ஊடகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் அண்ணாமலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

ஊடகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் அண்ணாமலை

 'விடுதலை' ஆசிரியர் கண்டனம்

செய்தியாளர்களை, "குரங்கு என்றும், நாய், பேய் என்றும், லஞ்சம் வாங்கிகள்" என்ற முறையிலும் தரக் குறைவாகப் பேசும் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவரின் அநாகரிகத்தைக் கண்டித்து பத்திரிகை ஆசிரியர் என்ற முறையிலும், திராவிடர் கழகத் தலைவர் என்ற வகையிலும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

கடலூரில்  தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்டபோது, அண்ணாமலை செய்தியாளர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது... நான் சாப்பிடப் போகும்போது என்ன சொல்லிட்டு போனேன்? மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கு எல்லாம் பதில் கேப்ப  - அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா... நவுருங்க” என்று கடுமையாகப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

இதே  போன்று, சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் (27.05.2022) கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பா.ஜ.க. சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததைக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்றும் செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர்,  தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்தபோது, அதைக் காது கொடுத்துக் கேட்காமல், அவரைப் பேச விடாமல் தடுத்த அண்ணாமலை,  உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் கூறினார்.

அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்தபோது, "சரி, 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்”  என்றும், உங்களுக்கு அறிவாலயத்தில் 2000 ரூபாய் கன்பார்ம்., நாங்க கூட 1000 போட்டு 3000 ரூபாய் தருகிறோம்" என்றும்  எந்தவித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் அண்ணாமலை கூறினார். 

இவை, கேள்வி கேட்கும் செய்தியாளர்களை இழிவு செய்யும் வகையில், அவர்களை இழிவுபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாகும்.  

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 15.07.2021 அன்று அண்ணாமலை - பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பேசிய அவர்  "நம்மளை பத்தி பொய்யா செய்தி போடுறானுங்க. என்ன பண்ணலாம். அதையெல்லாம் நீங்கள் மறந்து விடுங்கள். அடுத்த ஒரு 6 மாதத்திற்குள் பார்ப்பீர்கள், அந்த மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையில் எடுக்கலாம்.

காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்தவொரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும், முன்னாள் மாநில தலைவராக இருந்த முருகன் அய்யா அவர்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அமைச்சராக உள்ளார். எல்லா ஊடகங்களும் அவருக்கு கீழே தான் வரப் போகுது. அப்ப நாம பார்த்துக்கொள்ளலாம்" என்று பேசியிருந்தார்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜனநாயகத்தின் நான்காவது தூணை மதிக்கிற லட்சணமா இது? பத்திரிகையாளர்களுக்கு ஏற்படுவதைவிட இக்கட்சிக்கு ஏற்படும் அவமானம் பற்றி யோசிக்க வேண்டாமா அவர்!

இந்தியாவை ஆளும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், மேனாள் அய்.பி.எஸ். அதிகாரி - இப்படி நாகரிகமில்லாமல் தரக் குறைவாகப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். பத்திரிகையாளர் சங்கம் கண்டித்து, வருத்தம் தெரிவிக்கச் சொல்லியிருப்பதும் சரியானதே!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.10.2022

No comments:

Post a Comment