முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் கலைஞர் இலட்சியங்களை நிறைவேற்றி முடிக்க உறுதியினை எடுத்துக் கொள்வோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் கலைஞர் இலட்சியங்களை நிறைவேற்றி முடிக்க உறுதியினை எடுத்துக் கொள்வோம்!

“பிரமிப்பூட்டும் சாதனை நாயகரான தலைவர் கலைஞர் தம் புகழ் அத்தியாயங் களையும் நினைவூட்டி, அவர்விட்டுச் சென்ற இலட்சியங்களை எள்ளளவும் பிறழாமல் செய்து முடிக்க உறுதி ஏற்போம்!” என்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத்தேர்தலில் போட்டியிட்ட13 முறை யும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப் பினராகவும், சட்ட மேலவை உறுப்பின ராகவும் ஆற்றிய அளப்பரிய பணிகளின் காரணமாக தொண்டால் பொழுதளந்து பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனை வரும் பார்த்துப் படித்துப் பயிற்சி பெற்றுப் பின்பற்ற வேண்டிய அரசியல் பண்பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்கிறார். தமிழகத் திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் எண் ணற்ற முற்போக்குச் சட்டங்களையும் முன் னோடித் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து, அரசு நிர்வாக வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் ஏற்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார். பொதுப் போக்கு வரத்து நாட்டுடைமை, இலவச நிலம் குடி யிருப்பு மனைப் பட்டா. உள்ளிட்ட நிலச் சீர் திருத்தம், கல்வி வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி அடிப்படைக் கட்டமைப்பு விவ சாயிகளின் நலனுக்காக முதன் முதலில் சட்டமன்றத்தில் நங்கவரம் பிரச்சினை பற்றிய கன்னிப் பேச்சு தொடங்கி முதல மைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விவசாயி கள் வேளாண்மை முன்னேற்றத்திற்குக் கையெழுத்திட்ட மகத்தான திட்டங்கள் வரையிலான தலைவர் கலைஞர் அவர் களின் பிரமிப்பூட்டும் சாதனைப் பட்டியலை எடுத்துரைப்பதற்கு ஏடுகள் போதாது.

கைரிக்சா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இல வச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயி களுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப் புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள், சென்னையில் உலகத் தலைவர்கள் பார்த்து வியந்த சர்வதேசத் தரத்திலான ஆசியாவின் மிகப்பெரிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என தலைவர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலங்களில் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கும் நகரங்களின் முழுமையான கட்டமைப்பு வசதிகளுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். 

பெரியார் நினைவு சமத்துவபுரம் கண்ட கலைஞர்

தமிழகத்தில் முதன் முதலில் சட்டநாதன் கமிஷன் அமைத்து சமூகநீதிக்கு அசைக்க முடியாத அடித்தளம் ஏற்படுத்தி, தொடர்ந்து காலந்தோறும் உரிய பலன்கள் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததி இன மக்களுக்கான இடஒதுக்கீடுகளை அளித்து அவர் தம் சமூக பொருளாதார முன்னேற் றத்திற்காக இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்ட சமூகநீதிப் போராளி தலைவர் கலைஞர் அவர்கள், அதுபோலவே சிறு பான்மையினர் நலன் காக்கும் திட்டங் களையும், வேலைவாய்ப்புகளில் அவர்க ளுக்குரிய இட ஒதுக்கீட்டையும் தந்தவர் தலைவர் கலைஞர், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சமூக நீதிக் காவலரும், மேனாள் பிரதமருமான திரு.வி.பி.சிங் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்ற துணையாக நின்றவர், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்து நல்லிணக்கமும், சமத்துவமும் காண பெரியார் நினைவு சமத்துவ புரங்களை அமைத்தவர். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த 

நெருஞ்சி முள்ளை அகற்றிடும் வகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றி தன் வாழ் நாளிலேயே அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற முதல் அர்ச்சகர் நியமனத்தைக் கண்டு களித்தவர். பொடாவாக இருந்தாலும், தடா வாக இருந்தாலும் அடக்குமுறைச் சட்டங் களைத் தீவிரமாக எதிர்த்து, மதச்சார்பற்ற சமுதாயக் கட்டமைப்பைக் காத்து நாட்டின் பன்முகத்தன்மை இடையூறின்றிக் காப் பாற்றப்பட தன் வாழ்நாள் முழுவதும் விழிப்புடனிருந்து உழைத்தவர். அரசியல் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, ஜனநாயகத்தின் அடிப்படை நெறிகளான எழுத்துரிமை, பேச்சுரிமை, போராட்டம் நடத்தும் உரிமை என்று முழுமையான சுதந்திரத்தை அனைத்துத் தரப்பு மக்க ளுக்கும் வழங்கிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். நாட்டின் நெருக்கடி நிலையை எதிர்த்துத் தீர்மானம் நிறை வேற்றிய முதலமைச்சர் இந்தியாவிலேயே தலைவர் கலைஞர் ஒருவர் மட்டுமே; அதற்கான விலையாக ஆட்சியையே பறி கொடுத்தவர், ஆனால் நெஞ்சுக்கு நீதியாக நினைத்துப் போற்றிய தமது கொள்கையை நெருக்கடியிலும் முன்னெடுத்தார் என்று தமிழகம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தி யாவே ஏன், உலகமே வியந்தது. 

ராஜ மன்னார் குழு!

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம் சங்களில் ஒன்றான கூட்டாட்சித் தத்து வத்தை நிலைநாட்ட ராஜமன்னார் குழு அமைத்து மாநில சுயாட்சி முழக்கத்தை முதலில் எழுப்பியவர். தமிழக சட்டமன் றத்தில் அதற்காக முதன் முதலில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியவர். தொலை நோக்குச் சிந்தனையுடன் தலைவர் கலைஞர் அவர்கள் “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்று உருவாக்கிய உரிமை முழக்கம், இன்றைக்கு இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது.

மாநில முதலமைச்சர் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர் கள் பொதுவாழ்வில் ஊழலை ஒழித்து தூய்மையையும் நேர்மையையும் நிலை நாட்டிட வார்டு கவுன்சிலர் முதல் முதல மைச்சர் வரை அனைவரையும் விசார ணைக்கு உட்படுத்த மாநில அளவில் ஒரு சட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.

பெண்ணுரிமை, மகளிர் நலன் போற்றிய தலைவர் கலைஞர் அவர்கள், பெண்க ளுக்குத் திருமண உதவித் திட்டம், மகப் பேறு உதவித்திட்டம், விதவைப் பெண்கள் மறுவாழ்வுத் திட்டம், மகளிர்க்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம், பொரு ளாதார சுதந்திரம் பெற்று, சுயச்சார்பும் தன் னம்பிக்கையும் வளர வேண்டும் என்ப தற்காக முதன் முதலில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு கிடைக்கும் வகையில் புரட்சிகர மான சொத்துரிமைச் சட்டம் உள்ளிட்ட வற்றை  இயற்றி, பெண் விடுதலை போற்றும் பெருமைமிக்கவராகத் தலைவர் கலைஞர் அவர்கள் திகழ்ந்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த தொழிலாளர் நலத் திட்டங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரி யங்கள் ஆகியவை முன்மாதிரியானவை மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. காவல் துறையினருக்கு மூன்று முறை போலீஸ் கமிஷன்களை அமைத்து பயன் தரும் நல்ல பலத் திட்டங்களை நிறை வேற்றிக் கொடுத்தவர். அரசு ஊழியர்களின் ரகசியப் பதிவேட்டு முறையை ஒழித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அரசு நிர்வாகத்தின் அசைக்க முடியாத தூண்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் முக்கியமானவர்கள் என்ற சீரிய எண்ணத்துடன் செயல்பட்டவர். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட் சியில் கொண்டுவரப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தமிழ்நாட்டை குடிசைகளே இல் லாத மாநிலமாக்கும் வகையில் கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், ஏழை மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் இலவசத் திட்டங்களாக, நாட்டின் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் நல்வழிகாட்டும் திட் டங்களாக அமைந்திருக்கின்றன. 

தமிழுக்கு செம்மொழி தகுதி!

அன்னைத் தமிழை அரியணை ஏற்றும் அனைத்து முயற்சிகளையும் தன் உயிர் மூச்சாகக் கருதியவர், சென்னை மாநக ரத்தை மெட்ராஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, எல்லா மொழிகளிலும் சென்னை என செந்தமிழில் சொல்லும்படி மாற்றியவர் தலைவர் கலைஞர். பள்ளிகளில் கட்டாயத் தமிழ்கல்வி, தமிழில் பொறியியல் பட்டப் படிப்பு, தமிழறிஞர்களுக்கு விருதுகள், சலுகைகள் தமிழ் நூல்கள் நாட்டுடைமை, உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியது சென்னையில் வள்ளுவர் கோட்டம், சூழும் தென்கடல் ஆடும் குமரியில் 133 அடி உயரத்தில் விண்ணுயர அய்யன் திருவள்ளுவர் சிலை என்று கோட்டம் முதல் குமரி வரை தமிழ் மொழிக்காகவும், தமிழினத்திற்காகவும் காலம் முழுவதும் உறுதியுடன் நின்ற தலைவர் கலைஞர் அவர்கள், தமிழுக்கு செம்மொழி தகுதியை அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசிடம் திருமதி சோனியா காந்தி அம்மையார் மூலமாக பெற்றுத் தந்தது வரலாற்றில் பொன் னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைச் சரித்திரம்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திய வரும், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவரும் அவரே! தமிழன்னைக்கு மனம் கனிந்த முதல் மரியாதை அளித்திடும் வகையில், அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையம் விழாக்களில் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த் தாக இடம்பெறச் செய்தவரும் கலைஞர் தான், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனவும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கைக் கடைப்பிடிக்கவும் வழியமைத்து பிறமொழி பண்பாட்டு மேலா திக்கத்திலிருந்து தமிழ்ப்பண்பாட்டை மீட் டெடுத்துக் காத்தவர் தலைவர் கலைஞர்! 

தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பொறித்தவர்!

மாபெரும் அரசியல் தலைவரான கலைஞர் அவர்கள், பன்முகத்திறன் கொண்ட ஆற்றலாளர் ஆவார். எழுத்தா ளர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர், பத்திரிகையாளர், கவிஞர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை, வசனகர்த்தா, திரை இசைப் பாடலாசிரியர் எனத் தான் தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர். 

தன் படைப்புத் திறமை வாயிலாக திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூகநீதி ஆகிய வற்றை மக்களின் மனங்களில் நிலைபெறச் செய்தவர். அவருடைய பராசக்தி திரைப் பட உரையாடல்கள் திரைத்துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தி, பாமரர்களி டமும் பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டு சேர்த்தன, மந்திரிகுமாரி, மனோ கரா, மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன், ராஜா ராணி, பணம், பூம்புகார், மறக்க முடியுமா, புதையல், இருவர் உள்ளம், காஞ்சித் தலைவன், பாலைவனரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை, பாசப்பறவைகள், பொன்னர் சங்கர், பெண் சிங்கம், இளைஞன் என அவர் பங்களிப்பில் உருவான 75க்கும்மேற்பட்ட திரைப்படங்களும் கொள்கை முழக்கங்களாகவே அமைந்தன. 

திராவிட இயக்கத்தின் படைக்கலன்கள்!

எழுத்துத்துறையில் அவர் தமது பேனா முனையினால் செதுக்கிய சிற்பங்கள் ஈடு இணையற்றவை. உலகத்தரத்திலான சிறுக தைகளையும் புதினங்களையும் தமிழில் தந்த தலைவர் கலைஞர், தமிழ் மொழியின் பெருமை கூறும் பழந்தமிழ் இலக்கியங்கள் புதுநடையில் தந்தவர். குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை அவற்றுக்கான சான்றுகளாகும் உலகம் போற்றும் ரஷ்யப் புரட்சி இலக்கியமான மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலைத் தமிழில் கவிதை நடையில் தந்த வர் தலைவர் கலைஞர். இலட்சிய முழக் கமிட்ட அவருடைய பிரச்சார நாடகங்கள் திராவிட இயக்கத்தின் படைக்கலன்கள், தொலைக்காட்சி எனும் ஒளி ஊடகத்தையும் விட்டுவைக்காமல் அதனையும் பயன் படுத்தி தென்பாண்டிச் சிங்கம் மற்றும் மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுஜர் போன்ற தொடர் காவியங்களையும் படைத் தளித்தார் தலைவர் கலைஞர்.

இதழியல் துறையில் தலைவர் கலைஞர் பதித்த காலச்சுவடுகள் தனித்துவமானவை பள்ளிப் பருவத்திலேயே மாணவர் நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய தலைவர் கலைஞர் அவர்கள் 1942 இல் முரசொலி இதழைத் தொடங்கினார். துண்டு வெளியீடாக ஆரம்பித்து, வார இதழ், நாளிதழ் என வளர்ந்து 76ஆம் ஆண்டாக இன்னமும் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. பத்திரிகையுலக வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலம் தொடர்ச்சியாக ஒரு பத்திரிகையைப் பொறுப்பேற்று நடத்தியது மாபெரும் சாதனையாகும். தொண்டர்களுடன் உரை யாடும் வகையிலான உடன்பிறப்பு கடிதங் கள், அறிக்கைகள், பேச்சுகள், கவிதைகள் கார்ட்டூன்கள் என முரசொலியில் தலைவர் கலைஞர் அவர்கள் வெளிப்படுத்திய பன் முக எழுத்தாற்றலும், நெருக்கடி நிலைக் காலத்தில் பத்திரிகைத் தணிக்கை முறை இருந்தபோதும், செய்திகளை அவர் வெளி யிட்ட இலாவகமும் இன்றைய ஊடகத் துறையினர் பாராட்டிப் பின்பற்ற வேண்டிய இதழியல் பாடங்கள். தனது மூத்த பிள்ளை யாகக் கருதிய முரசொலியில் அவர் தொடர்ச்சியாக எழுதியதுடன் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் கதை, கவிதை, நேர்காணல் என ஓடிக்கொண்டே இருக்கும் வற்றாத நதியாக அரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார். 

தொழில் வளர்ச்சித்திட்டங்கள்!

சேலம் உருக்காலைத் திட்டம், சேது சமுத்திரத்திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிப்காட் முதல் தொழில் வளாகம் உருவாக்கம், சிறப்புப் பொருளா தார மண்டல் உருவாக்கம், சென்னை - தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரை யிலும் எண்ணற்ற தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தொழில்வளச்சாலை அமைத்து தொழில் முன்னேற்றத்திற்காகவும் பொரு ளாதார வளர்ச்சிக்காகவும் வேலை வாய்ப் பிற்காகவும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற் படுத்திச் செயல்பட்ட ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் தான்,

இளமைப் பருவத்திலேயே காவிரி நீரைப் பருகி காவிரி தீரத்தின் மைந்தனாக வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதை முதன் முதலில் வலியுறுத்தியவர், வழக்காடியவர், வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன் றத்தை அமைக்கச் செய்து, அதன் இடைக் காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர். தன் இறுதிக்காலம் வரை காவிரி உரிமைகளைக் காக்கும் போராட் டத்தைத் தொடர்ந்தவர். அதுபோலவே முல்லைப்பெரியாறு அணையின் உய ரத்தை 142 அடியாக உயர்த்துவதில் சட்ட ரீதியான வெற்றிக்குப் பெரிதும் பாடுபட்ட வர். கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் குடி நீராகக் கிடைத்திடச் செய்ய உழைத்தவர். கடல்நீரை நன்னீராக மாற்றி குடிநீராகப் பயன்படுத்தும் திட்டங்களை கொண்டு வந்தவர். தமிழ்நாட்டின் நீர்வளத்தைப் பெருக்கி, பாசனப் பரப்பளவை அதி கரித்திட 30க்கும் மேற்பட்ட அணைகள் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு ஆறுகளைத் தூர்வாரும் பணியைச் செம்மைப்படுத்திச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமின்றி ஒகேனக்கல் உள் ளிட்ட மெகா கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், மாநில அளவில் நதிகள் இணைப்புத் திட்டங்கள் என நீர் மேலாண்மையை சிறப் பாகக் கடைப்பிடித்தவர் தலைவர் கலை ஞர். 

புதிய பல்கலைக்கழகங்கள்

சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மேம் பாலங்கள், நெடுஞ்சாலைகள், வகுத்துச் செயல்படுத்திய தொழிற் கொள்கைகள், தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர் காட் டிய ஆழ்ந்த அக்கறை எல்லாம் மாநிலத்தின் உட்கட்டமைப்பை உயர்த்திய அணிகளாக அமைந்ததைப் பார்க்க முடியும். நகர்புறங் களில் மட்டுமே கல்லூரிகள் என்றிருந்த நிலையை மாற்றி கிராமப்புறங்களிலும் கலை அறிவியல் கல்லூரிகளை உருவாக் கியது புதிய புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்கியது, மாவட்டந்தோறும் மருத்து வக் கல்லூரிகளை அமைத்தது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகையுடன் தொழிற் படிப்புகளில் இடம ளித்தது, பள்ளிகளில் கணினிக் கல்வி, சமச் சீர் கல்வி, இணையப் பயன்பாட்டிற்கேற்ற வகையில், சீரிளமைத் தமிழ் மொழி சிறந்து விளங்க, கணினி இணைய மாநாடுகள் நடத்தி அவற்றின் முடிவுகளைச் செயல் படுத்தி இளைய தலைமுறையினர் நானோ தொழில் நுட்பங்களில் தமிழைப் பயன் படுத்தி வாழ்வில் உயர்ந்திடத் துணை நின்றது, உள்ளிட்ட எண்ணற்ற திட்டங் களை உருவாக்கி ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தலைவர்கலைஞர் அவர் களின் ஆட்சியில் முற்பட்ட முன்னேற்ற மான மாற்றங்கள் இன்றைய வளர்ச்சிக்கு படிக்கட்டுகளாக இருக்கின்றன.

அண்ணல் அம்பேத்கர் வழி நின்று....

திருநங்கைகள் எனப் பெயர் சூட்டி மாற்றுப் பாலினத்தவரின் நலன் காத்தது, தொழுநோயாளிகள், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மய்யங்களை உருவாக்கியது, மனிதக் கழிவை மனிதனே அகற்றிச் சுமக் கும் கொடுமையை நீக்கச் சட்டம் இயற்றி யது என சமூகத்தில் யாரெல்லாம் பள்ளத் தில் வீழ்ந்து ஒடுங்கிக் கிடக்கிறார்களோ, ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார்களோ, அவர்களையெல்லாம் அண்ணல் அம் பேத்கர் வழி நின்று கைதூக்கி விடுவதற்கு சமூக நீதிக்கரத்தை நீட்டி அவர்களின் தன்மானம் சுயமரியாதையைக் காத்தவர்.

தாய்த் தமிழகத்தில் மட்டுமின்றி இந் தியாவின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கும், அரணாக விளங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். குறிப்பாக, ஈழத்தமிழர் துயர்துடைக்கவும் அவர்களின் உரிமையை நிலைநாட்டவும், 1966 முதலே குரல் கொடுத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள், ஈழத்தமிழர் உரிமைக்காகப் பல போராட்டங்கள் கண்டு சிறை சென்றவர், டெசோ அமைப்பின் மூலம் ஈழத்தமிழர் விடுதலைக் குரலை இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் எதிரொலித்திடச் செய்தவர். தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காகத் தனது சட்டமன்ற உறுப் பினர் பதவியை ராஜினாமா செய்தவர். ஈழத்தமிழர்களுக்கு பேராதரவாளர் என் பதற்காக, தலைவர் கலைஞர் தலைமை யிலான கழக ஆட்சி இனத் துரோகச் சூழ்ச்சியினால் கொல்லைப்புற வழியாக கலைக்கப்பட்டது அதன் பிறகும், ஈழத் தமிழர் உரிமைக்கான அவரது குரல் தீர்த் துடன் தொடர்ந்து ஓங்கி ஒலித்தது. 

வறுமைக்கோட்டுக்கு கீழான மக்களை கை தூக்கி விட்டவர்!

தலைவர் கலைஞர் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கான நலத் திட்டங்களின் நாயகர், ஜனநாயகத்தின் கண்ண யராக் காவலர், கூட்டாட்சித் தத்து வத்தின் மூலவர், மத்திய மாநில உறவுகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் மக்கள் தலைவர். சமூகநீதி சாதனையின் தன்னேரிலாச் சரித்திரம் அனைத்துத் தரப்பினரும் பயன் பெறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய சிந்தனைத் திறன்மிக்க செயல்பாட்டாளர், தேசிய அரசியலில் பெண் ஒருவரும் (பிர தீபா பாட்டில்) தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த ஒருவரும்(கே.ஆர்.நாராய ணன்), பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் (ஜெயில்சிங்) குடியரசுத் தலைவர்களாகப் பொறுப்பேற்கப் பாடு பட்டவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர் (மீராகுமார்) மக்களவை சபாநாயகராக வர உறுதுணையாக நின்ற வர். நாட்டின் பாதுகாப்பிற்கு சீனப் போர் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் வந்தபோதெல் லாம், நாட்டின் ஒருமைப்பாட்டின் பக்கம் உறுதியாக நின்று மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு கொடுத்த தேசாபிமானி. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் கலைஞர் உறுதியாக இருப்பார் என்று இந்திய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சிறப்பான, தொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொடுத்து, மாநிலக் கட்சித் தலைவராக இருந்தாலும், தேசிய அரசியலில் உரிய முக்கியத்துவம் பெற்று விளங்கியவர். மத்தியில் கூட்டணி அரசுகளை உருவாக்கி மாநிலங்களின் உரிமைக்குரல் வலிமையாக ஒலிக்கவும் அடிப்படைக்காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் விரிவான தேர்தல் கூட்டணிகளை அமைத்து திரா விடப் பேரியக்கத்தின் அரசியல் ஆசானாக விளங்கியவர். பாராளுமன்ற ஜனநாயகத் தின் பிதாமகனாக விளங்கிய தலைவர் கலைஞர் அவரர்களின் சட்டமன்ற காலம் தான் ஜனநாயத்திற்கும், கருத்துரிமை அடிப்படையிலாக ஆக்கபூர்வமான விவா தங்களுக்கும் பொற்காலம், நிர்வாகத்திறன் மற்றும் தலைமைப் பண்பு மிகுதியாகப் பெற்ற பேராளுமை அவர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கருதி அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை மட்டுமல்லாமல், மாற்றுக் கருத்து உடையோரையும் மனமுவந்து வரவேற்று மதித்துச் செயல்படுவது. கனிவு, துணிவு, பணிவு, போன்ற உயர்ந்த குண நலன்களுக்கு இலக்கணமாகவும் இலக்கிய மாகவும் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டையும் இந்தியாவை யும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளையும் கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டு மறைந்து விட்டார் என்பதை கழகத்தின் தலைமைச் செயற்குழு மிகவும் கனத்த இதயத்துடனும், கண்ணீர்ப் பெருக்குடனும் பதிவு செய்கிறது.

(விடுதலை 14.8.2018)

திமுக தலைமை இலக்கிய அணி பொருளாளர் அரிமா  டாக்டர்  நா.சந்திரபாபு 

தொகுத்த நூலிலிருந்து...


No comments:

Post a Comment