நூல் மதிப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

நூல் மதிப்புரை

ஜானகி எம்.ஜி.ஆர். - நாடாண்ட முதல் நாயகி

- குமார் ராஜேந்திரன்,

இனியன் பதிப்பகம்,

பக்கங்கள்: 240      விலை: ரூ.250/-

இந்நூல் ஒரு தனி நபராலோ, எழுத்தா ளராலோ எழுதப்பட்ட நூல் அல்ல. இது ஒரு தொகுப்பு நூல். கதம்ப மாலை. எனவே, இந்நூலில் நுண்மான் நுழைபுலம் மிகுந்த கருத்துச் செறிவுகளையோ, தத்துவ விளக் கங்களையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு தனி நபரைப் பற்றியும் அவரைச் சார்ந்தவர்கள் பற்றியுமான சில பல சம்பவங்களையும் அவர்களின் பொதுவான குணாதிசயங்களைப் பற்றியும் சொல்லும் ஒரு நூல். இந்நூலைத் தொகுத்தளித் துள்ளவர் வழக்குரைஞர் குமார் ராஜேந் திரன். இந்நூலின் கதாநாயகியான ஜானகி இராமச்சந்திரன், குமார் ராஜேந்திரனின் தாய் வழித் தாத்தாவின் உடன் பிறந்த சகோதரி. புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டுமாயின் இவருடைய தாயின் அத்தைதான் ஜானகி. பொதுவாக பாட்டி முறை. நூலாசரியருடைய தாயார் லதாவை எம்.ஜி.ஆர். ஜானகிதான் வளர்த்து கல்வி புகட்டி, பின் வாழ்க்கைத் துணையும் பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். பின் இந்நூலா சிரியரையும் இவர்கள் வளர்த்து கல்வி கற்பித்து ஆளாக்கியதாக நூலாசிரியர் கூற்றிலிருந்து உணர முடிகிறது.

ஆக, இவரது தாயை மட்டுமன்றி இவரையும் அன்புடனும் வாஞ்சையுடனும் வளர்த்து ஆளாக்கி வாழ்க்கையில் நன்னி லையில் இருக்க உதவிய அம்மையாருக்கு நன்றி விசுவாசமாக அவருடைய புகழ் பரப்ப இந்நூலைத் தொகுத்து வழங்கி யுள்ளார். வழக்குரைஞர் தொழிலிக்கி டையே நேரம் ஒதுக்கி தன்னை ஆதரித்தவர் களின் புகழ் பரப்ப "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது" - என்ற குறட்பாவுக்கொப்ப அவர்கள் கைம்மாறு கருதாமல் செய்த உதவி யின் திறன் அறிந்து சிறு அளவிலேனும் கைம்மாறு செய்ய முனைந்த ஆசிரியரின் பண்பும், திறனும், நேர்மையும் பாராட்டத் தக்கதே.

இந்நூல் ஒரு கதம்ப மாலை என்றுதானே சொன்னேன். ஆம், பல தனிநபர்களும், கல்கி, குமுதம், நக்கீரன், குங்குமம், ராணி, தேவி, பேசும்படம் போன்று இன்னும் பலப்பல இதழ்களிலும் வெளிவந்த விமர் சனங்களையும், பாராட்டுகளையும் தொகுத் ததுதான் இந்நூல். எனவே, கதம்ப மாலை யில் எப்படி ஒரு பூ பல இடங்களில் பயன் படுத்தப்படுமோ அதேபோல் ஒரு பாராட்டோ, விமர்சனமோ, கருத்தோ பல கட்டுரைகளிலும் கூறப்பட்டு கூறியது கூறல் என்ற நிலை ஏற்பட்டிருப்பதை தவிர்க்க இயலவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

திருமதி ஜானகி அம்மையார் தந்தை பெரியார் எந்த வைக்கத்தில் தாழ்த்தப்பட் டோரின் சாலை நுழைவு, கோவில் நுழைவுக் காக ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்று வைக்கம் வீரர் என்ற அடைமொழிக்கு உரியவரானாரோ அதே வைக்கத்தில் ஒரு ஆச்சாரமான குடும்பத் தில் பிறந்தார். தந்தையார் பெயர் ராஜகோபா லய்யர், தாயார் நாராயணி அம்மாள். 1924 செப்டம்பர் 23இல் பிறந்தார். வைக்கம் என்ற ஊர்ப் பெயரையும், நாராயணி என்னும் தன் தாய்ப் பெயரையும் மட்டுமே முன்னெழுத்து களாகக் கொண்டு க்ஷி.ழி. (வி.என்.)  ஜானகி என்று அழைக்கப்பட்டார். ஆணாதிக்கம் மிகுந்திருந்த காலகட்டத்திலேயே தந்தை பெயரை முன்னெழுத்தாகக் கொள்ளாமல் தாய் பெயரை முன்னெழுத்தாகக் கொண் டது ஒரு புரட்சிதானே! மேலும் படத்துறை யிலும் பெண்ணுக்குப் பெண்ணே மேக்கப் போட வேண்டும். ஆண்கள் போடக் கூடாது என தனக்குத் தானே மேக்கப் போட்டுக்கொண்டதும் பெண்ணுரிமை நாட்டம்தானே!

இளமையிலேயே நடிக்கப் புகுந்ததுடன் நாட்டியத்தோடு வாள் பயிற்சி, சண்டைப் பயிற்சி, குதிரையேற்றமும் கற்று ஒரு புரட்சிப் பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார். `மருதநாட்டு இளவரசி' படத்தில் எம்.ஜி.ஆ ரோடு சேர்ந்து நடித்தபோதே இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். 1948 இராஜமுக்தி படத்தில் எம்.ஜி.ஆர் துணை நடிகராக அறிமுகமானபோது ஏற்பட்ட பழக்கம் 1950 மருதநாட்டு இளவரசியில் காதலாக மலர்ந் தாலும் பல சிக்கல்களும் பலதார திருமணச் சட்டமும் குறுக்கிட்டதனால் 1962இல்தான் பதிவுத் திருமணம் மூலம் சட்டப்படி தம்பதி களாயினர். அது வரையிலான இருவருக்கு மான காதல் தவிப்புகளையும், கோபதாபங் களையும் சில அத்தியாயஙகளில் நன்கு காண முடிகிறது.

பொதுவாக ஜானகியின் வள்ளல் தன் மையும், விருந்து உபசரிக்கும் தன்மையும், அவரது குடும்பப் பாங்கையும் கட்டுரைகள் சிலாகித்துப் பேசுகின்றன.

அவர் அரசியலுக்கு வர நேர்ந்ததற்கான சூழ்நிலைகளை எவ்வளவுதான் அவர் விளக்கினாலும் அந்த நிகழ்வுகளில் தமிழக அரசியல் கட்சிகளின் தனி நபர் வழிபாடும், கட்சிக்குள்ளான ஜனநாயகமும் பல்லிளிக் கத்தான் செய்கின்றன.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 97- சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் பொறுப்பேற் றாலும் 24 நாள்களில் அவர் பதவிக் காலம் முடிவுற்றதும் ஒரு சோகக் கதை என்பதோடு ஒரு தேசியக் கட்சியின் வாக்கு மீறிய செயலும் முதுகில் குத்திய துரோகமும் இந்நூல் விவரித்துள்ள அரசியல் நிகழ்வு களில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

இந்நூலின் கதாநாயகியின் தியாகமும், பொதுநோக்கும், வள்ளல் தன்மையும், அறிவு நுட்பமும் இந்நூலில் அரசியல் பேசு கின்ற கட்டுரையின் மூலம்தான் அறிய முடிகிறது. தன் கணவர் உருவாக்கிய கட்சி அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கோடு பிளவுபட்டுப் போனவர்களுக்கு விட்டுக் கொடுத்தும், தன் சொந்த சம்பாத்தியத்தில் தன் பேரில் வாங்கிய வீட்டை கட்சித் தலை மையகத்துக்குத் தந்தமையும், குழப்பமான நிலையில் கட்சி இருந்தபோது கல்கி, தாய், தேவி, ஆனந்தவிகடன், தினத்தந்தி ஆகிய இதழ்களுக்கு தட்டுத் தடுமாற்றமின்றி கேள்விகளைத் தவிர்க்கவோ, கோபப் படவோ செய்யாமல் பேட்டியளித்த பாங்கு அவருடைய அறிவுநுட்பத்தைக் காட்டு கிறது.

அரசியல் பேசும் அக்கட்டுரைகளி லிருந்து அன்றைய அரசியல் சூழலில் பல தலைவர்களின் கருத்துகளையும் இந்த ஒரு நூலிலிருந்து தெரிந்துகொள்ள முடிவதால் ஒன்றோடு ஒன்றை ஒப்புநோக்கி தெளிவு பெற முடிகிறது. இல்லையெனில் கலைஞர், திருநாவுக்கரசர், சோ, இராசீவ் காந்தி, பூடாசிங் இன்னும பல பல தலைவர்களின் அந்நேரத்தைய எண்ண ஓட்டத்தையும், அரசியல் சித்துக்களையும் சில வரிகளில் சில சொற்களில் நாம் உணர்ந்துகொள்ள வழியேது? அதற்கு இந்நூல் துணை செய்கிறது.

மேலும் ஜானகி அம்மாள் சிறந்த நிர்வாகி என்பதையும் இந்நூல் வெளிச்ச மிடுகிறது. எம்.ஜி.ஆருக்குப் பின் அவர் உயில்படி அனைத்தையும் செய்து முடித்த தோடு இன்றளவும் வாய் பேசாதோர், காது கேளாதோர் பள்ளி போன்ற அற நிறுவனங் கள் மிகச் சரியாக தனக்குப் பின்னாலும் செயல்பட வழிவகை செய்துள்ள பாங்கையும் விளக்குகிறது.

அவர் 24 நாள்களே முதல்வராக இருந்ததால் முதல் அமைச்சராக அவரது சாதனைகள் ஏதும் பேச முடியாது என்றாலும், தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற வகையில் பாராட்டலாம்.

அத்தியாயம் 42 மங்களம் வார இதழ் காது கோளாதோர் பள்ளி துவக்க விழா, தாய் இதழுக்கு வலம்புரி ஜான் பேட்டி, எம்.ஜி.ஆரின் 95ஆவது பிறந்த நாள் விழா டாக்டர் அப்துல்கலாம் கலந்துகொண்ட நிகழ்ச்சி போன்றவைகள் நடைபெற்ற தேதிகள் குறிப்பிடப்படவில்லை. மேலும், எழுத்துப் பிழைகளும் அதிகமுள்ளன. நிறைவு செய்யப்படவேண்டும்.

மற்றபடி எம்.ஜி.ஆர், ஜானகி, அவர் களது குடும்பங்கள் பற்றி அவர்கள் பண்பு கள் பற்றிய தகவல் அறிய விரும்புவோரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு பெண் வருவதற்கான சூழ்நிலைகளை அறிய விரும்புவோரும் இந்நூலை வாங்கி ஒரு முறை வாசிக்கலாம்.

- கெ.நாராயணசாமி, 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்


No comments:

Post a Comment