தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பெரியார் ஓர் இன்ஸ்பிரேசன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பெரியார் ஓர் இன்ஸ்பிரேசன்!

இன்றைக்கு லட்சோப லட்சக்கணக்கான இளைஞர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இன்ஸ்பிரேசன்!

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழாவில்  

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை

சென்னை, அக்.9  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்குப் பெரியார் ஒரு இன்ஸ்பிரேசன்; நமக்கெல்லாம் இன்றைக்கு, லட்சோப லட்சக்கணக்கான இளைஞர் களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்ஸ் பிரேசன்.  நமக்கெல்லாம் ஓர் உள்ளீட்டு உணர்வை ஊட்டக்கூடியவராக - அவரைப் பார்த்து நாங்கள் இன்று கற்றுக்கொள்கிற அந்த உணர்வு, அந்த ஈர்ப்பு - அதுதான் இன்ஸ்பிரேசன் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்கள்.

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய 

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்‘’ நூல் வெளியீட்டு விழா

கடந்த 3.10.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்‘’ நூல் வெளியீட்டு விழாவில், நூலைப் பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சமூகத்தில் ஓர் அந்தஸ்து என்பார்களே, அப்படி ஒரு சமூகத் தகுதியும், தீண்டப்படாதவர் என்கிற நிலை இல்லாமல், அப்படி ஒரு வன்கொடுமை நிலையை சந்திக்கக் கூடிய சூழல் இல்லாமல், ஒரு மரியாதைக்குரிய குடும்பம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த சமூக இருப்பிலே அவருக்குப் பிறப்பிடம் அமைந்தது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கேகூட பொறுப்பிற்குப் போயிருக்க முடியும்

ஆகவே, அவர் வழக்கம்போல, சராசரி மனிதராக அவரால் வாழ்ந்திருக்க முடியும். அவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவராக வாழ்ந்திருக்க முடியும். இன்னும் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்திருக்க முடியும். முயற்சி செய்திருந்தால், திருப்பதி தேவஸ் தானத்திற்கேகூட பொறுப்பிற்குப் போயிருக்க முடியும்.

அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருந்தால், அந்தத் தளத்தில் ஒரு பெரிய சாதனையைப் படைக்கக் கூடியவராக உயர்ந்திருக்க முடியும்.

அவரே ஒரு மடாதிபதியாகக்கூட மாறியிருக்க முடியும்

எல்லோரும் தம்மை வழிபடக் கூடிய அளவிற்கு, அவரே ஒரு மடாதிபதியாகக்கூட மாறியிருக்க முடியும்.

ஆனால், எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு, அவர் உழைக்கின்ற மக்களின் மீட்சிக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார்.

உழைக்கின்ற மக்களின் விடுதலைக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு எண்ணிக் கையில் மிக மிக சிறுபான்மையாக இருக்கக்கூடியவர்கள், மிகப்பெரும் சமூகத்தினரை, உழைக்கின்ற மக்களை இப்படி ஏய்த்துப் பிழைக்கிறார்களே, இவர்களும் இப்படி ஏமாந்து கிடக்கிறார்களே, தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதைக்கூட உணர முடியாத அளவிற்கு, அடிமைச் சேற்றில் உழலுகிறார்களே, இவர்களை மீட்பது எப்படி? என்கின்ற கவலை அவருக்கு மேலிட்டதின் விளை வாகத்தான், அவரிடத்தில் ஒரு விடுதலை கருத்தியல் தோன்றியது - விடுதலைக்கான பார்வை தோன்றியது. அந்தப் பார்வை வள்ளுவனின் பார்வைதான் - வள்ளு வத்தின் பார்வைதான்.

ஈரோட்டுப் பெரியார்  - நம்முடைய ஈரோட்டு திருவள்ளுவன் - அய்யன் ஈ.வெ.ரா.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அய்யன் திருவள்ளுவன் சொன்ன அதே கருத்தைத்தான் - ஈரோட்டுப் பெரியார்  - நம்முடைய ஈரோட்டு திருவள்ளுவன் - அய்யன் ஈ.வெ.ரா. ‘‘பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றுதான் உரத்து முழங்கினார்.

பிறப்பால் என்ன உயர்வு - தாழ்வு? என்றார். இந்தக் கேள்வியைத்தான் அய்யன் திருவள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு எழுப்பினார். அந்தக் கேள்வியைத்தான் நம்முடைய அய்யா தந்தை பெரியார் எழுப்பினார்.

நாம்கூட இப்படிச் சொல்லிக் கொள்ளலாம்; அய்யன் திருவள்ளுவர்தான் ஈரோட்டில் பெரியாராகப் பிறந் திருக்கிறார்; ‘அவதாரமாகப்' பிறந்திருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால். நமக்கு அந்த நம்பிக்கை கிடையாது.

‘தல புராணம்' எழுதிவிடுவார்கள் என்று ஆசிரியர் அவர்கள் சொல்கிறார்.

ஏனென்றால், அண்ணன் பிரபாகரன் அவர்களையே, முருகன் அவதாரம் என்று சொல்லக்கூடிய நம்பிக்கையாளர்களும் இருக்கிறார்கள். அவருக்கு முருகன்மீது பற்று உண்டு. ஆனால், அவரையே, முருகன்தான் இங்கே அண்ணனாகப் பிறந்துவிட்டார் என்ற நம்பிக்கை நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.

பெரியார் எப்படிப்பட்ட பரிமாணம்? எப்படிப்பட்ட பரிணாமம்?

அப்படிப்பட்ட இம்மை - மறுமை என்கிற கருத்துகளில் உடன்பாடு இல்லாதவர்; அது அறிவியலுக்கு முரணானது என்கிற கருத்தைக் கொண்டவர்.  ஓர் ஆன்மிக நம்பிக்கையுள்ள, ஆர்த்தோடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல் வார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த, பெரியார் எப்படிப்பட்ட பரிமாணம்? எப்படிப்பட்ட பரிணாமம்? எவ்வளவு பெரிய டிரான்ஸ்ஃபார்மேசன்? 

நமக்கு பெரியார் ஓர் இன்ஸ்பிரேசன்; பெரியாருக்கு யார் இன்ஸ்பிரேஷன்? ஓர் ஆசிரியர் அவர்களுக்குப் பெரியார் ஓர் இன்ஸ்பிரேசன்; நமக்கெல்லாம் இன்றைக்கு, லட்சோப லட்சக் கணக்கான இளைஞர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்ஸ்பிரேசன்.  நமக்கெல் லாம் ஓர் உள்ளீட்டு உணர்வை ஊட்டக்கூடியவராக - அவரைப் பார்த்து நாங்கள் இன்று கற்றுக்கொள்கிற அந்த உணர்வு, அந்த ஈர்ப்பு - அதுதான் இன்ஸ்பிரேசன்.

காந்தியாரைப் பார்த்து, உங்களுடைய இன்ஸ்பிரேசன் யார்? என்று கேட்டபொழுது, அவர் லியோ டால்ஸ் டாயை சொன்னார்.

விவேகானந்தரைப் பார்த்து உங்களுடைய இன்ஸ்பிரேசன் யார்? என்று கேட்டபொழுது, அவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் என்று சொன்னார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்ப்பு!

அப்படி ஒவ்வொருவருக்கும் ஓர் ஈர்ப்பு; ஒரு தலைவரை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்களுடைய கருத்தை உள்வாங்கிக் கொண்டு இயங்குவது - வாழ்வது என்பது உண்டு.

பெரியார் எப்படி இப்படி ஒரு பரிணாம மாற்றத்திற்கு உள்ளானார்?

பரிணாமம் என்பது வேறு; பரிமாணம் என்பது வேறு.

பரிமாணம் என்பது டைமன்சன்; பரிணாமம் என்பது எவாலுசன்.

பரிணாமம் என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவது; ஒன்றிலிருந்து இன்னொன்று. ஒரு நிலையிலிருந்து, இன்னொரு நிலைக்கு மாற்றம் அடைவது.

பூவாய் இருப்பது, காயாய் மாறுவது; காயாய் இருப்பது, பழமாக மாறுவது. அதனுடைய தன்மையிலிருந்துதான் இன்னொரு தன்மையை உள்வாங்கிக் கொள்கிறது. இன்னொரு வடிவமாகிறது; ஒரு புதிய வடிவத்தை எடுக்கிறது.

ஆக, ஆன்மிகத்திலிருந்து பெரியார் வந்திருந்தால், அடுத்து அவர் பெரிய மடாதிபதியாகி இருக்கவேண்டும்; மடாதிபதிக்குப் பிறகு அவர் மகாத்மா ஆகியிருக்கவேண்டும்; மகாத்மாவிற்குப் பிறகு, ஜெகத்குருவாக ஆகியிருக்கவேண்டும்.

பெரியாருக்குள் நடந்த மாற்றம் ஆய்வுக்குரியது!

அதுதான் ஒரு நேர்க்கோட்டில்  நிகழ்கிற டிரான்ஸ்ஃபார்மேசன்; ஆனால், ஓர்  ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்து, அவர் அப்படியே முற்றிலும் மாறுபட்டு, எதிர்மறையாக இன்னொரு வடிவம் பெறுகிறார் என்றால், அவர் உள்ளுக்குள் நடந்த மாற்றம் ஆய்வுக்குரியது. அந்த நேரம், அந்தக் காலம் என்பது ஆய்வுக்குரியது. அந்தப் பருவம் ஆய்வுக்குரியது.

அவருக்கு எது அந்த உணர்வைத் தந்தது?

ஆகவே, இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த சமூகம், ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவது.

பெரியார் மண்ணாக இருப்பது, திடீரென்று சங்கராச்சாரி மண்ணாக தமிழ்நாடு மாறலாமா?

சமூகநீதி மண்ணாக இருப்பது, சனாதன மண்ணாக மாறலாமா?

பெரியார் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த தேசத்தில், இனி ‘ஜெய் சிறீராம்' என்று முழக்கமிட நாம் அனுமதிக்கலாமா?

நல்ல மாற்றம் ஏற்படுவது வேறு. ஆன்மிகத் தளத்திலிருந்து, பகுத்தறிவு தளத்தை நோக்கி நடந்தது ஒரு முற்போக்கான வளர்ச்சி.

ஆனால், ஒரு பகுத்தறிவாளனாக இருந்து, மறுபடியும் அவர் இன்னொரு நம்பிக்கைக்கு, அறிவியலுக்கு முரணான நம்பிக்கைக்கு மாறுகிறான் என்றால், அது வீழ்ச்சி - அதுதான் பிற்போக்குத்தனம்.

இது முற்போக்கான மாற்றம் - அது பிற்போக்கான மாற்றம்.

ஆக, சமூகநீதி வாழ்க; ஜனநாயகம் வெல்க!

பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, காமராசர் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த மண்ணில், இனிமேல், ‘‘பாரத் மாதாகி ஜே!'' ‘‘ஜெய் சிறீராம்'', ‘‘ஜெய் அனுமான்'' போன்ற முழக்கங்களைக் கேட்கப் போகிறோமா?

தமிழ்நாட்டை இப்படி மாற்றத் துடிக்கிறார்களே, அதை அனுமதிக்கப் போகிறோமா?

மதத்தின் பெயரால் வன்முறைக்கு வித்திடுகிறார்களே, அந்த வன்முறைக் களமாக தமிழ்நாட்டை மாற்ற  அனுமதிக்கப் போகிறோமா?

This is a Transformation Period

ஒரு  பிற்போக்குவாதக் கும்பல், சனாதனக் கும்பல், சமூகநீதிக்கு எதிரான கும்பல், மதவெறியை மூலதன மாக்கி, அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கின்ற கும்பல். ஜாதி உணர்வைத் தூண்டிவிட்டு, மக்களை ஜாதியின் பெயரால் பிளவுபடுத்தி, நிலைப்படுத்த விரும்புகிற, தொடர்ந்து நிலைப்படுத்த விரும்புகிற கும்பல் - இங்கே கலாச்சார இயக்கம் என்ற பெயரால், பேரணி நடத்த முயற்சிக்கிறார்களே, என்ன தேவை வந்தது? எதற்காகப் பேரணி?

அடிப்படை வசதி வேண்டியா?

குடிநீர் வேண்டும் என்று கேட்டா?

மனைப் பட்டா வேண்டும் என்று கேட்டா?

சென்னை பெருநகரத்தைத் தூய்மையாக வைத் திருங்கள்; எல்லோருக்கும் கழிப்பிட வசதியை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டா?

சென்னையின் பூர்வீகக் குடிகளை புறநகருக்கு அள்ளிக்கொண்டு போய் கொட்டாதீர்கள்; அவர்களுக்கு இங்கே இருப்பிடம் கட்டித் தாருங்கள்; அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டித் தாருங்கள் என்று கேட்டா?

கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் இழப்பீடு தாருங்கள் என்று கேட்டா?

அனைத்து முதியோர்களுக்கும், முதியோர் தொகை வழங்குங்கள்; ஆண் பிள்ளை இருந்தாலும், பெண் பிள்ளை இருந்தாலும், கவனிக்கப்படாமல் இருக்கின்ற முதியோர் அனைவருக்கும், முதியோர் உதவித் தொகை தாருங்கள் என்று கேட்டா?

அவர்கள் நடத்துகின்ற பேரணி எதற்காக?

கிராமப்புறங்களை, பெரிய நகரங்களோடு இணைக்க வேண்டும் என்று, இணைப்புச் சாலைகளைக் கேட்டு அவர்கள் பேரணியை நடத்துகிறார்களா?

அவர்கள் நடத்துகின்ற பேரணி எதற்காக?

என்ன கோரிக்கையை வைக்கிறார்கள்?

‘ஜெய் சிறீராம்' என்கிற முழக்கத்தை விதைப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம்.

‘ஜெய் அனுமான்' என்கிற முழக்கங்களை இந்த மண்ணின் மக்களின் வாயிலிருந்து வரவழைப்பதற்கு இளந்தலைமுறையைத் தயார்படுத்துவதற்குத்தான் அவர்களின் முழக்கம்.

ஓர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் தோழர்களே! 

பெரிய வெட்கக்கேடு, புதுச்சேரியைச் சார்ந்த அமைச்சர்கள் மூன்று பேர், அரைக்கால் சட்டையைப் போட்டுக்கொண்டு, கையில் காவிக்கொடி ஏந்திக் கொண்டு நேற்று பேரணியில் நடந்து போயிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டப்படி உறுதிமொழி ஏற்றவர்கள், ஓர் இயக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, அரைக்கால் சட்டையைப் போட்டுக்கொண்டு பேரணி யில் நடந்து போயிருக்கிறார்கள்.

ஓர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் தோழர் களே! முற்போக்கான நிலையிலிருந்து, இன்னொரு அடுத்தகட்ட முற்போக்கான நிலைக்குப் பரிணாமம் அடைவது என்பதுதான் முற்போக்கான வளர்ச்சி.

மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதுதான் முற்போக்கான வளர்ச்சி

21 ஆம் நூற்றாண்டில் இருக்கின்ற நாம், 22 ஆம் நூற்றாண்டை நோக்கி, அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் வளர்ச்சியடையவேண்டும்; இலக் கியத் தளங்களில் வளர்ச்சியடையவேண்டும்; நம்முடைய வாழ்க்கை முறையில் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதுதான் முற்போக்கான வளர்ச்சி.

இவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சமூக விலங்கை மறுபடியும் இங்கே கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறார்களே!

ஆட்சி முறை, ஜனநாயக முறைப்படி இருக்காது; வருணாசிரமப்படிதான் இருக்கும் என்று சொல் கிறார்களே!

வரும்பொழுது ஒரு வீடியோவைப் பார்த்தேன்; இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவன் பேசுகிறான்.

(தொடரும்)


No comments:

Post a Comment