ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் பூமி பூஜை நிலையினைப் பற்றி பேசிய துணிச்சலான பேச்சு மற்ற மற்ற நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் களுக்குப்  பாடமாக அமையும் அல்லவா?

- இராசு. மணி, காட்பாடி.

பதில்: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள், அவர் சார்ந்த இயக்கம் மதச்சார்பின்மைக் கூட்டணி இயக்கம் என்பதாலும், அவர் அறிவியல் படித்த டாக்டர் என்பதை ஒட்டியும், சரியான வழியில் செயல்படுகிறார் - அய்யா, அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் வழியில், அதை மற்ற எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் பின்பற்றினால் கொள்கை இயக்கமாக தி.மு.க. பொலிவுறும். இன எதிரிகள் குலை நடுங்குவர்.

- - - - -

கேள்வி: தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி என்ற நிலையை உருவாக்க தமிழ்நாடு அரசு அதற்குரிய அரசாணை வெளியிட ஆவன செய்யுமா?

 - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம். 

பதில்: சட்டச் சிக்கல்களையும் ஆராய்ந்து இதனை சிறப்பாக எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்ய  நிச்சயம் ‘திராவிட மாடல்’ அரசு ஒருபோதும் தவறாது.

முன்பே பல பாதுகாப்பு அரண்கள் - அகழிகள் உள்ளன. என்றாலும், அவை போதாது என்பதை அண்மைக்கால நெய்வேலி நிறுவன நியமனங்கள் காட்டுகின்றன.

- - - - -

கேள்வி: 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் என்று கொக்கரித்தார்களே, இன்று 5ஜி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போயிருக்கிறதே, இது எதைக் காட்டுகிறது?

- மா. சித்ராமுகில், தூத்துக்குடி

பதில்: ஒரு முழக் கயிறு பரிசளியுங்கள் அந்த கோய பல்சின் குருநாதர்களுக்கு, மானத்தையும், அறிவையும் அடகு வைத்த அடாவடி அரசியல் கழிசடைகள் பாடங் கற்பார்களாக!

‘‘ராசா கையை வைச்சார்; எனவே, அது ராங்கா போவதில்லை!’’

- - - - -

கேள்வி:  பழைமைவாதங்களைப் புறந்தள்ளி மாண வர்கள் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அண்ணா பல்கலைக்கழக விழாவில் பேசியது கையொலி எழுப்பி வரவேற்க வேண்டிய விடயம் அல்லவா?

- சீதாலட்சுமி,  தாம்பரம்.

பதில்: அதில், பெரியார் - அண்ணா - கலைஞர் - சுய மரியாதை - பகுத்தறிவு அனைத்தும் அதிக ஒளியுடன் தெரிகிறார்கள்! பாராட்டப்பட வேண்டிய உரை அது.

- - - - -

கேள்வி: அரியலூரில் நடைபெற்ற இளைஞர் அணி மாநில மாநாட்டில் 89 வயதில் 29 வயது இளைஞராக அரிமாவென எழுச்சி உரை ஆற்றினீர்கள். இவை யெல்லாம்  தங்களால் எப்படி சாத்தியப்படுகிறது?  

 - எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்: உங்களைப் போன்றவர்கள் காட்டும், ஊட்டும் உற்சாகத்தின் காரணமாகவே! 95 ஆம் வயதிலும் இளைஞராக உழைத்த நம் அறிவாசானின் வழியில் செயல்படுவதால்!

- - - - -

கேள்வி: அரியலூர் மாநாட்டில் யோகா நிகழ்ச்சிகள் தமிழ் வழியில் சிறப்பாக செய்யப்பட்டதே - அதனை தங்களது இயக்கத்தவர்களும் பின்பற்ற அறிவுறுத்து வீர்களா?

- ம.ரங்கசாமி, மண்ணச்சநல்லூர்

பதில்: அதுபற்றி தெளிவான புரிதலும், மீட்டுருவாக்க பிரச்சாரமும், செய்முறையும் பரவ நிச்சயம் ஏற்பாடு செய்வோம்!

- - - - -

கேள்வி:   தங்களின் 60 ஆண்டுகால ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியர் பணியில், ஏன் நாம் இந்தப் பணிக்கு வந்தோம் என்ற சலிப்பு ஏற்பட்டது உண்டா?

- பா.முகிலன், சென்னை-14.

பதில்: ஏற்பட்டதே இல்லை; இன்னும் நாம் வேகமாகவும் செல்லவேண்டும் என்பதுபோல ஒரு உணர்வு; நமது ஏடு வீடுதோறும் சென்றால், அனை வரும் படித்தால் அறிவு வெள்ளம் பாய்ந்தோடும் என்ற ஆசையே எப்போதும் நமக்கு!

- - - - -

கேள்வி: பெரியார் சமூகக் காப்பு அணி சிறந்த மிடுக்குடன், ராணுவத்தைப் போன்று ஊர்வலத்தில்  அணிவகுத்து வந்தது சிறப்பாக இருந்ததே, அவர்கள் முறையாகப் பயிற்சி பெற்றவர்களா? அல்லது மாநாட்டிற்காக பயிற்சி பெற்றவர்களா?

- கா.கண்ணன், கவுந்தப்பாடி

பதில்: ஆம்! முறையான பயிற்சியைப் பெற்று மேலும் மேலும் மெருகேற்றிக் கொள்ளத் தயங்காத தன்னலமறுத்த தோழர்கள்!

- - - - -

கேள்வி: தந்தைபெரியார் நினைவிடத்தில் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா வருகை- நாடு தழுவிய அளவில் சமூகநீதிக்கான ஒருங்கிணைப் பின் முத்தாய்ப்பான வெற்றிதானே?

- ச.அருள்செல்வன், பெண்ணாடம்

பதில்: ஒரு தொடக்கம் அது. சமூகநீதிக் கூட்டணிக் கான ஒரு முன்னோடிப் பணியாக அமைந்தால், வெகு சிறப்பு!

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் கொடையாக சமச்சீர் கல்வித்திட்டம் இருக்கும்போது 

சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகள் தேவைதானா?

- வி.முகில்மொழி, செஞ்சி

பதில்: இந்தக் கேள்விக்குரியதை - கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திருப்பிய பின்னரே நடை முறைப்படுத்த அரசமைப்புச் சட்ட ரீதியாக முடியும்.

அதற்குரிய காலம் கனியும்;
கனிய வைப்போம்!

No comments:

Post a Comment