ற பத்திரிகைகளுக்கு எப்படியெல்லாம் நட்டம் ஏற்படுகிறது என்பதை விளக்கிவிட்டு,


ஆதலால், இந்த நட்டத்திற்காக நமது கொள் கைகளை விட்டுக் கொடுத்து, அடிமை ‘விடுதலை'யாகி, விளம்பரத்தாலும், செல்வவான்களிடம் நன்கொடை பெறுவதா?


நம்முடைய கொள்கைகளை விட்டுவிட்டால், விளம்பரங்கள் கிடைக்கும். அந்த விளம்பரங்களை வாங்கிப் பத்திரிகை நடத்துவதா? அல்லது செல்வ வான்களிடம், பணக்காரர்களிடம் போய் துண்டேந்து வதைப்போல நன்கொடை பெறுவதா? அல்லது சுதந்திர ‘விடுதலை'யாக இருந்து, எந்தவிதக் கொள் கையையும் விட்டுக் கொடுக்காமல், சகல விஷயங் களையும் உரிமையாக வெளியிடும் உரிமையுடன் நடத்துவதா? என்பதற்காகத்தான் ‘விடுதலை'யை சுதந்திரமாக நடத்தச் செய்கிறீர்களா? அல்லது அடிமை ‘விடுதலை'யாக நடத்த செய்கிறீர்களா? என்று கேட்கிறது ‘விடுதலை'.


இனியும் நம் இயக்கம் வலுக்க வலுக்க, நம்முடைய ‘விடுதலை'க்கு அந்தச் சுதந்திரம் வேண்டியதிருக்கும். அப்பொழுதுதான் நிலையானதும், நேர்மையானது மான நிலையை, பிரயோஜனத்தை திராவிடர்கள் அடையக்கூடும் என்று தெளிவாகச் சொல்லி,


ஆகவே, திராவிட மக்களே ‘விடுதலை'க்கு உதவுங்கள்! ‘விடுதலை'க்கு உதவுங்கள்!! பண முடிப்பு அளியுங்கள்!! என்று தந்தை பெரியார் அந்த அறிக்கையை முடிக்கிறார்கள்.


ஏராளமானோர் உதவி செய்கிறார்கள்.


எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், விடுதலை என்பது இருக்கிறதே, மக்களால், மக்களின் ஆதரவால், தோழர்களுடைய வற்றாத, துவளாத உழைப்பால், இன்றைக்கு இந்தக் கட்டத்தை, வெற்றிகரமாக அடைந்திருக்கிறது.


86 வயதிலும் ‘விடுதலை'க்கு முதுமை தட்டவில்லை; முதிர்ச்சியால் அது மேலோங்கி நிற்கிறது!


ஆகவேதான், 86 வயதிலும் ‘விடுதலை'க்கு முதுமை தட்டவில்லை; முதிர்ச்சியால் அது மேலோங்கி நிற்கிறது. எனவே, இது ஒரு புதிய அணுகுமுறை.


இன்றைக்கு ‘விடுதலை' நாளிதழ் உலகெங்கும் வேகமாகப் போகிறது. ‘விடுதலை' அலுவலகத்திலிருந்து நான் வீட்டிற்கு வருவதற்கு முன்பாக, அமெரிக்காவிலிருக்கும் நண்பர்கள் அன்றைய ‘விடுதலை'யைப் படித்துவிட்டு, தொலைப்பேசியில் அதைப்பற்றி பேசக்கூடிய அளவிற்கு இன்றைக்கு மிக வேகமான அறிவியல் யுகம் வந்துவிட்டது.


பெரியாருடைய சிந்தனையை நாம்


செயலாக்கிக் காட்டியிருக்கிறோம்!


அந்த வகையில், கழகத் துணைத் தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, இனிவரும் உலகம் என்பதை, நாம் இனி வரக்கூடிய உலகமல்ல - இதோ நாங்கள் - தோழர்களே அதனைப் பயன்படுத்திவிட் டோம் என்று பெரியாருடைய சிந்தனையை நாம் அதிலும் செயலாக்கிக் காட்டியிருக்கிறோம்.


‘விடுதலை'யினுடைய மற்ற பயன்களைப்பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆகவேதான், அந்த லட்சியத்தை விட்டுக் கொடுக்கா மல், நாம் எதிர்நீச்சல் அடித்துக்கொண்டு அந்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.


அப்படி செல்லுகின்ற நேரத்தில், எத்தனையோ சங்கடங்கள் உண்டு. பொருள் நட்டம் - அரசாங்கத்தி னுடைய எதிர்ப்புகளைப்பற்றி சொன்னார்கள் - ஜாமீன்  - பிணை - நெருக்கடி காலத்தில் இருந்ததைப் பற்றி சொன்னார்கள் - அவை ஒரு பக்கம்.


இன்னொரு செய்தியை இங்கே உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும்.


‘விடுதலை'யினுடைய பணி என்பது,


ஒரு சமூக விஞ்ஞானியினுடைய பணியாகும்!


அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில், அதற்கு மிகப்பெரிய அறிவு ஆயுதமாக, கருவியாக வந்தபொழுது இன்னொன்றை சொல்கிறார்.


வாசக நேயர்களாகிய நீங்கள் அதனைத் தெரிந்து கொண்டால், பல கோணத்திலும் சிந்திக்க முடியும்.


‘விடுதலை' கடந்த பாதைகளும் - சந்தித்த கொடுமைகளும் - அதே நேரத்தில், அவை எந்தெந்த ரூபத்தில் வந்தன?


அப்படிப் பார்த்தால், நாங்கள் நாளைக்கு இருக் கலாம் - இல்லாமல் போகலாம். ஆனால், ‘விடுதலை' இருக்கும். ‘விடுதலை'யினுடைய பணி என்பது நிச்சயமாகத் தேவைப்படும். எவ்வளவு காலத்திற்கு விஞ்ஞானம் தேவைப்படுமோ - அது அறியாமையைப் போக்குவதற்கு, புதிய புதிய அறியாமைகள் தோன்று கின்ற நேரத்தில், புதுப் புது யுக்திகளோடு விஞ்ஞானம் தன்னுடைய கடமைகளைச் செய்கிறதோ, அதுபோல, ‘விடுதலை'யினுடைய பணி என்பது, ஒரு சமூக விஞ்ஞானியினுடைய பணியாகும்.


அந்த அடிப்படையில் சொல்கின்றபொழுது, ‘விடுதலை' ஏட்டினை, தந்தை பெரியார் அவர்கள், மனக் கஷ்டத்தோடு, எதிர்நீச்சலோடு, ஆளுங்கட்சி யோடு போராடியதோடு, இவை அத்தனையையும் சந்தித்ததோடு மட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு சங்கடத்தையும் சந்தித்தார்கள்.


அத்தனை சங்கடங்களையும் சந்தித்து, இந்த இயக்கம், இந்த ஏடு தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக் கிறது - அதிலே எந்த அலைகளும் இந்த ஏட்டை இழுத்துக் கொண்டு போகவில்லை. போகவும் முடியாது. அதற்காகத்தான் உங்களிடம் பெருமை யோடும், அதேநேரத்தில் நம்பிக்கையூட்டக் கூடிய வகையிலும் இது தெரியவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.


அய்யா சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி சொல்லு கின்ற நேரத்தில், கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறார். பெரியார் பேசுகிறார், அதையும் கேளுங்கள்:


‘‘இதற்கிடையில், எனக்கு ஏற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லை என்னவென்றால், என் தொண் டுக்கு ஆதரவாக சேர்த்து எடுத்து, அணைத்துப் பக்குவப்படுத்தி வந்த தோழர்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு பேரும், பக்குவம் அடைந்தவுடன், விளம்பரம் பெற்று, பொது மக்கள் மதிப்புக்கு ஆளானவுடன், அத்தனை பேரும் எதிரிக்குக் கையாள்களாகவே எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு, எதிரிகளுக்குப் பல வழிகளிலும் பயன்படுகிறவர்களாகிவிட்டதோடு, எனக்கும், எனது தொண்டிற்கும் எதிராக முட்டுக்கட் டையர்களாக பலர் விளங்கவேண்டியவர்களாகி விட்டார்கள்'' என்று சொல்லுகிறார்.


எனவேதான், அவர் எதிரிகளையும் சமாளித்திருக் கிறார்; தன்னால் வளர்க்கப்பட்டவர்களுடைய துரோ கத்தையும் சந்தித்திருக்கிறார்.


எனவே, ஒரு பக்கம் நேரிலே மார்மீது கருவிகள் தாக்கப்படுகின்றன, விழுப்புண். இன்னொரு பக்கம் பின்னால் இருந்து தாக்கப்படக்கூடிய ஒரு சூழல்.


எத்தனையோ பேர்மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.  ‘விடுதலை' அலுவலகத்தையே, அவர் நம்பிக்கை வைத்தவர்களில், பூட்ட வேண்டும்; சீல் வைக்கவேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. அதையும் தாண்டி ‘விடுதலை' வந்திருக்கிறது.


எனவேதான், இந்த வரலாற்றைச் சொல்லுகின்ற பொழுது, இதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.


தந்தை பெரியார் அவர்களுக்கு


சலிப்பே ஏற்பட்டது கிடையாது


வேறொருவராக இருந்திருந்தால், சலிப்படைந்து, அந்தப் பணியை விட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்களுக்கு சலிப்பே ஏற்பட்டது கிடையாது.


அதற்கு ஒரு சமாதானத்தைக் கண்டுபிடிக்கிறார். என்னோடு இருந்தவர்கள் துரோகியாகி விட்டார்கள். இதற்குப் பிறகு எனக்கு ஏன் இந்த வேலை? என்று நினைக்கவில்லை.


அவருக்கு இருந்த முதுமை - அவருக்கு இருந்த நோய்த் தொல்லை - இவையெல்லாம் ஒரு பக்கத்தில் உபாதைகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தான் எடுத்துக்கொண்ட பணியை, அந்த லட்சியப் பயணத்தை, தன்னுடைய விழிகள் மூடுகின்ற வரையில், மற்றவர்களின் விழிகள் திறக்கின்ற வரையில், தன்னுடைய பணிகளைச் செய்யவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், அதற்கு ஒரு விளக்கம் சொல்கிறார்.


அந்த விளக்கத்தை நீங்கள் எல்லாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.


ஏனென்றால், நாளைக்கு எத்தனை சோதனைகள் வேண்டுமானாலும் இயக்கத்திற்கு வரலாம், ‘விடு தலை'க்கு வரலாம். மற்றவைகளுக்கு வரலாம்.


ஆகவேதான், இந்த நேரத்தில் இதை ஒரு பாடமாக நாம் கொள்ளவேண்டும்.


நாம் பாராட்டுவது மட்டுமல்ல, புகழ்ச்சி மட்டுமல்ல, மிக முக்கியமாக இதனை  கவனிக்கவேண்டும்.


பெரியார் பேசுகிறார்:


‘‘பொதுமக்கள் மதிப்புக்கு ஆளானவுடன், அத்தனை பேரும் எதிரிக்குக் கையாள்களாகவே எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு, எதிரிகளுக்குப் பல வழிகளிலும் பயன்படுகிறவர்களாகிவிட்டதோடு, எனக்கும், எனது தொண்டிற்கும் எதிராக முட்டுக் கட்டையர்களாக பலர் விளங்கவேண்டியவர்களாகி விட்டார்கள் - இதற்குக் காரணம் பிரகலாதன், விபீஷணன்போல், நமது ஜாதி பிறவித் தன்மைதான் என்று சொல்லவேண்டியவைகளைத் தவிர, எனது 40 வருடப் பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடியவில்லை. இந்த நிலையில்தான், நான் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வந்துள்ள இன்றைய நிலையில், எனது தொண்டின் பயணம் இருக்கிறது என்றால், என்னைப்பற்றி அறிஞர்கள்தான் விலை மதிக்கவேண்டும்'' என்று முடிக்கிறார்.


அதுதான் ‘விடுதலை'யினுடைய மதிப்பீடாகவும் இருக்கும்.


எனவேதான், நம்முடைய பணி என்பது இருக்கிறதே, இன்னும் நமக்கு நம்பிக்கையூட்டக் கூடிய பணி - முன்பைவிட நாம் நன்றாக வளர்ந் திருக்கிறோம். நல்ல அறிவியல் கருவிகளின் வளர்ச்சியினால், உங்களுடைய ஒத்துழைப்பினாலே, மிகத் தெளிவாக நம்முடைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கருத்தைத்தான் நண்பர் கள் சொல்லி, கலந்துரையாடல்களை காணொலிமூலம் நடத்த ஆரம்பித்தோம். நம்மைப் பார்த்து மற்றவர் களும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.


‘விடுதலை'யின் வேகமான வளர்ச்சி!


ஆகவே நண்பர்களே, ‘விடுதலை'யின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், அறிவியல் அணுகு முறைகளை நாம் கையாண்டு வெற்றி பெற்றிருக்கி றோம். அதேநேரத்தில், ‘விடுதலை'யினுடைய வீச்சு கள் வேகமாகப் பரவியிருக்கின்றன - விளைச்சல் பெருகியிருக்கிறது. மேலும் பெருகவேண்டும்.


எதிர்நீச்சல் அடிப்பதற்கு நாம் என்றைக்கும் தயாராக இருப்போம். என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும், அதற்கு ஆயத்தமாவோம் - அதற்குப் பக்குவப்படுகின்ற, உறுதி எடுத்துக் கொள் கின்ற நாளாக, இந்தப் பிறந்த நாளை ஆக்கிக் கொள் வோம் என்று கேட்டு,


உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றியைத் தெரிவித்து, உங்களுடைய ஒத்துழைப்பை என்றைக்கும் கோரி, என்றைக்கும் உங்கள் தொண் டனாக, தோழனாக இருப்பேன்.


நம்முடைய பயணம் தொடரட்டும்!


என்னுடைய மூச்சு அடங்குகின்ற வரையில், எந்த நம்பிக்கையில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையார் அவர்களும் என்னை அந்த இடத்திலே அமர வைத்தார்களோ, அந்தப் பணியை முழுமையாக செய்துவிட்டேன் என்று நான் நினைக்க வில்லை. என்னுடைய ஆற்றலுக்கேற்ப, நாணயமாக, ஒழுக்கமாக, எந்தவிதமான திறமையின்மை இருக் கலாம் - அதேநேரத்தில், நாணயக் குறைவு இருக்கக் கூடாது என்பதிலே மிக முக்கியமான உறுதி எடுத்துக் கொண்டு, என்னுடைய பயணத்தைத் தொடர்கிறேன். அந்தப் பயணத்திற்கு நீங்கள் எல்லாம் மிக உறுதுணையாக இருப்பதற்காக, மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்து, நம்முடைய பயணம் தொடரட்டும்.


இன்றைய ‘விடுதலை'யில், நான் ஏற்கெனவே சொன்னதை தலையங்கமாக நம்முடைய கவிஞர் அவர்கள் எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.


பெரியாரே நம் ஒளி-


‘விடுதலையே' நம் வழி!


நன்றி, வணக்கம்!


- இவ்வாறு ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment