அரசியல் சாசன அமர்வையும் அவமதித்த மோடி அரசு பணமதிப்பு நீக்க வழக்கில் நீதிபதிகள் கடும் அதிருப்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

அரசியல் சாசன அமர்வையும் அவமதித்த மோடி அரசு பணமதிப்பு நீக்க வழக்கில் நீதிபதிகள் கடும் அதிருப்தி!

புதுடில்லி,நவ.14 கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி  இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என திடீர் என அறிவித்தார். இதனால் நாடே துயரின் பிடியில் சிக்கியது. பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆனபிறகும் அதன் பாதிப்புகள் முழுமையாக சீராகவில்லை.  

பணமதிப்பு நீக்கத்தின்போது, அந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், “மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல் கள் குறித்து கவலை தெரிவிக்கிறோம் என்றாலும் ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி விட்டார். பணமதிப்பு நீக்கத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் மறுத்துவிட்டார்.

எதிர்ப்பை பதிவு செய்தார்

மேலும், நாட்டின் உயர்நீதிமன்றங்கள் பலவற்றிலும் மொத்தம் 58 வழக்கு கள் தொடரப்பட்டிருந்த நிலையில், அவற்றின் விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனிடையே, ஒன்றிய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக் கையில் சட்ட மீறல்கள் உள்ளதாகவும், நிர்வாக உத்தரவுமூலம் கரன்சி நோட்டுகளை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு  இல்லை என்றும், மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதால், 58 வழக்கு களும் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டன.  

முன்பு இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி. நாகரத்னா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “இதுபோன்ற வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க தேவை யில்லை. தனி நபர்களின் பாதிப்புக்கு நிர்வாக ரீதியாக தீர்வு காணலாம். உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை” என ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். 

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த  வழக்குரைஞர் ஷியாம் திவான், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேசும்போது, அதனை “நேர விரயம்” என ஒன்றிய அரசு குறிப்பிடுவது வியப்பளிக்கிறது என்று எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

விதிகள் மீறப்பட்டுள்ளது

நீதிபதி நாகரத்னாவும், “அரசமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் என குறிப்பிடப்படும்போது, அதற்குப் பதிலளிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்” என் றார். எனினும் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். 

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம், ‘ஆமாம்’ விதிகள் மீறப்பட்டுள்ளன என்றார். அதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இந்த வழக்குகளில் அரசியல் தாக்கங்களே அதிகம் உள்ளன என்று கூறினார்.  ப.சிதம்பரம் தொடர்ந்து வாதிடுகையில், “1978 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுக்கும் வேறுபாடு உள்ளது. 

ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை

இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 26-இன் படி ஒன்றிய அரசே பண மதிப்பு நீக்க அறிவிப்பைச் செய்ய முடியுமா? என்ற சட்டச் சிக்கல் இப்போதும் உயிருடன் உள்ளது. அரசு எதற்காக இந்த அவசர நடவடிக்கையில் இறங் கியது? இதன் பின்விளைவுகள் மற்றும் நன்மை தீமைகள் குறித்து ஏதேனும் ஆலோசனை நடந்ததா? இதுகுறித்து நவம்பர் 7 ஆம் தேதி ரிசர்வ் வங்கி முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன? அந்த முக்கிய ஆவணங்களின் குறிப்பு நாடாளுமன்றத்தில் அல்லது பொதுத் தளத்தில் எங்காவது வெளியிடப்பட்டதா? என்ற கேள்விகளுக்குப் பதில் வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்திலும் இதையே அரசாங்கம் மீண்டும் செய்யலாம்” என்றார்.  மேலும், “ரூபாய் நோட்டுகளை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொடரின் ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய மட்டுமே சட்டப் பிரிவு 26(2) ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டார். 

பிரமாணப் பத்திரத்தைத் 

தாக்கல் செய்ய உத்தரவு

இந்த இருதரப்பு விவாதங்களையும் கேட்ட அரசியல் சாசன அமர்வு, “பண மதிப்பு நீக்கத்திற்கான வழிமுறைகள் சரியானதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டங்கள் தொடர்பான ஆவணங்களையும் பார்க்க வேண்டியுள்ளது” என்று கூறியதுடன், 

இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26(2)-க்கு பதில ளிக்கும் வகையில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு இந்திய ஒன்றிய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கும் ஒத்தி வைத்திருந்தது.

தவறான முன்னுதாரணம்

இந்நிலையில், 11.11.2022 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஆஜரானார். அவர் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி பிர மாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வார் என்று  எதிர்பார்க் கப்பட்ட நிலையில், “இன்று எங்களால் பதில் மனுவைத் தாக்கல் செய்ய  முடியவில்லை” என்று கூறி அதிர்ச்சியளித்தார். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென்றும் கேட்டார். 

இதற்கு மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர் ஷியாம் திவான் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். “அரசியல் சாசன அமர்வில், வழக்கை ஒத்திவைக்கக் கோருவது முன் னெப்போதும் நடந்திராத ஒன்று. இது தவறான முன்னு தாரணமாக மாறிவிடும்” என்று அவர் கூறினார். அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியின் கோரிக்கை குறித்து மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ப.சிதம் பரத்திடம் கேட்டபோது, “இது நீதிமன்றத்தை தர்மசங்கடப் படுத்தும் முயற்சி” என்றும் “இதுகுறித்த முடிவை நீதிபதி களிடமே விட்டுவிடுவதாகவும்” கூறினார்.

இதையடுத்து நீதிபதி பி.வி. நாகரத்னா கூறுகையில், “வழக்கமாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இதுபோல் விசாரணையே நடத்தாமல் கலைந்தது இல்லை. விசாரணையை தொடங்கிய பின் இதுபோன்று நாங்கள் எழுந்தது இல்லை. இது நீதிமன்றத்தை சங்கடத்தில் தள்ளும் செயல். இந்த வழக்கை விசாரிக்காமல் ஆரம்ப நிலையிலேயே ஒத்தி வைப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது” என்று அதிருப்தியை தெரிவித்தார். மற்றொரு நீதிபதியான அப்துல் நசீர்,  “பணமதிப்பு நீக்கம் தொடர்பான விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்ப தாகவும் மற்ற அரசமைப்பு அமர்வு விஷயங்களை நவம்பர் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாகவும் அந்த வழக்குகளை ஒத்திவைக்க வேண்டாம்” என்று அட்டர்னி ஜெனரலிடம் கோபமாகக் கூறினார். இதையடுத்து விசாரணை நடத்தாம லேயே அரசியல் சாசன அமர்வு கலைந்தது.

No comments:

Post a Comment