கன்னட மொழி வாழ்த்துப்பாவில் பார்ப்பன துதியாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

கன்னட மொழி வாழ்த்துப்பாவில் பார்ப்பன துதியாம்!

கருநாடகத்தில் கன்னட மொழி வாழ்த்துப் பாடலில் பார்ப்பனர்களை வாழ்த்தும் வேறு பாடலில் உள்ள சில வரிகளைச் சேர்த்து இரண்டரை நிமிடம் ஓடுவ தற்கு அம்மாநில பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி  அரசாணை வெளியிட்டு இருந்தது. 

மைசூருவை சேர்ந்த மறைந்த அனந்தசுவாமி அமைத்திருந்த இசையை இறுதி செய்து, அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் கன்னட திரை இசைஅமைப்பாளரும் ஹிந்துத்வ ஆதர வாளருமான சி.அஸ்வத் இசையையும் சேர்த்திருப் பதாக, அரசால் அமைக்கப்பட்ட குழு தெரிவித்திருந்தது.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கன்னட மொழி வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் அனந்தசுவாமியை அரசு அவமரியாதை செய்திருப்பதாகவும், எனவே கடந்த செப். 25-ஆம் தேதி பிறப்பித்த அரசின் உத் தரவுக்குத் தடை விதிக்கக்கோரியும் இசையமைப்பாளர் கிக்கேரி கிருஷ்ணமூர்த்தி கருநாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கருநாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கன்னடத் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி, அரசுக்கு விளக்கம் கேட்டு, அறிக்கை அனுப்ப நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சி. அஸ்வத் - திரையிசையமைப்பாளர் - தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர், இவரது பாடல்கள் பல குறிப்பிட்ட பிரிவினரையும், அவர்களது கலாச் சாரத்தையும் போற்றுவதாகவே அமைந்துள்ளன. 

இந்த நிலையில், இவரது பாடலின் வரிகளையும் கன்னட மொழி வாழ்த்துப்பாடலில் சேர்த்து கன்னட மொழி உணர்வை சிதைக்கப் பார்க்கிறது  - கருநாடகாவை ஆளும் பாஜக அரசு என்று அம்மாநில மொழி உணர்வாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசின் அதிகாரப் பீடத்திலும், பல மாநிலங்களிலும் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி அமைந்தாலும் அமைந்தது - அந்தக் கண முதற் கொண்டே ஆரிய ஆட்சி தலைகால் புரியாமல் துள்ள ஆரம்பித்து விட்டது. மனுதர்மம் தான் அவர்களின் அறிவிக்கப்படாத அரசமைப்புச் சட்டமாக உருவாகி விட்டது.

குருஜி கோல்வால்கரின் 'ஞான கங்கை' (Bunch of Thoughts) நூலில் மனுதர்மம் தான் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு ஏற்றது, மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஒரு முறை குறிப்பிட்டார். "கீதையை தேசிய நூலாக ஆக்குவ தற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன; அறிவிப்பதுதான் பாக்கி" என்று கூறிடவில்லையா?

கன்னட வாழ்த்துப் பாடலில் பார்ப்பன துதி எங்கிருந்துவந்தது? இப்போது எல்லாம் பார்ப்பான் பிரச்சினை எங்கிருக்கிறது என்று எகிறிக் குதிக்கும் பார்ப்பனர்களும், அவர்களின் அடியாள்களான  குரங்கு (அனுமார்) கூட்டமும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 

ஏற்கெனவே கருநாடகாவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டு விட்டது; இப்பொழுது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகிறார்கள். நடக்கட்டும் - நடக்கட்டும். அப்பொழுதுதான் 'திராவிட மாடல்' எங்கெங்கும் நிலை கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்!  

No comments:

Post a Comment