காந்தியார் கொலையில் மொழியும் உண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

காந்தியார் கொலையில் மொழியும் உண்டு!

"கோட்சேயின் வாரிசுகளுக்கு நேருவைப் பற்றியெல்லாம் தெரியாது” என்று குறிப்பிட்டு எழுத்தாளர் கோபண்ணா நேரு குறித்து எழுதிய நூல் வெளியீட்டு, விழாவில் முதலமைச்சர் தெறிக்க விட்டிருக்கிறார்.

இந்த மாதிரியான அடித்தாடல் களைத்தான் இன்னும் பேரதிகமாய் முதலமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

அதே நேரம் கோட்சே யார் என்பதை நாமாவது முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோட்சே காந்தியைக் கொன்றவன் என்று நாம் சிறு குழந்தையாக இருந்தபோது நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

கொஞ்சம் வளர்ந்தபிறகு கோட்சே ஓர் ஆர்.எஸ்.எஸ். ஆள் என்று நம்மால்  புரிந்துகொள்ள முடிந்தது.

இன்னும் கொஞ்சம் கூடுதலாய் வளர்ந்திருக்கிறோம் என்பதாக நம்மைப்பற்றி நாமே உணரத் தொடங்கியபோது,

1) காந்தியார் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும்

2) இந்தியாவின் பணம், அதாவது இந்துக்களின் பணம் 55 கோடியை பிடிவாதமாக பாகிஸ்தானுக்கு வாங்கிக் கொடுத்தவர் அவர் என்பதாகவும் கோட்சே கருதியதால் அவன் காந்தியைக் கொன்றதாகப் புரிந்து கொண்டோம்.

சன்னம் சன்னமாக கோட்சேவை “தேசத் தந்தை” என்கிற நிலைக்கு வரலாற்றைத் திரித்து நமது பேரக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்  முயற்சியில் கோட்சேயின் வாரிசுகள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தங்களை கோட்சேவோடு பொருத்தி அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் பயந்தார்கள். இன்றோ தங்களை கோட்சேவின் வாரிசுகள் என்று ஒருவிதத் திமிரோடு அவர்கள் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.

எங்கிருந்து வந்தது இந்தத் திமிரும் தைரியமும் அவர்களுக்கு?

யாரந்த கோட்சே? 

கோட்சே ஒரு நுட்பமான பத்திரிக்கையாளன்.

சவார்கரின் ஆதரவோடு அவன் நடத்தி வந்த “அக்ரானி” என்ற இதழ் மதவெறுப்பை விதைப்பதாக தடைசெய்யப்படுகிறது. இரண்டே வாரங்களுக்குள்ளாக “இந்து ராஷ்ட்ரா” என்ற இதழைத் தொடங்குமளவிற்கு விவரமானவன்.

01.11.1947 அன்று தான் ஆசிரியராக இருந்த “இந்துராஷ்ட்ரா” இதழின் பங்குதாரர்கள் கூட்டத்தில்.

தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்கமுடியும் என்று கூறிவந்த காந்தி, இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டபிறகும் உயிரோடு இருப்பதாக மிகுந்த விசனத்தோடு அவன் பேசியதை தனது “கோட்சேயின் குருமார்கள்” நூலில் தோழர் அருணன் வைத்திருக்கிறார்.

காந்திக்கு இயற்கையான மரணம் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற வெறி தனக்கு ஏற்பட்டதாக தனது வாக்குமூலத்தில் அவன் கூறுகிறான்.

இயற்கையான மரணம் அந்தக் கிழவருக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்ற வெறி அவனுக்கு ஏற்பட, 

1) இஸ்லாமியர்களுக்கு அவர் சாதகமாக செயல்பட்டதும்

2) 55 கோடி ரூபாயை அவர் பாகிஸ்தானுக்கு வாங்கிக் கொடுத்ததும்

காரணங்கள் என்ற பொது அபிப்பிராயத்தோடு நாம் நகர்ந்துவிடக் கூடாது.

இவை எல்லாம் இருந்தனதான். இவை குறித்தும் ஏராளம் பேசப்பட வேண்டியவையும்தான்.

ஆனால்,

1) காந்தியின் கொலைக்கான காரணங்களில் ஹிந்தியும் உண்டு என்பது கண்டு கொள்ளப்படவே இல்லை என்பதும்

2) அது கண்டுகொள்ளப்படவும், கொண்டு செல்லப்படவும் வேண்டும் என்பதும்  மிக முக்கியம்.

இத்தனைக்கும், தாய்மொழிகளின்மீது காந்திக்கு அபிப்பிராயம் இருந்தது என்றாலும் தேசிய மொழி விசயத்தில் அவருக்கும் - அவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிதான வேறுபாடுகளை நம்மால் காண இயலவில்லை

“தேசிய மொழியாக ஹிந்திக்கு பதிலாக இஸ்லாமியர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துஸ்தானியை முன்னெடுத்தார் காந்தி”

என்பதை காந்தியைக் கொன்றதற்கான காரணங்களுள் ஒன்றாக தனது வாக்கு மூலத்தில் கோட்சே கூறியதையும் ”கோட்சேயின் குருமார்கள்” நூலில் தோழர் அருணன் எடுத்து வைக்கிறார்.

தேசிய மொழியாக இந்துஸ்தானியை காந்தி ஒரு காலத்தில் முன்னெடுத்தது உண்மைதான்.

அப்போதும் அதைத் தமிழர்கள் ஏற்க மறுத்ததும், அதுகுறித்து ஒருமுறை கேட்கப்பட்டபோது ‘அது சிறுபான்மையினரின் கொடுங்கோன்மை’ என்று காந்தி கூறியதும் வரலாறு.

இந்துஸ்தானி, இந்து - இஸ்லாமியர்களை ஒற்றுமைப்படுத்த உதவும் என்று காந்திக்கு நம்பிக்கை இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் அதை தேசிய மொழியாக்க விரும்பினார் என்றும் தோழர் அரண் தனது “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஹிந்தி பேரினவாதம்” என்ற நூலில் வைத்திருப்பதை நான் எனது “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்.

பேச்சு வழக்கில் உள்ள மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது தேசத் துரோகம். அனைத்து கிளை மொழிகளும் இந்துஸ்தானி என்ற சமுத்திரத்தில் கலந்துவிட வேண்டும் என்று கூறிய காந்தியாரின் மீது நமக்குள்ள கோபம் என்பது வேறு.

அனைத்து மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற ஜனநாயகப் பார்வை காந்திக்கு இல்லையே என்பது அவர்மீதான நமது கோபம்.

ஹிந்திக்குப் பதிலாக இந்துஸ்தானியை காந்தி முன்னெடுப்பது இந்தியாவை மதச்சார்பற்றதாக்கும் முயற்சி என்பதால் அவரை கொல்லும் அளவிற்கு அவனைக் கொண்டு சென்றது என்பதும் கோட்சேயின் கோபம்.

ஹிந்திக்குப் பதிலாக இந்துஸ்தானியில் நின்ற காந்தி அவர்களின் எதிர்ப்பிற்கு அஞ்சியோ அல்லது இதில் பெரிதாக முரண்படத் தேவை இல்லை என்று கருதியதாலோ காந்தி இந்துஸ்தானியைக் கைவிட்டு ஹிந்தியைக் கையில் எடுக்கிறார்.

1917க்கும் 1920க்கும் இடையே “ஹிந்தி”யை தேசிய விடுதலை இயக்கத்தின் மய்யத்திற்கு காந்தி நகர்த்திவிட்டதாக தோழர் ஆழி செந்தில்நாதன் “மொழி எங்கள் உயிருக்கு நேர்” என்ற தனது நூலில் வைத்திருக்கிறார்.

தேசத்தின் பிளவு, ஹிந்தியை மறுத்தது என்பது உள்ளிட்ட கோட்சே கூறிய அனைத்துமே பொய்கள்தான்.

08.03.1947இல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பிளவை அங்கீகரிக்கும் தீர்மானத்தை படேல் முன்மொழிகிறார். அதே ஆண்டு ஜூன் இரண்டாம் நாள் நடந்த காரியக்கமிட்டி அந்தத் தீர்மானத்தை ஏற்கிறது. ஆனால், அதை காந்தி ஏற்கவில்லை.

தான் ஒருவன் மட்டுமே தனித்து விடப்பட்டாலும் பிளவு கூடாது என்ற தன் கருத்தில் இருந்து தான் ஒருபோதும் மாறப்போவதில்லை என்றும்,

பிரிவினை வேதனையை மட்டுமே வழங்கும் என்றும் அவர் அப்போது வேதனையோடு கூறியதையும் “கோட்சேயின் குருமார்கள்” நூலில் பார்க்க முடிகிறது.

இந்த விவரங்கள் கோட்சே அறியாதது அல்ல. ஒரு வாதத்திற்காக அவன் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஏற்றாலும் அவனது குருநாதர் சவார்க்கர் இதை அறியாதவரல்ல.

ஆகவே பிளவிற்கு காந்தியை சுட்டும் அவர்களின் போக்கு அநியாயமானது.

உண்மைக்குப் புறம்பானது.

இதுகுறித்து நாம் பேசும் அளவிற்கு காந்தியின் கொலையில் கொலையாளிகளின் ‘ஹிந்தி மொழி வெறி’ வகிக்கும் பாத்திரம் குறித்து நாம் கவனம் குவிப்பதில்லை என்பது துயரமானது.

இந்தியா விடுதலை என்பது இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வரும். என்பதையும்

காங்கிரஸ் ஆட்சியில் காந்தியாரின் அழுத்தம் எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதையும்

ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், இந்து மகா சபையினரும் நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

மொழிக்கும், மதத்திற்கும் இடையேயான உறவை அவர்கள் நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்தார்கள்

எங்கே காந்தி இன்னும் கொஞ்சம் காலம் உயிரோடு இருந்தால் தனது செல்வாக்கால் ஹிந்திக்கு பதிலாக இந்துஸ்தானியை மய்யத்திற்கு நகர்த்தி விடுவாரோ என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது.

அப்படி நடந்தால், பாரசீகமும், உருதும் கலந்த இந்துஸ்தானி மத நல்லிணக்கத்தை கெட்டிப்படுத்தி தங்களது இந்து ராஷ்டிரா கனவை ஊனப்படுத்தும் என்றும் அவர்கள் கருதினார்கள்.

தங்களது மதவெறிக்கான மொழியின் பங்கு குறித்து அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இதற்கு காந்தி தடையாக இருப்பார் என்பதும் காந்தியின் கொலைக்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று என்பதே இந்தக் கட்டுரையின் மய்யம்.

மீண்டும் ஹிந்தியை அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.

சமஸ்கிருத வளர்ச்சிக்கு செலவிடுவதில் பத்தில் ஒரு பங்குகூட தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஒதுக்க மறுக்கிறார்கள்.    

ஹிந்தி என்பது அவர்களுக்கான சமஸ்கிருதத்தின் முகமூடி. அதைத் திணிப்பது என்பது  தங்களது “இந்து ராஷ்ட்ர” கனவிற்கான வெறியைக் கொடுக்க வல்லது என்பது அவர்களுக்குத் தெரிகிறது.

இந்த நிலையில் மொழியின் இடம் குறித்தும், மொழி ஜனநாயகம் குறித்தும் பேரதிகமாய் பேசவேண்டியத் தேவை இருக்கிறது.

ஹிந்தித் திணிப்பு என்பது மத இணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் எதிரானது. 

மொழி ஜனநாயகம் என்பது மத நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்குமான நமது ஆயுதம் என்பதை,

நாம் கற்றுக்கொண்டே களமாடுவோம்.

- இரா.எட்வின். பெரம்பலூர் 


No comments:

Post a Comment