இயற்கை முறை வேளாண்மை 885 விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை- ஆட்சியர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

இயற்கை முறை வேளாண்மை 885 விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை- ஆட்சியர் தகவல்

ஈரோடு நவ 16 இயற்கை முறையில் வேளாண்மை செய்த 885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறினார். 

மொடக்குறிச்சி அருகே பூந்துறை சேமூர் ஊராட்சி அய்யகவுண்டன் பாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ள நெல் அய்.ஆர்-20 ரக விதைப் பண்ணையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று (15.11.2022) ஆய்வு நடத்தினார். 

தொடர்ந்து, குமாரவலசு ஊராட்சி காகம் பகுதியில் அங்கக விவசாயிகள் குழு சார்பில் பூபதிசுந்தரம் என்பவர் நிலத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை அவர் பார்வையிட்டார். பிறகு மொடக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உரக்கிடங்கு, அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, ஓலப்பாளையம் அங்கன்வாடி மய்யம், மொடக்குறிச்சி கால்நடை மருத்துவ மனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண னுண்ணி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கிருஷ்ண னுண்ணி கூறியதாவது:- விவசாயிகள் இயற்கை முறை வேளாண்மையில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக மண்புழு உரம்,   பூச்சிவிரட்டிகள் ஆகியவற்றை தங்களது பண்ணைக் கழிவுகளை கொண்டே உற்பத்தி செய்யலாம். 

கடந்த 3 ஆண்டுகளில் அங்கக வேளாண்மைக்கு சான்றிதழ் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட திட்டத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு 855 அங்கக விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். விவசாயிகளால் தயாரிக் கப்பட்ட இயற்கைப் பொருட்களை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இதுவரை ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 17 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட துணை இயக்குநர் சாவித்திரி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் எஸ்.கலைச்செல்வி, தோட்டக்கலை உதவி இயக்குநர் சிந்தியா உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment