இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

  • இது வேருக்கு விழுதுகள் எடுக்கும் இனமான விழா
  •  கல்வி வளாகத்தில் அன்பழகன் சிலை வைக்கலாமா என்று கேட்கிறார்கள்  - சென்னை பல்கலைக் கழக வளாகத்திலும், மாநிலக் கல்லூரி வளாகத்திலும் அய்யன்மார்கள் சிலை வைக்கப்படவில்லையா
  •  விஷமிகள் ஆயிரம் எழுதினாலும் கட்டுக்குலையாத கூட்டணியை வைத்திருப்பவர் நமது முதல் அமைச்சர்

 இது வெறும் பாராட்டு விழா அல்ல - இலட்சியக் கொள்கையைப் பரப்பும் இனமானப் பெருவிழா!

அவர் விரும்பிய கொள்கையை முன்னெடுக்க சூளுரை எடுப்போம்

இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

சென்னை, டிச.19 இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா என்பது வெறும் பாராட்டு விழா அல்ல -&- அவர் விரும்பிய திராவிட இயக்கக் கொள்கைகளை இனமான உணர்வை முன்னெடுக்க சூளுரைக்கும் விழா என்றார் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்   

இனமானப் பேராசிரியரின் நூற்றண்டு நிறைவு விழா

நேற்று (18.12.2022)  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மேனாள் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாற்றில், இப்படி ஒரு தலைவர் கிடைக்கமாட்டாரா என்று இனிவரும் நூற்றாண்டு நாயகர்கள் எல்லாம் நினைக்கக்கூடிய அளவிற்கு, ஒப்பற்ற முறையில் நமது இனமானப் பேராசிரியருடைய நூற்றாண்டு விழாவை - அவர்களுக்கு எது செய்தால், வாழும்பொழுது அவர்கள் மகிழ்ச்சியடைவார்களோ, அதை செய்யக்கூடிய உணர்வைப் படைத்து, கொள்கைப் பிரச்சாரம்தான் அவருக்கு மிகவும் பிடித்தது என்பதற்காக - நூற்றாண்டு விழாவை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக நடத்தாமல், நூறு இடங்களில் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாட்டில் நடத்தி, இந்தக் கொள்கையை சில கொம்பர்கள் பறிக்கலாம் என்று நினைக்கிறார்கள்; வம்பர்களே வாலாட்டாதீர்கள்; எங்கள் படை இருக்கிறது; எங்கள் தோழர்கள் வேகமாகச் சென்றிருக்கிறார்கள்; எங்கள் உற்சாகம் குறையாது என்று காட்டுவதற்கு, மிக ஆழமாக, திட்டமிட்டு, வேருக்கு விழா எடுத்திருக்கின்ற எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே,

இந்த சிறப்பான நிகழ்வு, இனமானப் பேராசிரியர் அவர்களுடைய அற்புதமான கொள்கைத் திருவிழா - இது வெறும் பாராட்டு விழா அல்ல - இது வெறும் சிறப்பான மேன்மைகளைப்பற்றி மட்டுமே பேசிவிட்டு, பிரசங்க மேடையாக ஆக்கிவிட்டுப் போவதல்ல.

கொள்கையை பரப்ப உறுதி மேற்கொள்ளும் நாள்

கொள்கையைப் புதுப்பிக்கின்ற சூளுரை நாள் என்ற அந்த உணர்வை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் பெறவில்லை; அற்புதமான தலைவர் அவர்களால் உரு வாக்கப்பட்டு, கட்டுக்கோப்பு கலையாத கூட்டணியாக, இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய கொள்கைக் கூட்டணியாக இருக்கக் கூடிய கூட்டணித் தலைவர்கள், தோழமைத் தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு இந்த மேடையிலே இணைந்திருக்கின்றார்கள் என்றால், இந்த இனமானத்தை யாராலும் அசைக்க முடியாது; இது தன்மான மேடை - தன்மானத்தின்மீது கட்டப்பட்டு இருக்கின்ற மேடை என்ற உணர்வோடு, இந்த அரங்கத் தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் - இந்தியாவினுடைய முதல் முதலமைச்சர் - இந்தியா டுடே - இன்றைய இந்தியாவி னுடைய ஒப்பற்ற முதலமைச்சர் - சொல்வது இந்தியா டுடே - நிலைமையும் இன்றைய இந்தியாவில் அதுதான்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நிகழ்ச்சியில், இனமான பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு சிறப்பிதழ் வெளியீடு - அதை வெளியிட்டு சிறப்புச் செய்திருக்கிற - திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய சிறப்புமிகு ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் - இனமானப் பேராசிரியர் அவர்கள் நீண்ட காலம் இருந்த அதே இடத்தில், அந்தப் பணியைத் தொடர நானும் தயாராக இருக்கிறேன் - இதோ தலைவர் அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதற்கு அடையாள மாக இருக்கிற, அருமைச் சகோதரர் மாண்புமிகு மானமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பான வகையில் வரவேற்புரை யாற்றிய எங்கள் அன்பிற்குரிய அமைச்சர் அருமைத் தோழர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக கருத் துகளை எடுத்து வைத்திருக்கக்கூடிய தோழமைக் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், வேல்முருகன் அவர்களே, ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களே, 

எல்லோரும் இங்கே ஒன்றுபட்டு இருக்கிறார்கள்; கட்சிகள்கூட ஒன்றுபட்டு இருக்கின்றன. 

ஆகவே, இந்த உருவத்திலே அவர்கள் தங்களுடைய கூட்டணி பலமானது என்று காட்டக்கூடிய வகையிலே, இங்கே பெயரிலேயே அழைத்திருக்கிறார்கள்  - அது மிகவும் சிறப்பானது என்ற முறையிலே சொல்லுகிறோம்.

அருமைப் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே, சகோதரர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் அவர் களே, அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே, அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே, அருமைச் சகோதரர் வைகோ அவர்களே, காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்ற மாண்பு மிகு, மானமிகு அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பெருமக்களே,

அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களே, நண்பர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, 

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த அருமையான விழாவைக் கண்டு மகிழக்கூடிய பேராசிரியர் அவர் களுடைய குருதிக் குடும்பத்தைச் சார்ந்த அருமைச் செல்வங்களே, குறிப்பாக அன்புச்செல்வன் அவர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேருக்கு விழுதுகள் எடுக்கும் விழா இது!

இந்த விழா, விழுதுகள் வேருக்கு எடுக்கின்ற விழா!

விழுதுகள் நன்றி உணர்ச்சியோடு இருக்கின்றது என்று காட்டுவது மட்டுமல்ல; விழுதுகள் பழுதில்லாமல் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான், கொள்கைப் பூர்வமான விழாவாக இந்த விழாவை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

எனக்கு முன்பு உரையாற்றிய சகோதரர் வேல் முருகன் அவர்கள் குறிப்பிட்டார்.

பேராசிரியர்கள் இரண்டு பேர் என்று அவர் சொன்னார். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியரை அவர் குறிப்பிட்டார்.

அவர் பேராசிரியர்; ஆனால், இவர் எங்கள் இனமானப் பேராசிரியர்.

இதுதான் தன்மானத்திலிருந்து முகிழ்த்தது. இனமானப் பேராசிரியர்.

எந்த மேடையிலும் ஒரு அய்ந்து மணித்துளிகள் பேராசிரியர் அவர்கள் பேசினாலும்கூட, இனமானம் தெறிக்கும். இனமானம் பளிச்சிடும். அதை அவர்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை.

அழகாகச் சொன்னார்; சுயமரியாதை என்று - அந்த சுயமரியாதை உணர்வு மாணவப் பருவத்திலிருந்து அவரைப் பற்றிக் கொண்டிருக்கிறது; ரத்த ஓட்டமாக ஆகியிருக்கிறது. 

75 ஆண்டுகள் தொடர்பு எனக்கு

75 ஆண்டுகள் பேராசிரியரை அறிந்தவன் நான். அவரைப்பற்றி சொல்லுவதற்கு எத்தனையோ செய்தி களைச் சொல்லலாம்; நேரம் இல்லை என்கிற காரணத் தினால், சுருக்கமான நேரத்தில் கருத்துகளை முடிக்க விரும்புகிறேன்.

ஒரு தலைமை, கொள்கை, அந்தக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய தோழர்கள் - அவர்கள் மிக முக்கியமாக ஈடுபடவேண்டும் என்பதுதான், ஒரு தத்துவ ரீதியான கொள்கையினுடைய, இயக்கத்தினுடைய அடிப்படையாகும்.

இந்த மூன்றும், பேராசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது.

பேராசிரியர் அவர்கள் நம்மைப் பொறுத்தவரையில் நண்பர்களே, மறையவில்லை; நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்.

இனமானப் பேராசிரியரின்  கணக்குத் தப்பாது!

இந்தக் காலகட்டத்தில், பேராசிரியர் அவர்கள், பெரியாரிடத்தில் மாணவராக இருந்த அந்த நேரத்திலும் சரி; அண்ணாவிற்குத் தோழராக இருந்து,   அவர்மீது பற்றுள்ளவராக, அவரிடம் கற்கக்கூடியவராக இருந்த காலகட்டத்திலும் சரி, கலைஞருக்குப் பாதுகாவலர் போல இருந்த காலகட்டத்திலும் சரி, இதோ நம்முடைய முதலமைச்சர், ஆற்றல் வாய்ந்த முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவரை அடையாளம் கண்டு, தலைவராக ஏற்ற காலத்திலும் சரி, பேராசிரியர் போட்ட கணக்கு என்றைக்குமே தவறான கணக்காக அமைந்ததில்லை.

அப்படிப்பட்ட பேராசிரியர் அவர்கள்,  எத்தனையோ உணர்வுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். இன்றைக்குச் சமூகநீதியை சாய்த்துவிடவேண்டும் என்பதற்காகத்தான், வடபுலத்திலிருந்து மிகப்பெரிய அளவிற்கு ஒன்றிய அரசின்மூலமாக திட்டங்கள் கிளம்பியிருக்கின்றன.

அதற்குத்தான் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒட்டகம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் காலகட்டத்தில் பேராசிரியர்பற்றி இளைஞர் களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டுமானால், பேராசிரியர் வாழுகிறார், மறையவில்லை என்பதற்கு அடையாளம் - அவர் எழுதிய வகுப்புரிமை நூலைப் பாருங்கள்.

இனமானப் பேராசிரியர் எழுதிய வகுப்புரிமை நூல் படிக்க வேண்டிய ஒன்று

முதன்முதலாக கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று வந்த நேரத்தில், அதைப்பற்றி தந்தை பெரியாரும், அண்ணாவும் எப்படியெல்லாம் அந்தக் காலகட்டத்தில் விளக்கினார்கள் என்பதையெல்லாம், முத்தையா முதலியார் அவர்கள் கொண்டு வந்த கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை என்பதைப்பற்றி பேராசிரியர் அவர்கள் எழுதிய புத்தகம், மீண்டும் பதிப்பிக்கப்பட்ட பொழுது, அவர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்.

அவருடைய புத்தகங்களைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், அவருக்கு அதைப் பார்க்கிறபொழுது, இதுதான் முக்கியமான பணி. இளைஞர்களுக்கு இந்தப் பாடங்கள் போய்ச் சேரவேண்டும். இளைஞர்களைக் கொள்கையாளர்களாக மாற்றவேண்டும்.

எதையும் அவர் எதிர்பார்த்ததில்லை - எனவே ஏமாற்றமும் இல்லை

பேராசிரியர் ஒரு விசித்திரமான மாமனிதர். அவரைப் பொறுத்தவரையில் அவர் வாழ்க்கையில் என்றைக்குமே ஏமாற்றம் வந்ததேயில்லை. அழகாக இங்கே கண்காட்சியில் ஒரு பகுதியைப் போட்டிருக்கிறார்கள்.

‘‘நான் எதையும் எதிர்பார்க்கவில்லை; ஆனால், எல்லாம் நடந்திருக்கிறது'' என்று அழகாகச் சொல்லியிருக்கிறார்.

அவருக்கு ஏமாற்றம் ஏன் இல்லை?

எதிர்பார்ப்பு இல்லை; ஆகவே, ஏமாற்றம் இல்லை.

எங்கே எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அங்கே ஏமாற்றம் இருக்கும்.

பேராசிரியர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். பதவி அவரைப் பொறுத்தவரையில், பணிகளைச் செய்வதற்குத்தான்.

அவர் என்றைக்கும் பதவியை நாடிப் போனதில்லை; பதவி  அவரைத்தான் தேடிப் போயிருக்கிறது. இதுதான் பேராசிரியருடைய தனித்தன்மை. அப்படிப்பட்ட கொள்கையாளர்; அந்தக் கொள்கையாளரை, மாணவப் பருவத்தில் இருந்து பார்த்துப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றவர்கள் நாம்; அவரிடமிருந்த கருத்து களையெல்லாம் பெற்றுக்கொண்டு வளர்ந்திருக் கின்றவர்கள் நாம். அது நாளைக்கும் தேவை; இன்றைக் கும் தேவை - இப்பொழுது அதிகமாகத் தேவை.

கூட்டணிக் கட்சிகளை உருக்குலையாமல் கட்டிக் காக்கும் முதலமைச்சர்

இந்த அரங்கம், பேராசிரியருடைய நூற்றாண்டு நிறைவு விழா அரங்கம் என்பதைவிட மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால்,

காலையில்கூட இந்தக் கூட்டணி உடையாதா? என்று செய்தி போடுகிறார்கள்.

அவர் பேசுகிறார், இவர் பேசுகிறார்; இவர் அவரைச் சந்தித்தார் என்றெல்லாம் செய்தி போடுகிறார்கள்.

ஆனால், சக்தி வாய்ந்த தலைமையிலே இந்தக் கூட்டணி இருக்கிறது; இது பதவிக் கூட்டணி அல்ல நண்பர்களே, கொள்கைக் கூட்டணி.

இதைக் கட்டியிருக்கிறவர்களுடைய பண்பாடு, பக்குவம் இருக்கிறது; அதை நீங்கள் அசைத்துப் பார்க்க முடியாது.

அரவணைக்கின்ற கைகள்; கருத்துகள்.

நேற்று திருப்பத்தூரில் ஒரு பெரியவர் என்னைச் சந்தித்துப் பேசினார்; கட்சிக்கு அப்பாற்பட்டவர் அவர்.

‘‘நான் எத்தனையோ முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறேன்; ஆனால், ஒரு முதலமைச்சர், இவ்வளவு பெருந்தன்மையோடு நடந்துகொள்கிறார்; இவ்வளவு தாராளமாக நினைக்கிறார்கள் என்றால், இந்தியாவிலே இப்படியொரு முதலமைச்சர் வேறு மாநிலங்களில் இல்லை.'' என்று சொன்னார்.

அவர் ஒரு கல்வியாளர், அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் அவர்.

யாரையும் முதலமைச்சர் அவர்கள் அலட்சியப்படுத்த வில்லை; எல்லோரையும் அரவணைக்கிறார் என்று சொன்னார்..

அந்த அரவணைப்புத்தான் நண்பர்களே, அசைக்க முடியாத கூட்டணியாக இருக்கிறது.

சிண்டு முடிவாய்ப் போற்றி?

இன்றைக்கும் விஷமம் செய்து கொண்டிருக் கிறார்களே,

‘‘சிண்டு முடிவாய் போற்றி! போற்றி!!

சிறுநரியே போற்றி! போற்றி!!''

என்று ‘ஆரிய மாயை'யில் அண்ணா அவர்கள் எழுதினார் அல்லவா - அந்த சிண்டு முடிக்கின்ற நிலை இன்று இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் அவரிடம் பேசுகிறார், இவர் அவரிடம் பேசுகிறார் என்றெல்லாம் சொன்னார்களே, அதற்கெல்லாம் பதில்தான் இந்த மேடை! அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது வெறும் பேராசிரியருடைய நூற்றாண்டு நிறைவு விழா என்கிற பேச்சுக் கச்சேரி மேடையல்ல. இது அதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய மேடை இந்த மேடை.

இந்தக் கூட்டணியின் தலைமை உறுதியாக எழுந்து நிற்கிறது; கம்பீரமாக நிற்கிறது. இந்தியாவிற்கே வழி காட்டக் கூடிய அளவிற்கு இந்தத் தலைமை எழுந்து நிற்கிறது; கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றது. இடை யில் நீங்கள் சந்தில் நுழையலாம்; காலுக்குள் நுழையலாம் என்றால், எங்கள் கால்களை நெருக்கினால், நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பதுதான் எங்களுடைய பதிலாக இருக்க முடியும்.

இவ்வளவு பெரிய சிறப்பு நடந்துகொண்டிருக்கிறது - அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. அவருடைய நனி நாகரிகம், பண்பு ஓர்ந்தது என்று யாரும் சொல்லலாம்.

ஆனால், வயிற்றெரிச்சலில் எழுதுகிறார்கள். இந்த வாரம் வெளிவந்துள்ள ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையை உங்களில் பலர் படித்திருக்க வாய்ப்பில்லை. நல்லது, படிக்காதீர்கள். அதை நாங்கள் படித்துவிட்டு, அதற்குப் பதில் சொல்வது எங்கள் வேலை.

ஆர்.எஸ்.எஸ். ஏடு எழுதி இருப்பது என்ன?

அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால், ‘‘முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தவறான முன்மாதிரியை எடுத்துக்காட்டியிருக்கிறார். கல்வி வளாகத்திற்குப் பேராசிரியர் அன்பழகன் பெயர் வைத்திருப்பது தவறான முன்மாதிரி. ஓர் அரசாங்கத்தின் வளாகத்திற்கு இப்படி பெயர் வைக்கலாமா? அங்கே அவருடைய சிலையை வைக்கலாமா? அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?'' என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வயிற்றெரிச் சலில் இருக்கிறார்கள்.

வாழ்க, வயிற்றெரிச்சல்காரர்கள்! அண்ணா ‘‘வாழ்க வசவாளர்கள்'' என்பார்.

கடல்சார் பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைத்தார்கள் - அவர்கள் எந்த மொழியிலே சொல் கிறார்களோ, அந்த மொழியிலேயே பதில் சொல்வதுதான் இந்தப் பெரியார் திடலினுடைய  பழக்கம். இந்தப் பயிற்சியாளர்களுடைய பயிற்சி. அதைத்தான் இன மானப் பேராசிரியரிடம் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள், ‘‘பேராசிரியருடைய சிலையை, கல்வி வளாகத்திற்குள்ளே நம்முடைய முதலமைச்சர், அமைச்சர்கள் பெருமக்கள் அங்கே வைத்தால், அது தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும்'' என்கிறார்கள்.

சுப்பிரமணிய அய்யர், உ.வே. சாமிநாதய்யர் சிலைகளை கல்வி வளாகங்களில் வைக்கவில்லையா?

ஏன்யா, எங்களோடு வா, சென்னை பல்கலைக் கழக வளாகத்திற்குப் போவோம்; அங்கே சுப்பிரமணிய அய்யருடைய சிலையை வைத்திருக்கிறீர்களே, அது சரியான முன்மாதிரியா? அதற்கடுத்து, மாநிலக் கல்லூ ரிக்குச் செல்வோம், அங்கே டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் சிலை இருக்கிறதே, நம்முடைய அமைச்சர்கள் கூட  ஆண்டுதோறும் மாலை போடுகிறார்களே, அந்த சிலை எங்கே இருக்கிறது? அரசாங்க வளாகத்தில், மாநில கல்லூரி வளாகத்தில் இருக்கிறது.

அவாள் செய்தால் நியாயம்; நாங்கள் செய்தால், அது பாவம் - இன்னமும் மனுதர்மம் ஆளுகிறது என்கிற மமதையா?

மமதையின் விஷப் பற்கள் பிடுங்கப்படும்!

அந்த மமதையின் விஷப் பற்களைப் பிடுங்குகின்ற ஆயுதம்தான் இனமானப் பேராசிரியருடைய பேராசை. 

எனவே, அந்த இனமானப் பேராசிரியருடைய உணர்வுகள் மறையக்கூடாது.

அந்த இனமானப் பேராசிரியருடைய பாடங்கள் இருக்கவேண்டும்.

அதைத்தான் பெரியார் குறிப்பிட்டார்; அதைத்தான் அண்ணா குறிப்பிட்டார். அதைத்தான் கலைஞர் விரிவுபடுத்தினார். அதைத்தான் காப்பாற்றுவதற்கு எங்களுடைய முதலமைச்சர் இருக்கிறார்.

பேராசிரியரின் புகழ் வாழ்க, வளர்க!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.


No comments:

Post a Comment