மதுரை அண்ணாநகரில் முடிதிருத்தகம் நடத்தும் மோகன் - அவர்களது மகள் நேத்ரா. இவர் தனது மகளின் படிப்புச் செலவுக்காக 5 லட்ச ரூபாயைச் சேமித்து, வங்கியில் வைத்திருந்தார்.
நேத்ரா, அந்தப் பணத்தை கரோனாவினால் பாதிக் கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணமாய் வழங்கும்படி தனது தந்தையை வற்புறுத்தினார் (8ஆம் வகுப்பி லிருந்து 9ஆம் வகுப்புக்குச் செல்கிறார் நேத்ரா - இவருக்கு 13 வயது).
இவரது தாராளமான - மனிதநேய கொடைச் சிந்தனையைப் பாராட்டி அய்.நா. மன்றத்தின் ஒரு அங்கமான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வறுமை ஒழிப்புக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதன்மூலம் ஜெனிவாவில் (சுவிட்சர்லாந்து) உள்ள அய்.நா. பிரிவு சபையில் வறுமை ஒழிப்பு பற்றி பேசுவதற்கான கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்திய பிரதமர் மோடி, தனது வானொலி உரையில் நேத்ராவின் பண்பைப் பாராட்டி யுள்ளார்.
இந்த சிறப்பு பெற்ற நேத்ரா, "எனது விருப்பம் என்னவென்றால் ஜாதி, மதம் இல்லா உலகம் உருவாக வேண்டும், எல்லோரும் தங்களது ஆடம்பரங்களை குறைத்துக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்லெண்ணத் தூதராக அய்.நா.வால் நியமிக்கப்பட்ட தனக்கு அவர்கள் தந்த 1 லட்ச ரூபாய் நன்கொடையை நல்ல விஷயத்திற்கு செலவழிப்போம்" என்று கூறியுள்ளார்!
என்னே முதிர்ச்சி, எத்தகைய மனிதநேயம்!
இந்த 'குமரகுருபர'ச் செல்வியின் அறிவுக் கூர்மை மிகவும் வியக்கத்தக்கது என்பது ஒருபுறம் இருந்தாலும், இவர் ஒரு எளிய மிகவும் பிற்படுத்தப்பட்ட முடிதிருத் தும் சமுதாயத்தவரின் மகள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்" (குறள் 997)
எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், மக்களின் தேவை அறிந்து உதவ வருவதுதான் மக்கள் பண்பு என்கிறார் வள்ளுவர்.
அதைப் பிரதிபலிக்கக் கூடிய இந்த ஏழைப் பெண்ணின் உள்ளம் எவ்வளவு விசாலமானது - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானது! தனது கல்விச் செலவுக்கான சேமிப்பு முக்கியமா? அல்லது அல்லற் பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் விடும் ஏழை, எளிய வர்களுக்கு உதவுவது முக்கியமா என்ற ஒரு கேள்வி எழுப்பினால் - பெரும்பாலோர் தங்கள் சுயநலம் சார்ந்தே - "அய்யய்யோ இந்த கரோனா காலத்தில் - அதுவும் 5 லட்ச ரூபாய், குருவி சேர்த்ததுபோல் சேர்த்த தொகையையா செலவிடுவது?" என்றே நினைப்பர் - அது சராசரி மனிதர்களுடைய நினைப்பு!
ஆனால், நண்பர் மோகன் அவர்களின் அன்பு மகள் நேத்ரா - விழிகள் திறக்காதவர்களுக்கும், வழி தெரியாமல் பணத்தைப் பூட்டி வைத்திருக்கும் பல ‘‘சீமான்கள் - சீமாட்டிகளுக்கு'' உதிக்காத மனித நேயத்தோடு துயர் துடைக்க ஓடோடி உதவிட, தனது தந்தைக்கே 'உபதேசம்' செய்த 'குமரகுருபர'ச் செல் வியை உலகமும், பிரதமரும், மற்றவரும் பாராட்டிப் பெருமை சேர்த்தாலும் அது அக்குடும்பத்திற்கு மட்டுமா பெருமை? மதுரைக்கு மட்டுமா பெருமை? தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் தனிப் பெருமையாகும்!
அதன் கொடைச் சிந்தனை, வறுமையைப் போக்கு வதில் ஈத்துவக்கும் இன்பம் என்பதைவிட அவருடைய விருப்பம் என்னவென்று கேட்டவர்களுக்கு அவர் கூறிய பதில் - பொறிதட்டும் வகையில் - சமூக நோய் எதுவோ அதை அந்தப் பிஞ்சு உள்ளமானாலும் முதிர்ச்சியால் முற்றிய பக்குவப்பட்ட சிந்தனையை வெளிப்படுத்தியது!
"ஜாதி, மதம் அற்ற உலகம் வர (காண) வேண்டும்" இதில் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியின் வெளிச்சம் தெரியவில்லையா? தமிழ்நாடு பெண்களை எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!
பெண்களைப் படிக்க வைக்க மறுக்கும் ஜாதி, மத, மனுதர்ம சமுதாயத்தில், இப்படி ஒரு புரட்சி சிந்தனை மொட்டாக மலரும் ஒரு குறிஞ்சி மலருக்கு (பெரியாரின் கொள்ளுப் பேத்திக்கு) நமது வாழ்த்துகள்!
இப்படி வெளியே தெரியாத புதிய இளைஞருலகம் புரட்சியின் பூமராங்காக எங்கெங்கோ நம்மண்ணில் இருக்கவே செய்கின்றன!
வாழ்க, வாழ்க!
நேத்ராவின் பெற்றோர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - பாராட்டுகள். 'குமரகுருபர'ச் செல்வி - இளம் வயதில் ஆசிரியை' - பெற்றோருக்கும் கூட என்பதே பொருள்.
No comments:
Post a Comment