அமையவிருக்கும் கீழடி அருங்காட்சியகமும் - மதத் தொடர்பில்லா நம் பண்டைய பண்பாடும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

அமையவிருக்கும் கீழடி அருங்காட்சியகமும் - மதத் தொடர்பில்லா நம் பண்டைய பண்பாடும்!

வைகை ஆற்றங்கரையையொட்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து தென்கிழக்காய் 13 கிலோமீட்டர் தொலைவிலும் தென்னந்தோப்பிற்குள் 110 ஏக்கருக்கு மேற்பட்ட விரிந்த பரப்பில் பண்டைய குடியிருப்பு புதையுண்ட மேட்டுப்பகுதியின் பெயர் கீழடி! 

கீழடியை எப்போது காணப் போகிறோம் என்ற ஏக்கம் தவிர்த்துத் தந்தது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் என்ற தமிழர் தலைவரின் அறிவிப்பு! 

தாய் மடியில் தலை சாய்த்தது போல் ஓருணர்வு  தந்தது கீழடியில்  நாங்கள் அன்று வைத்த காலடி! (28.1.2023)

புறக்கண்ணால் அகழாய்வுக் குழிகளைக் காணும் முன் அகக்கண்ணால்  உய்த்துணர அரிய செய்திகளை அறிந்து வந்தோம்! 

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொல் பொருள்களைக் காட்சிப்படுத்த, கூரைகள் வேயப்பட்ட செட்டிநாடு கட்டட அமைப்பிலான  சீரிய ‘அருங்காட்சியகம்’ அமைப்புப் பணிகள் தமிழ்நாடு அரசால்  விறுவிறுவென நடந்து கொண்டிருப்பதையும் கண்ணுற்றோம்! (ரூ.20 கோடி செலவில்) மக்கள் இது தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள, இதனுள்ளே ஒரு சிறு அரங்கத்தில்  செய்திகள் திரையிடப்படும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. 

கரிமப் பகுப்பாய்வு மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு எனக் கண்டறிந்த வியப்பில் மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்வோம், "முன் தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்குடி" என்று! 

ஆய்வு முடிவுகளின்படி, நம் தமிழ் மக்கள் வேளாண்மை செய்திருக்கிறார்கள்... கால்நடைகள் வளர்த்திருக்கிறார்கள்... நெசவுக் கூடம், தொழிற்கூடம் அமைத்திருக்கிறார்கள்... அதற்கு தேவையான நீரை உறை கிணறு என்ற அமைப்பில் தேக்கி வைத்திருக்கிறார்கள். 

வாழ்க்கையில் தன்னிறைவு அடைந்து பின் வணிகம் செய்திருக்கிறார்கள்.அழகியல் உணர்வோடு அணிமணிகள் அணிந்திருக்கிறார்கள். பகடைக்காய், ஆட்டக்காய், வட்டச் சில்லுகள் மூலம் விளையாடியிருக்கிறார்கள். தன் எண்ணங் களைக் கலை வடிவமாக்கி சுடுமண்ணால் உருவங்கள் செய்திருக்கிறார்கள்.

பானை ஓடுகளில் இருக்கும் ஏராளமான கீறல்கள், தமிழ்-பிராமி எழுத்துகள் எழுத்தறிவுப் பெற்ற சமுதாயம் இருந்ததை எடுத்துக் காட்டுகிறது. அக்கீறல்கள் சிந்துவெளி குறியீடுகளை ஒத்திருப்பதில் ஒரு நகர்ப்புற நாகரிகம் இங்கு தொடங்கி அதுவரை நகர்ந்துள்ளது  தெரிகிறது.

செங்கல் கட்டுமானங்களை இணைப் பதற்கு பயன்படுத்திய சுண்ணாம்பு சாந்து கட்டிடக்கலையில் சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியதைக் கட்டியம் கூறுகிறது.

சுடுமண்ணால் கோள வடிவில் செய்யப்பட்டு நடுவே துளையிடப்பட்டு சுற்றக்கூடிய சக்கரம் போன்ற அமைப்பு ‘தக்களி’ என்பதை பருத்தியை நூலாகத் திரிப்பதற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எலும்பினால் ஆன கூரிய முனைகள் கொண்ட தூரிகை, செம்பிலான ஊசி, நெசவில் நூல் நூற்றல், பாகு அமைத்தல், தறியில் அமைத்தல், சாயமிடல் நிலைகளை உறுதி செய்கின்றன.

கண்டெடுக்கப்பட்ட ‘அரிட்டைன்’ பானை ஓடு இரண்டாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்தவை என்பதால் இரண்டு பகுதிகளுக்கும் வணிகம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. சீன நாட்டுடனும் வணிகத்தொடர்பு இருந்திருக்கிறது.

பானைகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட் என்பதையும் கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தி 1100 டிகிரி சி வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

இன்னும் கால வெள்ளத்தில் கரைந்து விடாத மிருது மண் பூச்சுத்தரை, புதையுண்ட அடுப்புகள் என ஏராளம் ஏராளம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“கீழடி மற்றும் சமகால தமிழக இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ள பயன்பாட்டுப் பொருள் தடயங்கள் தமிழர்களின் மேதைமைத் தன்மையின் பண்டைய வெளிப்பாடுகளை எதிரொலிக் கின்றன. இதுவரை கவனமாக ஆய்வு செய்ததில் மதம் தொடர்பான குறியீடுகள் எவையும் கிடைக்கவில்லை. இயற்கையுடன் இணைந்த வாழ்வு, ஜாதி அமைப்பு இன்மை, குறைந்த அதிகாரங்கள் பயன்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு பண்பாட்டை கீழடி வெளிப்படுத்துகிறது” என்கிறார் புலம் கடந்த தொல்லியல் அறிவியல் மேம்பாட்டுக்கான நிறுவன இயக்குநர் பி.ஜெ.செரியன் அவர்கள்.

“நமது பழைமையைத் தேடிடும் முடிவில்லா பயணமே தொல்லியல். புதையலைத் தேடும் சிறு விளையாட்டு அல்ல. அது விடை தெரியாக் கேள்விகளுக்கான உண்மையைத் தேடும் நெடும் பயணம். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற கருவிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக மானுட சமூகம் பெற்ற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவது” என்கிறார் 

த. உதயச்சந்திரன் மிகிஷி அவர்கள்.

‘கீழடி- வைகை நதி கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்ற மிகச் சிறப்பான புத்தகத்தை தொகுத்துள்ளார் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணை இயக்குநர் முனைவர் இரா.சிவானந்தம் அவர்கள்.

இந்நூலையும் அவர் நேரத்தையும் எங்களுக்கு சேர்த்தளித்து விளக்கிய தமிழர்களின் நன்றிக்குரியவர்.

கீழடியின் கண்மாயாக மேற்புற எல்லையில் அமைந்துள்ள கொந்தகை அகழாய்வுக் குழிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் ‘முதுமக்கள் தாழி’ எனப்படும் மிகப் பெரிய பானை போன்ற மூடியுடனான அமைப்புகளையும் கண்டு இறந்தவர்களைப் புதைப்பதிலும் உயர்ந்த தன்மையை கையாண்டிருப்பதைக் காண முடிகிறது.

இப்படியாக, தோண்டத் தோண்ட தமிழனின் பெருமையை உலகம் முழுவதும் வாரி  இறைக்கலாம்.

“இங்கே கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளோடு நெருங்கிய உறவு கொண்டவையாக இருப்பதால் இவ்விரு பண்பாட்டிற்கும் இடையே மொழியியல் சார்ந்த உறவு இருக்கக் கூடும் என்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கா.ராஜன் அவர்கள் குறிப்பிடுகிறார். அவருடைய கருத்தை தெற்காசிய தொல்லியல் துறை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேனாள் பேராசிரியர் திலீப் கே. சக்கரவர்த்தி அவர்களும் எடுத்துக்காட்டுகிறார்.

தவிர, கடலுக்கடியில் மூழ்கிய பூம்புகார் 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முதல் கட்ட ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கிற இச்சூழலில்,

 “நாடு இங்கே முடிகிறது என்று சொல்கிறார்கள்... இல்லை! இங்கிருந்துதான்- நம் தமிழ்நாட்டிலிருந்து தான் தொடங்குகின்றது” என்று சொல்லி குமரியிலிருந்து இமயத்தைப் பார்ப்பது போல் வள்ளுவர் சிலையை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞருடைய விழைவு விரைவில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை! 

 அன்றைய எங்கள் பயணம் பயன்பட்ட பயணம் ஆனது.  கீழடி  அருங்காட்சியகம் வரும் காலத்தில் மிகப் பெரிய சிந்தனை மாற்றத்தை, நம் வேர்களான மூதாதையர்கள் பற்றிய தேடல்களை நம் இளைய தலைமுறையிடம் விதைத்து, இடைக்காலத்தில் ஏற்பட்ட பாகுபாட்டைக் கிழித்தெறிந்து பண்பாட்டுத்தளத்தில் ஒளி வீசும் என்பது உறுதி! 

- ம. கவிதா,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்

No comments:

Post a Comment