ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே! (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே! (3)

 எழுத்தாளர்

ஜெயகாந்தன்


கல்பனா மாத இதழின் ஆசியராக இருந்த ஜெயகாந்தன் அவர்கள் 1980 ஜனவரியில் அவ்விதழில் 'எனது பார் வையில் ஆர்.எஸ்.எஸ்' என்றத் தலைப் பில் எழுதிய கட்டுரை.

1946-1947 கால கட்டத்தில் நடந்ததை நேரடியாக பார்த்தவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தம் இளமை பரு வத்தில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்து கொண்டிருந்தது, சுதந்திரம் கிடைத்த நாளில் சுதந்திரத்தை அது கொண்டாடிய விதம், எதற்காக காந்தியை அவர்கள் தம் பரம எதிரியாக கொண்டு கொலை செய்தனர் போன்றவற்றுக்கான பதிலைத் தம் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்கிறார்.


முப்பத்தேழு வயதுடைய ஒரு பத்திரிகைக்காரன், ஹிந்து ராஷ்டிரம் என்ற பத்திரிகையின் ஆசிரியன். தனிப்பட்ட முறையில் ஓர் ஊனமுற்ற ஆத்மா இவன்.

கோட்ஸேயின் தந்தை ஒரு தபால் காரர்; சநாதன பிராமணர்; மஹாராஷ்டிர பிராமணர்களுக்கே உரிய உயர் ஜாதி மனோபாவம் உடையவர். கோட்ஸே மெட்ரிக்குலேஷன் பாஸ் பண்ண முடியாதவன் என்றாலும் மராத்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் பாண்டியத்யம் உடையவன். சிறு வயதிலேயே மாந்திரீக சக்தி நிறைந்த குழந்தையாக மதிக்கப் பட்டவன். அவன் வாழ்க்கை நடத்து வதற்குப் பலவித முயற்சிகள் மேற் கொண்டு எல்லாவற்றிலும் தோல்வி கண்டவன்.

இவன் ஆர்.எஸ்.எஸ்.இல் சேர்ந்தான். அதன் அதிதீவிரக் கொள்கைகளுக்கு இவனது வெறியுள்ளம் தன்னை அர்ப் பணித்துக்  கொண்டது. தீவிர ஹிந்து மறுமலர்ச்சியின் தோற்றத்தைக் காண் பதைவிட, அதன் எதிரிகளை ஒழிக்கிற துர்த் தேவதையாகத் தன்னை அவன் பாவித்துக் கொண்டான். அவன் வாழ்க் கையில் தேர்ந்தெடுத்த இந்தப் பாத்தி ரத்தில் தோல்வி அடைய மாட்டான் என்றே நம்பினான்! இவன் ஒரு சாமியார்த் தனம் கொண்ட நபர்; பெண்களை வெறுக்கிறவன், கண்டாலே கூசி ஒதுங் கும் சுபாவம் உடையவன். அவனது தாயைத் தவிர வேறு பெண்களை அவன் மதிப்பதோ, நேசிப்பதோ இல்லை. இவனது குருவாகவும், வழிகாட்டியா கவும், சூத்திரதாரியாகவும் திகழ்ந்தவர் வீர சவர்க்கார். புனாவில் வாழ்ந்த ஹிந்து வெறியர்கள் – சிவாஜி, பேஷ்வாக்கள் வரிசையில் வைத்து வீர சவர்க்காரைப் பூஜித்தனர்.

சவர்க்கார் ஹிட்லரைப் போலவே, தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இளைஞர்களின் நெஞ்சை அள்ளும் நாவன்மை படைத்தவர். காந்தி, நேரு போன்றே இங்கிலாந்தில் சட்டப் படிப்பை முடித்தவர். அவர் காங்கிரஸில், காந்திஜியின் சாந்நியத்தின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகியதற்குக் காரணம் – சவர்க்காரிடம் உள்ளார்ந்து குடிகொண்டிருந்த தனி மனிதக் கொலைவெறியே ஆகும். அரசியல் கொலையை ஒரு கலையாகப் பயின்றவர் அவர்.

1910இல் பிரிட்டிஷ் அதிகாரியைக் கொலை செய்ய உத்தரவிட்டு உதவி செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்டார் சவர்க்கார். விசாரணைக்குக் கொண்டு வரும்போது கப்பலிலிருந்து தப்பினார் அவர். பிரான்சுக்குள் பதுங்கி யிருந்தபோது பிடிபட்டு வெளியேற்றப் பட்டார். பின் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமானில் தீவாந் திர சிட்சை பெற்றார். இரண்டாவது மகாயுத்தம் வெற்றிகரமாக முடிந்த காரணத்தால் கிடைத்த சலுகையினால் பின்னர் விடுதலையானார் வீர சவர்க் கார்.  அதேபோல பஞ்சாபிலிருந்த ஒரு கவர்னரையும் பம்பாயிலிருந்த ஒரு கவர்னரையும் கொலை செய்ய முயன்ற திட்டத்தில் தோல்வியும் கண்டார் சவர்க்கார்.

அந்தமான் வாழ்க்கைக்குப் பிறகு கொலையாளிகளுடன் தமக்குள்ள உறவை மிகவும் ஜாக்கிரதையாக பாது காத்துக் கொண்டார் சவர்க்கார். இவரோடு மிகவும் அத்யந்த தொடர்பும் அளப்பரிய குருபக்தியும் கொண்டிருந்த அந்த மாறுகண்ணன் நாதுராம் விநாயக கோட்ஸேயின் தலைமையில்தான் சுதந்திர தினத்தன்று புனாவில் இந்திய நாஜிகளின் புதிய தாக்குதலுக்கு முஸ்தீபு செய்யப்பட்டது. தேசம் சுதந்திரம் பெற்ற நாளன்று வெளியான கோட்ஸேயின் பத்திரிகையில் தலையங்கப் பகுதியில் வெற்றிடம் விட்டுச் சுற்றிலும் கறுப்புக் கட்டித் துக்கம் கொண்டாடப்பட்டது!

அந்தக் கொடியேற்று விழாவில் கோட்ஸே பேசினான்: “நமது தேசம் துண்டிக்கப்பட்டது ஒரு பேராபத்தான நிகழ்ச்சியாகும். பல கோடி ஹிந்துக்களை துன்பத்திற்கு இழுத்துச் செல்லும் நாள் இது. இந்தக் கொடுமைக்கு காங்கிரஸை விட காந்தியின் செயலே காரணமாகும்.‘’

நாதுராம் கோட்ஸேயின் தலைமை யில் நின்ற ஆர்.எஸ்.எஸ். வீரர்கள் அன்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை இதோ: “நான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டுக்காக எனது உயிரைத் தரச் சித்தமாக இருக்கிறேன்‘’ என்பதே இந்திய நாஜிகளின் பிரதிக்ஞை!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இங்கு மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், தேசப் பொருளாதாரத்தைப் பெருக்கி, சுரண்ட லற்ற ஒரு சமுதாயத்தை நிர்மாணிக்கப் பெரும் தியாகங்களை நாம் மேற்கொள்ள சித்தமாக இருந்த நேரத்தில், பகைமையும் வெறுப்பும் ஆரிய இனவெறியும் கொண்டு ஓர் ஹிந்து ராஷ்டிரத்தை ஸ்தாபிக்க இவர்கள் விரதம் மேற் கொண்டு எதிர்ப் புரட்சிக்காரர்களாக உருவாயினர்.

இன்று, பிரிந்துபோன பாகிஸ்தானில் எப்படி ஒரு மதத்தின் பேரால் ஆதிக்க வெறியர்களும் ராணுவ சர்வாதிகாரி களும் ஆட்சி நடத்துகின்றனரோ அதே போன்று ஹிந்து மதத்தின் பேரால், இங்கே வாளேந்தி மற்ற மதத்தினரைப் பூண்டோடு அழிக்கவும் சர்வாதிகார ஆட்சியை நிறுவவும் இவர்கள் அன்றே போர் சன்னத்தர்களாயினர். வேதத் தையும் கீதையையும் ஆரிய நாகரிகத் தின் பெருமையையும் வெறும் வெளிப் பூச்சாக, அலங்காரக் கவசமாக அணிந்து இவர்கள் தேசமெங்கும் மதவெறிக் கலகங்களையே விசிறிவிட்டனர்.

நவகாளியிலும் பஞ்சாபிலும் கல்கத் தாவிலும் டெல்லியிலும் சங்கிலித் தொடர் போன்ற வகுப்புக் கலவரங்களினால் ஹிந்து- முஸ்லிம் சகோதரர்களின் ரத்த ஆறு பெருக்கெடுத்தோடச் செய்தனர். வீடிழந்த, மானமிழந்த அகதிகளின் கூட்டம் அலை அலையாய் நாடெங்கும் தோன்றச் செய்தனர். மகாத்மா காந்தி கல்கத்தாவில் 1947 செப்டம்பர் முதல் தேதி இந்த வகுப்புக் கலவரங்களைக் கண்டனம் செய்து சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவரது மந்திர சக்தியால் கல்கத்தா நகரில் மூன்று தினங்களில் அமைதி நிலவியது. அப்போது ராஜாஜி வங்காள கவர்னராக இருந்தார். காந்திஜியின் உண்ணாவிரதத்தால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று எண்ணிய ராஜாஜி “பாபுஜி தாங்கள் குண்டர்களை எதிர்த்து உண்ணாநோன்பு இருப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?’’ என்று வினவினார். “அந்தக் குண்டர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பின்னாலிருந்து தூண்டிவிடுகிறவர்களின் மனமாற்றத் துக்காக நான் உயிரைவிடவும் தயாராக இருக்கிறேன்’’ என்று சாகும்வரை உண்ணா விரதத்தை தமது எழுபத்தி யெட்டாவது வயதில் காந்திஜி தொடங்கியது கண்டு தேசமே பதை பதைத்தது.

மூன்று தினங்களுக்குப் பிறகு கல்கத்தா நகரத்தில் வாழ்ந்த ஹிந்துக் களும், முஸ்லிம்களும், பிற மதத்தினரும் காந்திஜியிடம் வந்து தாங்கள் ஒற்றுமை யாக இருப்பதாகவும், எந்த மாற்று மதத்தினருக்கும் இன்னொரு மதத்தின ரால் துன்பம் நேராமல் பாதுகாப்பதாகவும் உறுதி தந்தனர். மக்கள் ஒன்றுபட்டு அமைதிகாத்த அதே நேரத்தில் நினைத் தால் நெஞ்சு விம்முகிற நிகழ்ச்சியும் நடந்தது. இருபது கொலைகாரர்கள் தங்கள் கொலைக் கருவிகளுடன் மகாத்மாவின் முன்னால் வந்து நின்று தங்களை மன்னிக்கும்படியும் காந்திஜி தமது உண்ணாவிரதத்தைக் கைவிடும் படியும், தலை தாழ்ந்து வேண்டியபடி கண்ணீர் உகுத்து நின்றனர். காந்திஜி அந்த ஹிந்து வெறியர்களைத் துன்பப்படுகிற முஸ்லிம் மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களின் மன்னிப் பைப் பெறுமாறு புத்திமதி கூறி அனுப் பினார். இந்த நிகழ்ச்சி இந்தியர் களின் உள்ளத்தில் மகாத்மாவைப் பற்றியும் அவரது தலைமையில் ஒன்று படுகிற மகத்துவத்தைப் பற்றியும் புது நம்பிக் கையை ஊட்டியது!

தொடரும்...)


No comments:

Post a Comment