கடத்தல் பொருளான 'கடவுளர்கள்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

கடத்தல் பொருளான 'கடவுளர்கள்'

சென்னை,செப்.13- விழுப்புரத்திலிருந்து பிரான்சு நாட்டுக்கு  சட்ட விரோதமாகக் கடத்த முயன்ற சுவாமி சிலைகள் உட்பட 20 பழங்கால கலைப் பொருட்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவி லில் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பழங்கால கலைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல் துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பிரிவின் தலைமை இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் ஆர்.தினகரன் ஆகியோர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி, ஆய்வாளர் இந்திரா, உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் (11.9.2022) திடீர் சோதனை மேற்கொண் டனர். அங்கு பிரான்சு நாட்டுக்கு கடத் துவதற்காக வைக்கப்பட்டிருந்த பழை மையான 13 கற்சிலைகள், 4 உலோக சிலைகள், ஒரு மரக் கலைப்பொருள், ஓர் ஓவியம் உட்பட 20 கலைப் பொருட்களைக் கைப்பற்றினர். இந்த கலைப் பொருட் களை பிரெஞ்சு நாட்டவர் ஒருவர், பிரான்சு நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரியவந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தியா வின் பழங்கால கலைப் பொருட்கள் சட்ட விரோதமாக வெளி நாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததைத் தடுத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டினார்.

கைப்பற்றப்பட்ட சிலைகள்: உலோக விநாயகர் சிலை, கிருஷ்ணர் ஓவியம், டொமினிக் கார்டனில் இருந்து நடனமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையார், நடுத்தர பிள்ளையார், சிறிய பிள்ளையார், பெரிய புத்தர் சிலை, நடனம் ஆடும் அப்சரா சிலை, விஷ்ணு கற்சிலை, பார்வதி கற்சிலை, அய்யப்பன் கற்சிலை சிறியது, அய்யப்பன் கற்சிலை பெரியது, நந்தி கற்சிலை, கையில் கத்தியுடன் கற்சிலை, டெரகோட்டா புத்தர் சிலை (தலை மட்டும்), உறையுடன் கூடிய வெண்கல சொம்பு, வெண்கல சொம்பு, மயில் விளக்கு, அனுமன் சிலை, முருகன் சிலை ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


No comments:

Post a Comment