ஜெகதாப்பட்டினம் திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

ஜெகதாப்பட்டினம் திருமணம்

கிழக்கு கடற்கரை சாலை கீழமஞ்சக்குடியில் ஒரு குமாரர்!

"ஒரு வாரமாக சற்று உடல் நலக்குறைவாக  இருக்கிறேன். என்னால் பயணம் செய்ய இயலாது; பேசுவதற்கும்  சற்று சிரமமாக இருக்கிறது", எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 14.09.2022 அன்று நடைபெற்ற ஒரு திருமணத்தில் பேசினார்கள்!

இயல்பாய் அமைந்துவிடுவதில்லை அனைத்தும்!

ஒரு மாதம் முன்பே தேதி வாங்கி பணிகளைத்  தொடங்கி இருந்தார் அந்த இளைஞர். ஆசிரியரை வைத்துத்தான் திரு மணம் செய்ய வேண்டும் என்பது அவரின் நீண்ட நாளைய உறுதிமொழி! குடும்பத்தார், உற்றார், ஊரார், கிராமத்தார், சங்கத்தார் என அனைவரின் அன்பும் பெற்று, அதனூடே ஆதரவும் பெற்று தன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்  அந்த இளைஞர்!

திருமணம் செய்து கொண்ட ஒருவருக்கு இவ்வளவு ஒப்பனையா எனக் கேள்விகள் எழலாம்! எல்லோருக்கும், எல்லாம் இயல்பாய் அமைந்து விடுவதில்லை! சில நிகழ்வுகள் நம்மை நெகிழ்ச்சிக்குள்  தள்ளிவிடுகின்றன! அவை நம் இயக்கத்திற்கும் பெருமை சேர்த்துவிடுகின்றன! ஆம்! நாம் பேச இருப்பது குமார் - சுவாதி இணையர்கள் குறித்து!          

அது ஒரு கிழக்கு கடற்கரை சாலை! அண்ணாந்து பார்த்தால் கடல் அருகில் தெரிகிறது. அதையொட்டிய அழகிய கிராமம் தான் "கீழமஞ்சக்குடி". அந்த ஊரில் பிறந்து வளர்ந்த தோழர் குமார் தான் இன்றைக்கு நம் இயக்கத் தோழராகப் பரிணமித்து இருக்கிறார்! தம் திருமணத்தை வட்டார மாநாடு போல நடத்தி முடித்திருக்கிறார்! 

இந்தத் திருமணத்தில் செப்டம்பர் 14 அன்று பங்கேற்பதற்குத் தான்  ஆசிரியர் அவர்கள் தேதி கொடுத்திருந்தார்கள். இதற்கு இடையில் தான் உடல்நலம் சிறிது குன்றிய நிலையில், திருமணத்தில் பங்கேற்க இயலாது என ஆசிரியர் தெரிவிக் கிறார்! புயல் வந்து போன அமைதியில் குமாரும், சுற்றமும் இருக்க, இதையறிந்த ஆசிரியர் அவர்கள் தீர்க்கமாய் முடிவு செய்து பயணத்தைத் தொடங்குகிறார்கள்!

பயணங்கள் முடிவதில்லை!

13.09.2022 முற்பகல் பல்வேறு ஆலோசனைக்  கூட்டங்களில் பங்கேற்று, பிற்பகல் 3 மணிக்கு வாகனம் சென்னையில் இருந்து புறப்படுகிறது! இரவு 9 மணிக்குத் தஞ்சை வந்தடைந்த ஆசிரி யர்,  இயக்கப் பணிகள் தொடர்பாகத் தோழர்களுடன் கலந்துரையாடுகிறார். 

14.09.2022 காலை 8 மணிக்கு கிழக்கு கடற்கரை நோக்கிய பயணம்! செல்லும் வழியெல்லாம் சிறப்பு என்பது போல உரத்தநாடு, சேதுபாவா சத்திரம், மணமேல்குடி, கோட்டைப் பட்டினம் என வழியெங்கும் வரவேற்புகள்! 

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மனோரா, மணமேல் குடி, சேதுபாவா சத்திரம், கோட்டைப்பட்டினம், ஜெகதப் பட்டினம், மீமிசல் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதி களில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே இந்துத்துவ சக்திகள் இந்தப் பகுதிகளில் வேர்கள் பரப்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்! 

இப்படியான சூழலில் தான் ஆசிரியர் அவர்களுக்கு மீனவர் சங்கம், வணிகர் சங்கம், கிராம அமைப்புகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், சமூக இயக்கங்கள்  எனப் பலரும் வரவேற்பு கொடுத்து மகிழ்ந்தனர்!  

சரியான நேரத்திற்கு கோட்டைப்பட்டினம் நிஷா மகாலை அடைந்தது வாகனம்! இதற்கிடையே பிரச்சார உத்தியாக ஏராளமான  இடங்களில் "பதாகைகள்" வைக்கப்பட்டிருந்தது! மீனவர் சங்கம்,  ஜெகதாப்பாட்டினம் வணிகர் சங்கம், கோட் டைப்பட்டினம் வணிகர் சங்கம், கீழமஞ்சக்குடி  செல்லனேந்தல் கிராமம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அறந்தாங்கி ஒன்றியத் திராவிடர் கழகம், மணமேல்குடி ஒன்றியத்  திராவிடர் கழகம், ஜெகதாப்பட்டினம் நகரத் திரா விடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, இதர நண்பர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பெரியார், ஆசிரியர் படங்களுடன் பொது மக்கள் பார்வைக்கு  கொள்கை உணர்வை வெளிப் படுத்தியிருந்தனர்! 

இணையேற்பு நிகழ்ச்சி தொடக்கம்!

மண்டபம் நுழைவாயிலில் மணமக்கள் பெற்றோர் ஆசிரியர் அவர்களைப் பறை இசை முழங்க வரவேற்றனர். தோழர் குமாரின் தாயார் செபஸ்தியம்மாள் அவர்கள் ஆசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவிக்க, அதே பொன்னாடையை திருப்பி அணிவித்து, அந்தத் தாயாருக்குப் பெருமை சேர்த்தார் ஆசிரியர்! 

மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார் வரவேற்புரை வழங்கினார். தமிழ்வேள் உமாமகேஸ்வரனார் கரந்தைக் கலைக் கல்லூரி பேராசிரியர் ந.எழிலரசன் இணையர்களை அறிமுகம் செய்து பேசினார். அவர் பேசுகையில், தோழர் குமார் தம் தந்தையை இளம் வயதிலேயே இழந்தவர். கீழமஞ்சக்குடி இவரது  சொந்த ஊராக இருந்தாலும், தஞ்சாவூரில் இவரைத் தத்தெடுத்துக் கொண் டோம். எம்.எஸ்சி., எம்.ஃபில்., பி.எட்., முடித்த  சிறந்த கல்வி யாளர், பல்நோக்கு திறமையாளர், இயக்கச் செயற்பாட்டாளர். இன்றைக்கு சொந்த ஊரிலே தொழில் செய்து, இவ்வளவு பெரிய இயக்கப் பின்புலத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டது பெரும் மகிழ்வைத் தருகிறது. அதேபோல தோழர் சுவாதி அவர்கள்  பி.ஏ., முடித்து, பி.எட்., பயின்று வருகிறார் என அறிமுகம் செய்து வைத்தார்.  

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய திமுக ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி அவர்கள், மீனவர் குடும்பங்களில் படிப்பு கிடையாது. ஆனால் குமார் - சுவாதி பெரும் படிப்புகளை முடித்துள்ளார்கள். அதன் மூலமாக தொடர்புகள் ஏற்பட்டு,  குமார் இயக்கப் பொறுப்பிற்கு வந்து , இன்றைக்கு தலைவர் ஆசிரியர் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்களுக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்? தமிழர்களுக்கே படிப்பை நிறுத்தி வைத்தது சனாதனம்தான். அதை மாற்றிக் காட்டியது இந்த இயக்கம். தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி வர வேண்டும் என அவர் பேசினார். 

தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயரும், மருத்துவருமான அஞ்சுகம் பூபதி வாழ்த்துக் கூறும்போது, பேராசிரியர் எழிலரசன் பல மாணவர்களை உருவாக்கியவர். அதில் பலர் தஞ்சாவூரில் எங்களின் பூபதி நினைவு படிப்பகத்தில் தங்கி கல்வியை மேற்கொண்டனர். எங்கள் வீட்டிற்கும் நிறைய தோழர்கள் வருவார்கள். பல்வேறு சூழல் களில், பல்வேறு இளைஞர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் திராவிடர் கழகத் தோழர்கள் எந்தத் தீய பழக்கமும்  இல்லாமல் இருக்கிறார்கள். பெரிய பின்னணிகள் இன்றி, பொருளாதார நெருக்கடியோடு வாழ்ந்தாலும் ஒழுக்கம் தவறுவதில்லை. அந்த அளவிற்கு ஆசிரியர் அவர்கள் இயக் கத்தைக் கட்டுக் கோப்புடன் நடத்தி வருகிறார்கள். இன்றைக்கு உடல்நலம் குன்றிய நிலையிலும் இவ்வளவு தூரம் வந்திருந்து, எளிய தொண்டரையும் சிறப்பித்துள்ளார். ஆசிரியர் அய்யா அவர்கள் தான் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கும் உறுதுணை யாக இருந்து வருகிறார்கள். அய்யா அவர்கள் நூறாண்டைக் கடந்து வாழ வேண்டும் என அவர் பேசினார்.

திமுக ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் சீனியார் அவர்கள் தம் வாழ்த்துரையில், காமராஜர் அவர்கள் தங்கமுத்து (நாட்டார்) அவர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது, ஆசிரியர் அவர்களுடன் நானும் பயணம் செய்தவன். மன்னார்குடி ஜெமினி அச்சகம் உரிமையாளர் இல்லத்திற்கு வந்த போதும் சந்தித்திருக்கிறேன். இன்றைக்கு எங்கள் ஊருக்கு, அதுவும் எளிய தொண்டரை சிறப்பு செய்வதற்காக ஆசிரியர் அவர்கள் வந்தது பெரும் சிறப்பு எனக் கூறினார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கரு.இராமநாதன் பேசும்போது, மணமகன் குமார் தந்தையுடன் நான் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைவுற்ற பிறகு தொடர்புகள் குறைந்தது. அப்போது சிறுபிள்ளையாக இருந்த குமார், பின்னாட்களில் வளர்ந்து தஞ்சாவூர் சென்று படித்து, நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இன் றைக்குத் திராவிடர் கழகத்தில் ஒரு பொறுப்பிற்கு வந்துள்ளார். இவர் மூலமாக எங்களின் குடும்ப நட்பு மீண்டும் துளிர் விட்டுள்ளது. இந்த இயக்கம் தான் எங்கள் உறவை புதுப்பித் துள்ளதாகக் கருதுகிறேன். தலைவரை அழைத்து நிகழ்ச்சியைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற குமாரின் ஆசை நிறைவேறியுள்ளது என அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு!

வாழ்விணையர்கள் குமார் - சுவாதி இருவருக்கும் உறுதிமொழி ஏற்க வைத்து, திருமணத்தை நடத்தி வைத்துச் சிறப்புரை ஆற்றிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு பயணம் செய்ய முடியாத சூழல் மற்றும் பேச முடியாத நிலையிலும் சிரமப்படுகிறேன். எனினும் குமார் - சுவாதி, முக்கியமாக அவர்களின் பெற்றோரைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு வாழ்த்தையாவது சொல்லிவிட்டு போகலாம் என வந்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள்  ஏமாற்றத்தைத் தந்து விடக் கூடாது! இன்றைக்கு இந்தக் கிராமத்தின் சிறப்பைப்  பார்க்கிறோம். நாம் பெற்றிருக்கக் கூடிய மரியாதையைப் பார்க்கிறோம். இது பெரியாரின் உழைப்பு! அதன் வெற்றிக் கனிகள் தான் இந்த வாழ் விணையர்கள்! 

மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு!

இந்தக் கொள்கையை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கு இந்த மணமக்களே சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பகுதிகளுக்கு நான் அதிகம் வந்ததில்லை. ஆனால் இனி வரவேண்டும். தனியாகவே ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்து அதில் நிறைய பேச வேண்டும். அதுமட்டுமின்றி மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு என ஒன்றையும் இந்தப் பகுதிகளில் நடத்த வேண்டும். நான் கடலூரை சார்ந்தவன். மீனவ மற்றும் இஸ்லாமிய மக்களோடு நான் அதிகம் பழகியவன். தொடக்க கல்வியை இஸ்லாமிய பள்ளியில் தான் முடித்தேன். பிறகு கிறிஸ்தவ பள்ளியில் படித்து, மேற்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தேன். 

மீனவர்கள் பிரச்சினை என்பது நீண்ட காலமாக தொடர் கிறது. அவர்களின் வாழ்வாதாரமே கடல் வாழ்க்கைதான். மீன் பிடிக்க சென்றால் எப்போது திரும்பி வருவோம் என உத்தரவாதம் இல்லாத  பாதுகாப்பற்ற வாழ்க்கை! ஆனால் மற்றவர்களை வாழ வைக்கிற வாழ்க்கை. மருத்துவர்கள் அதிகம்  பரிந்துரை செய்வது மீன் உணவுதான்! இந்த மீன் உணவு நமக்குப் பாதுகாப்பு. ஆனால் இந்த உணவைத் தருகிற மீனவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்தப் பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஏன் வேண்டும் திராவிடர் கழகம்!

பெரியார் இந்தச் சமூகத்திற்கு என்ன செய்தார், இந்த இயக்கம் என்ன செய்தது, ஜெகதாப்பட்டினம் போன்ற பகுதி களில் ஏன் திராவிடர் கழகம் வளர வேண்டும் என்கிற கேள்வி களுக்கு விடையாக குமார் இருக்கிறார். பெரிய அளவிற்குப் பட்டப் படிப்புகள் முடித்து, கருப்புச் சட்டையோடு இங்கே அமர்ந்திருக்கிறார், நூறு ஆண்களுக்கு முன் நமக்கு இது கிடையாது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது தான் திராவிட மாடல் ஆட்சி. 

இங்கே சனாதனம் குறித்துப் பேசினார்கள். நாம் வளர்ந்து வருவதைப்  பார்த்து காலை வெட்டப் பார்ப்பவர்கள் அவர்கள். நாம் மேலே ஏறி வரும்போது காலை இழுக்கப் பார்ப்பவர்கள் அவர்கள். அதைத் தடுத்து நிறுத்தும் பணியைச் செய்வது தான் திராவிடர் இயக்கம். 

சுவாதி அவர்களுக்கு நல்ல அளவிலே கல்வி கொடுத்து, சுயமரியாதைத் திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்த அவரின் பெற்றோர்  பெரும் பாராட்டிற்கு உரியவர்கள். இங்கே இருக்கக் கூடிய சகோதரிகளை நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். உங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள். பழைமைப் பெண்களை மாற்றி, புதுமைப் பெண்களாக மாற்றிக் காட்டுகிற ஆட்சி இப்போது நடைபெறுகிறது. நாம் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் கொண்டாடியவர்கள். சரஸ்வதி செய்யாத மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்கிறார். 

வித்தியாசமான மதம்!

தம் மதத்தில் இருப்பவர்கள் படிக்கக் கூடாது என்று சொன்ன ஒரே மதம் இந்து மதம் தான்! தம் மதத்தில் இருப்ப வர்கள் கூலி தொழிலாளர்களாக, மூட்டை சுமப்பவர்களாக, மண் வெட்டுபவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப் பட்டதும் இந்து மதம் தான். 

அதையெல்லாம் தாண்டி இன்று குமார்கள் - சுவாதிகள் வந்திருக்கிறார்கள். திராவிடர் இயக்கத்தின் மகத்தான புரட்சி இது! ஒரு துளி இரத்தம் இன்றி, வன்முறை இன்றி, மக்களைச் சிந்திக்க வைத்து சாதித்துக் காட்டிய இயக்கமிது! எனக்கு இப்போது உடல் வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் மனம் இனிக்கிறதே! 

நாம் கட்சிகளால், ஜாதிகளால், மதங்களால் பிளவுபடாமல் மனங்களால் ஒன்றுபட வேண்டும். அதற்கான அமைப்பு தான் இந்த இயக்கம். சமூகத்தைப் பிரிப்பது அல்ல; இணைப்பது இதன் கொள்கை! 

நமக்கு எங்கே வாய்ப்பு?

மீனவர் சமுதாயத்தில் எத்தனை அய்.ஏ.எஸ். இருக்கிறார் கள்? எத்தனை அய்.பி.எஸ். இருக்கிறார்கள்? உயர்நீதி மன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்களில் பலர் விடுதலை நாளிதழ் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் தொடர்ந்து மீனவ நலன்களுக்காக எழுதியும், பேசியும் வருகிறோம்! 

துளசி அய்யா பார்வையில் நாம் யார்?  

சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்கள் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்தவர்களாகத் தான் இருப்பார்கள். பேராசிரியர் எழிலரசன் அந்தக் கல்லூரியின் நாற்று தான்! காமராஜர் வழிகாட்டுதல் அந்தக் கல்லூரிக்கு இருந்தது. அதன் நிறுவனர் துளசி அய்யா அவர்களுடன் பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது ஒரு சிலை  திறப்பு விழா! எனது தலைமையிலே நடை பெற்ற நிகழ்ச்சி. அங்கே பேசிய துளசி அய்யா அவர்கள், "திராவிடர் கழகத்தில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன், அவர்களிடம்  தவறான பழக்க, வழக்கம் எதுவும் இருப்பதில்லை; அதைத் தாங்கள் அனுமதிப்பதும்  இல்லை.  உங்கள் இயக்கத்தை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்துள்ளீர்கள். என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு, இயக்கத்தில் இருக்கலாம் என்பதையும்  நீங்கள் அனுமதிப்பதே இல்லை'', என நம் இயக்கத்தை மிகத் துல்லியமாகக் கணித்துக் கூறினார்கள்.

திராவிடர் கழகத்தில் தங்கள் பிள்ளைகள் இருக்க வேண் டும் என பெற்றோர்கள் பலர் நினைப்பதுண்டு. காரணம் அங்கு சென்றால் ஒழுக்கத்துடன் இருப்பார்கள் என் நம்புகிறார்கள். 

நிற்க வேண்டிய அவசியம் என்ன!

தன்மான உணர்வு, கொள்கை உணர்வு, எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் என்பது தானே சமூக நீதி! அதனால் தான்  தந்தை பெரியார் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு சமூக நீதி நாளாக அறிவித்தது.

எல்லோருக்கும் நாற்காலி இருந்தால், யாரும் நிற்க வேண் டிய அவசியமில்லை. பந்தியில் எல்லோருக்கும் சாப்பாடு இருந்தால், யாரும் முந்த வேண்டிய அவசியமில்லை! இதுதான் சமூகநீதி.

பெரியாரிஸ்ட் என்பதன் அடையாளம்!

இறுதியாக வாழ்விணையர்களுக்கு கூறுகிறேன், சிக்கன மாக வாழுங்கள், எளிமையோடு  இருங்கள், 

வரவுக்கு ஏற்ற செலவுகள் செய்யுங்கள், விட்டுக் கொடுத்து வாழுங்கள்,  என்ன நேர்ந்தாலும் பெற்றோரைப் பாதுகாக்க தவறாதீர்கள், பிறருக்கும் பயன்படும் வாழ்க்கையை பேணுங் கள். இவர் பெரியார் கொள்கையாளர் என்பதற்கான அடை யாளம், பெருமை அதுதான்! வாழ்விணையர்களுக்கு எனது வாழ்த்துகளையும், அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்", எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்கள். 

பங்கேற்றோர்! 

அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டலத் தலைவர் பெ.இராவணன், திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ. இளந்திரையன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். அறந்தாங்கி ஒன்றியத் தலைவர் குழ.சந்திரகுமார் நன்றியுரை ஆற்றினார். 

இந்நிகழ்வில் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் பெ.அறிவொளி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தகவல் தொழில் நுட்பக் குழுப் பொறுப்பாளர் வி.சி.வில்வம், அறந்தாங்கி மாவட்ட செயலாளர் களம்பக்குடி க. முத்து, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், காரைக்குடி மாவட்ட செய லாளர் ம.கு.வைகறை, கழகப் பேச்சாளர் மாங்காடு சுப. மணியரசன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.நீலகண்டன், அரு.நல்லத்தம்பி, பட்டுக்கோட்டைமாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், மணமேல்குடி ஒன்றியத் தலைவர் நா.சிவகாமி, விசிக தொகுதி செயலாளர் அ. கதிர்வழகன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி வை.சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.காரல்மார்க்ஸ், மணமேல்குடி க.லாவண்யா, பட்டுக்கோட்டை மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, பட்டுக்கோட்டை மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை மாவட்ட ப.க அமைப்பாளர் மாணிக்க சந்திரன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, புதுக்கோட்டை மு.கண்ணன், நிலவன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்!

No comments:

Post a Comment