ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கூற்றைச் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கூற்றைச் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

 இமாசலப் பிரதேசத்துக்குத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத்துக்கு அறிவிக்காதது ஏன்?  ‘குஜராத் மாடல்' என்பது அம்பலமாகிவிட்டது!

பிரதமரின் தேர்தல் பிரச்சார வசதிக்காக தேர்தல் ஆணையம் முறைகேடாக நடந்துகொள்ளலாமா?

இமாசலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தவேண்டிய காலம் ஒரே மாதிரி இருக்கையில், இமாசலப் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்து, குஜராத்துக்கு அறிவிக்காதது - அரசியல் நோக்கம் கொண்டது. பிரதமரின் தேர்தல் பிரச்சார வசதிக்கான ஏற்பாடு இது என்று தேர்தல் ஆணையத்தின் மேனாள் ஆணையர் குற்றச்சாட்டை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அடுத்த மாதம் மாநில சட்டமன்றங்களுக்கு நடை பெறவேண்டிய தேர்தல், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் ஆகும்.

நேற்று (14.10.2022) இமாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி, அத்துடன் சேர்த்து ஏன் அறிவிக்கப் படவில்லை என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களிலும், ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி போன்ற சட்ட வல்லுநர்களாலும் எழுப்பப் பட்டு வருகிறது!

குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்?

‘‘சென்ற முறை இரண்டு மாநிலங்களுக்கும் நடை பெற்ற தேர்தல் தேதியை (2017 இல்) ஒரே தடவையில் தானே நாங்கள் அறிவித்தோம்; இரண்டு அரசுகளின் பதவிக்காலமும் ஏறத்தாழ ஒரே நேரத்தில், சில நாள்கள் இடைவெளியில் முடிவடையும் நிலையில், இப்போது குஜராத்துக்கு மட்டும் ஏன் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை'' என்பது நியாயமான கேள்வி மட்டுமல்ல; மில்லியன் டாலர் கேள்வியுமாகும்!

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட முடியும்; ஆனால், அதே அளவு - உறுதியான நம்பிக்கை, குஜராத்தைப் பொறுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களுக்கு இன்னும் ஏற்படவில் லையோ என்ற அய்யமே அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது!

‘குஜராத் மாடல்' என்னாச்சு?

‘குஜராத் மாடல்' - ‘வளர்ச்சி மாடல்' என்று மார்தட்டி வந்த நிலையில், அங்கே மக்களிடம் - அங்கே ஆளுங் கட்சியாக உள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சிமீது அதிகமாக எதிர்ப்பு, அதிருப்தி மேகங்கள் படர்ந்துள்ள நிலை காரணமாகவே, பிரதமரின் சொந்த மாநிலமும் அது என்பதால், அங்கே ‘எப்படியாவது'  வெற்றியைப் பெற்றாகவேண்டும் என்பதால், ஆழமாக யோசிப்ப தோடு, கடும் எதிர்ப்பு மக்களிடையே இருப்பதைத் தெரிந்து சில கருத்துக் கணிப்பு என்றெல்லாம் ‘‘ஜூம்லா'' வித்தைகளையும் நடத்தி வருவது வாடிக்கைதான்!

பஞ்சாபைப் போல அங்கே ‘ஆம் ஆத்மி கட்சி'யின் பிரச்சாரம் கடுமையாக இருக்கிறது. குஜராத்தில், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். எதை உருவாக்கித் தேர்தலில் எதை மூலதனமாக வைத்திருந்தார்களோ, அந்த மூலதனமான ‘ஹிந்துத்துவ வித்தைகளை' அப்படியே ‘லபக்' என்று ஆம் ஆத்மி கட்சி பறித்துக்கொண்டதோடு, 5 ஆண்டு கள் ஆட்சியின் மீது உள்ள மக்களின் எதிர்ப்பு - அதிருப்தியை தம்வசமாக்கி, பல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிடுவதை கூடுதல் வித்தையாக்கிக் கொண்டு, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பாய்ந்து வருவது - பா.ஜ.க. தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு வருகிறது என்ற நிலையே தென்படுகிறது!

காங்கிரசின் தேர்தல் பணிகள் - 

பி.ஜே.பி.,க்கு வயிற்றுக் கலக்கல்!

மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள், தேர்தல் பணிகள் ஆரவாரமின்றி, வீடுதோறும் சென்று வாக் காளர்களைச் சந்திக்கும் நிலை வலிமையாக நடை பெறுகிறது.

இதைப் பிரதமர் மோடியே, பா.ஜ.க.வினருக்குச் சுட்டிக்காட்டி, நீங்களும் மக்களைச் சந்திக்க குஜராத்தில் ‘யாத்திரை' செல்லுங்கள் என்று ஏவிவிட்டுக் கொண்டி ருக்கிறார்! ராகுலின் நடைப்பயணத்தைக் கேலி செய்த வர்கள், இப்போது குஜராத்தில் அதைத்தான் செய் கிறார்கள்!

பா.ஜ.க. ஆதரவு ஏடுகள் இதை மூடிமறைத்தாலும், அங்குள்ள மக்கள் மாற்றம் விரும்பி எதிர்க்கட்சிக்கு வாக்களித்து விடுவார்களோ என்று அஞ்சி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை ‘‘இவர்கள், அர்பன் - நகர்ப்புற நக்சல்கள்'' என்று ஒரு குற்றச்சாட்டினைக் கூறி, அவர் கள்மீது நடவடிக்கை பாயும் என்றெல்லாம் மிரட்டிடும் நிலைக்கும் ஆளாகியிருப்பது பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு நாளும் குறைந்து வருகிறதோ என்ற அய்யத்தின் வெளிப்பாடேயாகும்!

பா.ஜ.க.வின் ‘‘பழைய வித்தைகள்'' இத்தேர்தலில் எடுபடுமா? என்பதும் மிகப்பெரிய ‘ஆரூடத்திற்கு' ஆளாகியுள்ளது!

பி.ஜே.பி. ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி

விஷம்போல் ஏறிவரும் விலைவாசிகள் - பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு 7.8 சதவிகிதம் - இந்தியப் பணம் நாளும் மதிப்புக் குறைந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு 82.75 ரூபாய் என்று கொடுக்கவேண்டி இருப் பதால், நமது இறக்குமதியைக் கொண்ட பொருளா தாரமோ கீழிறக்கம்!

பரவலான வேலையில்லா திண்டாட்டம் இளை ஞர்கள் மத்தியில் - முன்பு கூறப்பட்ட ‘குஜராத் மாடல்' என்பது வெறும் ‘கானல் நீராகி' விட்டது என்பதை இளைஞர்கள் உணர்ந்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரே அதிருப்தி

பசிப் பிணிப் போக்கும் நாடுகள் வரிசையில் இந்தியா - நம் நாடு, உலகத்தின் 121 நாடுகளின் (Global Hunger Index) பட்டியல் வரிசையில் 107 ஆவது இடத்தில் பின்னால் இருப்பது வளர்ச்சியின் அறிகுறியா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களேகூட, மோடி ஆட்சியின் குறைபாடுகளை வெளிப்படையாகப் பேசித் தீரவேண் டிய நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும் - பா.ஜ.க. மோடி அரசுக்கும் ஒரு ‘மவுனமான பனிப் போர்' நடைபெற்று வருகிறது!

அதனால், குஜராத் தேர்தலுக்கு இம்முறை புதிய வித்தைகளைக் கையாளவேண்டும் என்பதால், ஒருவேளை இந்தத் தேர்தல் தேதி அறிவிப்பு காலதாமதம் ஆகிறது போலும்!

எப்படி இருந்தாலும், முன்புபோல, எல்லாக் காலத்திலும் எல்லா வித்தைகளும் பலிக்குமா? என்பதும் விவரமறிந்தவர்கள் கேட்கக்கூடிய கேள்விதான்.

பிரதமரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏற்ப...

பிரதமரின் தேர்தல் பிரச்சார வசதிக்கேற்ப பல கட்டங்களாகக் கூட தேர்தல் நடைபெறுவது உண்டு. எடுத்துக்காட்டு, முன்பு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பல கட்டங்களில் நடந்தது!

ஆனால், ‘‘எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லையே'', அங்கே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.10.2022


No comments:

Post a Comment