தீட்சதர்கள் தில்லுமுல்லும் தில்லை சிவகாமி அம்மன் கோயிலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

தீட்சதர்கள் தில்லுமுல்லும் தில்லை சிவகாமி அம்மன் கோயிலும்

முனைவர் பேராசிரியர் 

ந.க. மங்களமுருகேசன்

சக்தி வழிபாடு செய்பவர்கள் மதுரையிலே மீனாட்சி, காஞ்சியிலே காமாட்சி, தில்லையிலே சிவகாமி, காசியிலே விசாலாட்சி என்று குறிப் பிடுவர். எனவே, தில்லை திருக்கோவில் எப்படிச் சோழர்கள் கட்டுவிக்கப் பார்ப்பனத் தீட்சதர்கள் புகுந்து உரிமை கொண்டாடுகின்றனரோ, அதுபோல் சிதம்பரம் நடராசர் கோயிலிலுள் ளேயே, நடராசர் எனும் ஆடவல்லான் எனும் பொன்னம்பலத்தான் என்னும் ஈசனின் துணைவி சிவகாமி என்பர்.

பெரும்பாலும் கோயில்களில் இறைவிக்குத் தனிச்சந்நிதி அல்லது தனிக்கோயில் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். மதுரையில் அங்கையற் கண்ணிக்கும், ஆலவாய் அண்ணல் எனும் சுந்தரேசுவரருக்கும் தனித்தனிச் சந்நிதி போல் திருவானைக் கோவில் - நெல்லை காந்திமதி கோவில் ஆகியவற்றிலும் தனிச்சந்நிதி  - தனிவாயில் உண்டு.

அந்த மரபிற்கேற்ப ‘கோயில்’ எனச் சைவசமயப்பிரிவினர் போற்றும் தில்லை நடராசர் கோயில் வளாகத்தில் சிவகாமி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்தத் தில்லைக் கோயிலைப் போலவே சிவகாமி அம்மன் கோயிலுக்கும் தீட்சதத் திருமேனிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

இங்கேயும் உட்புகுந்துவிட்டனர் தீட்சதர்கள் என்பதே உண்மை. சிவகாமி அம்மன் கோவிலில் வைத்துத்தான் தீட்சதர் ஆத்து மடிசார் மாமிகள் தங்கள் இந்துப் பெண்களுக்கு வளைகாப்பு, பூச்சூடல், சீமந்தம் நிகழ்வுகளை நடத்துகின்றனர்.

இந்தத் தில்லைக் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் கோயிலை யார் கட்டியவர் என்பதற்கு வரலாற்று ஆதாரம் வகை வகையாய் உள்ளது. தில்லைச் சிவகாமி அம்மன் கோயிலை விக்கிரம சோழர் எனும் சோழ மன்னன் காலத்தில் ‘அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங் கராயன்’ என்னும் நரலோக வீரன் என்பவர் கட்டினார் என்பதற்குப் பட்டயச்சான்று உள்ளது. ‘முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்’ எனும் நூலைப் படைத்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் தம் நூலில் எடுத்துக்காட்டியும் இருக்கிறார்.

இக்கோயில் முகப்பிலுள்ள சொக்கட்டான் மண்டபம் திருவண்ணாமலை ஆதினத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை வைத்தியலிங்கப் பண்டாரம் என்பவர் சக ஆண்டு 1711-இல் கட்டிய செய்தியையும் இங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது.

தில்லைக் கோவில் வரலாறு எழுதிய தமிழறிஞர் முனைவர் வெள்ளை வாரணம் இம்மண்டபத்தை ஒட்டியுள்ள கோவில் கோபுரவாயில், ‘அந்தப்புர பெருமாள் திருவாசல்’ எனும் பெயர் கொண்டு உள்ளதைக் கூறுகிறார்.

இக்கோயில் சொக்கட்டான் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் வரும் வைத்தியலிங்கத் தம்பிரான் உருவமே முன் மண்டப ஓவியத்தில் பெரிய வடிவில் கூடிய தம்பிரான் உருவம் எனத் தொல்லியலாளர் பகர்கின்றனர். தொல்லியல் நோக்கில் தமிழகம் எனும் நூலில் ‘சிதம்பரம் சிவகாமி அம்மன் கோயில் ஓவியங்கள் -  மறுபார்வை' எனும் தலைப்பில் கட்டுரை வரைந்த சிதம்பரம் ச. கிருஷ்ணமூர்த்தி. சிவகாமி கோயிலின் விதானத்தில் உள்ள ஏராளமான ஓவியங்கள், புராணக்காட்சிகள், கோயில் கோபுரங்கள், மாணிக்கவாசகர் வரலாறு, தம்பிரான்கள் உருவங்களையும் காட்டுவதை அடிப்படையாகக் கொண்டு, ஓவியங்களின் அடிப்படையில் ஆதினங்களுக்கும், இத்திருக் கோயிலுக்குமிடையேயான தொடர்பைக் காட்டுகின்றன.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இக்கோவி லுக்கும் தொடர்பு இருந்துள்ளது - ஆதினகர்த்தர் ஓவிய உருவத்தின் கீழ் ‘அம்பலவாணர் சதா சேர்வை’ எனும் இருவரிகள் உள்ளன.

திருவாவடுதுறை ஆதீனங்கள் அம்பல வாணர் எனும் பெயரினைச் சூடிக்கொள்வது தொன்று தொட்டு வரும் வழக்கம்.

அதாவது பெரிய பட்டம் எனும் பட்டத்தில் இருப்பவர்களை ‘நமசிவாயம்’ எனவும், சிறிய பட்டத்தில் இருப்பவர்களை அம்பலவாணர் எனவும் அழைப்பர். திருவாவடுதுறை செப்பேடு களில்  அம்பலவாண அய்யர், அம்பலத்தடி, அம்பல வாணர் ஆகிய பெயர்கள் குருமகாசந் நிதானம் என்போரைக் குறிக்கக் காணலாம்.

திருவாவடுதுறை ஆதினங்கள் மழித்த தலை, தலையில் உருத்திராட்ச மாலை, கழுத்திலும், கையிலும் தனித்தனியாக உருத்திராட்ச மாலைகள் கொண்டிருப்பர். சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் உள்ள அம்பலவாணர் உருவமும் ஓவியத்தில் அவ்வாறே இருக்கின்றது.

தில்லை வாழ் அந்தணர்கள் பூஜை செய்த வர்களே என்பதற்குரிய ஆதாரத்தை திருவாவடு துறை ஆதீன மடத்தின் வரலாற்றுச் செய்தி ஒன்றின் வாயிலாகவும் அறிகிறோம். சிதம்பரம் நடராசர் கோயிலுக்கும் ஆதீனத்திற்கும் நெருங் கிய தொடர்பு இருந்திருக்கிறது. சபாநாயகருக்கு உரிய வருவாயைக்கூடப் பெற முடியாதவர்களாக தீட்சதர்கள் இருந்துள்ளனர். வேலூரின் விருப் பாட்சிராயர் ஆட்சி புரிந்த காலத்து நிகழ்வு இது என்பதை மடத்தின் வரலாறு வாயிலாக அறியலாம்.

விருப்பாட்சிராயர் ஆணையினால் நடு நாட்டை ஆண்டு வந்த ஒரு வடுகன் சிதம்பரம் வந்திருக்கிறான். நடராசருக்கு அன்றாடம் நடந்து வந்த நித்திய வழி பாட்டுச் சிறப்புகளைக் கண்டு வைணவனான அவன் பொறாமை கொண்டு, தில்லை நடராசருக்கு வந்த வருவாயைத் தில்லைக் கோவிந்தராஜருக்கு வழங்கினான் வழிபாடு செய்து வந்த தில்லைவாழ் அந்தணர்கள்,  இது குறித்து திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகர் நமசிவாய தேசிகரிடம் கூறியுள்ளனர். இது ஒன்றே இவர் களுக்கு உரிமை இல்லை என்று காட்டும்.

நமசிவாயர் தம் சீடர் சிவப்பிரகாசரை வேலூ ருக்கு அனுப்பி அவர் விருப்பாட்சிராயரிடம் எடுத்துச் சொல்லி நடராசருக்கு உரிய வருமானத்தினை மீண்டும் நடராசருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளான். விருப்பாட்சிராயரின் முதல் அமைச்சர் சிவிங்கண பந்தர் வழி முயன்று மன்னரின் ஆணையைப் பெற்றார் என்பதை மடத்தின் வரலாறு கூறுகிறது.

ஆதீனத்து ஒவ்வொரு தேசிகரும் நடராசரை வழிபட்டுள்ளனர். அது மட்டுமின்றி - சிதம்பரம் நடராசர் கோயில் இரண்டாம் திருச்சுற்றில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கென்று தனி அறை இன்றும் இருக்கிறது. ஆதீனத்தின் கட்டளையும் கோயிலுக்குண்டு.

சிதம்பரம் உமாபதி சிவம் வழிபட்ட நடராசர் திருமேனியே திருவாவடுதுறை ஆதின கர்த்தர் களால் இன்று வரை தினமும் வழிபடப்பெறுகிறது என்பதற்கு திருச்சிற்றம்பல தேசிகரின் கலம்பகம் என்ற நூலும் சான்றாகும்.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தின் முயற்சியால் இங்குள்ள ஓவியங்கள் தீட்டப் பெற்றுள்ளன.

இவ்ஓவியங்களில் ஒரே ஒரு ஓவியத்தின் மீதே தில்லை மூவாயிரம் பேருக்கும்  தரிசனம் என்ற ஒரே ஓவியத்தில் அந்தணர் இடம் பெறுகின்றனர். 97 ஓவியங்களில் ஒன்றில் மட்டும் அதுவும் தரிசனம் அளித்த செய்தி காண்கிறோம். உண்மை இவ்வாறு இருக்க ஒண்டவந்த பிடாரிகள், குனிந்து பணிந்து வழிபட வந்தவர்கள் உரிமை கொண்டாடுவது எப்படிச் சரியாகும்?

No comments:

Post a Comment