உள்ளாட்சிப்பணியாளர்களின் பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

உள்ளாட்சிப்பணியாளர்களின் பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை,நவ.12- உள்ளாட்சிப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே! அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது! 

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் நியமனம்  

கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, நவ 12 நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக் காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கு எதிராக பெங் களூரு வழக்குரைஞர்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு  வழக்கு தாக்கல் செய்தது. 

அதை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆஜராகி வாதிடுகையில் கூறியதாவது:- நீதிபதி தீபாங்கர் தத்தாவை உச்சநீதிமன்றம் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் சிபாரிசு செய்து 5 வாரங்கள் ஆகியும் ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் உள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். 

இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:- நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலிஜியம் சிபாரிசுகளை ஏற்று நியமன உத்தரவு களை பிறப்பிக்கவோ, ஆட்சேபனைகளை தெரிவிக்கவோ ஒன்றிய அரசு மறுக்கிறது. இதுவரை 10 நீதிபதிகள் பற்றிய சிபாரிசுகள், ஒன்றிய சட்ட அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனு தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சக செயலருக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment