திராவிட கட்சிகளின் கோட்டைதான் தமிழ் மண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

திராவிட கட்சிகளின் கோட்டைதான் தமிழ் மண்!

ஆன்மீகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடக் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்துவம் தான் என்று 19. 2. 2020 அன்று துக்ளக் சொல்லியது சரிதான்.

ஆனால், தமிழகம் பெரியார் மண் என்று தமிழர் களை கழகங்கள் நம்ப வைக்கும் வரை தமிழகம் திராவிட கட்சிகளில் இருந்து விடுபடாது. தமிழர்கள் கட்டுமிராண்டிகள் என்று ஈ.வெ.ரா. கூறியது தமிழ் மக்களுக்கு என்று தெரிய வருகிறதோ அன்று தமிழகம் திராவிட கட்சிகளில் இருந்து விடுபடும் - என்று மீண்டும் குருமூர்த்தி சொன்னது தான் மிகவும் அபத்தமானது. முட்டாள்தனமானது. மீண்டும் தமிழர்களை சனாதனக்குழிக்குள் தள்ள வேண்டும் என்ற தள்ளாத ஆசையும், வெறியும் உடையது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்நாட்டில் அதுவும் சேர சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சிக் காலம் என்று பெருமையுடன் பேசுகிறோமே, அந்த மன்னர்கள் ஆண்ட காலத்தில் தமிழர்களுக்குக் கல்வி கிடைத்ததா..?

பிரம்மாவானவர் இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு, இம்மைக்கு, மறுமைக்கு, உபயோகமான கருமங்களை தனித்தனியாக படைத்ததாக மனுதர்மம் கூறுகிறது

அதில் பார்ப்பனருக்கு ஓதுவித்தல், ஓதுதல், எக்கியஞ்செய்தல் எக்கியம் செய்வித்தல், தானங் கொடுத்தல், தானம் வாங்குதல், ஆகிய தொழில்களை ஏற்படுத்தினார்.

ஆனால் சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி, பணி செய்வதை முக்கியமான தர்மமாய் ஏற்படுத்தினார் என்று மனுதர்மம்- முதல் அத்தியாயம் ஸ்லோகங்கள் 87, 88, 91 இல் வரையறுக்கப்பட்டுள்ளது.என்பதை முழுமையாக நம்பி நம்பித்தான் தமிழர் பரம்பரை மானமிழந்து, அறிவிழந்து, தமது ஆற்றலை மறந்து கைகட்டி வாய்பொத்தி நின்றது.

இந்த மனுதர்மத்திற்கு உள்பட்டு தான் நம்முடைய மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு 1610 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் நாள் ராபர்ட். டி.நோபிலி எழுதிய கடிதம் ஒன்று மதுரை  நாயக்க மன்னரின் கல்வி அமைப்பைப்பற்றியும் பார்ப்பனர்களின் சனாதன வெறியைப் பற்றியும் தெரிவிக்கிறது.

மதுரையில் பத்தாயிரம் மாணவர்கள் படித்தனர் - அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் பல வகுப்புகளைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் தொகை 200 முதல் 300 வரை இருந்திருக்கிறது. அவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமே. "பிராமணர்களுக்கு ஓதுவித்தல், ஓதுதல் போன்றவையே அவர்களுக்கான மனுகருமங்கள்" என்று நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்ட மனுவை நம்பிய நம்முடைய முட்டாள் மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே இந்தப் பள்ளிகளை நிறுவி இருக்கிறார்கள்.

உயர்தர கலைகளை கற்க பார்ப்பனர்களுக்கே உரிமை உண்டு. அப்படிப்பட்ட மாணவர்கள் தங்கள் உணவு - உடைகளை தாங்களே தேடிக்கொள்வதாய் இருந்தால் அவர்கள் படிப்பு கெட்டுவிடும் என்று நினைத்து மன்னர்கள் பிசுநகரும், பெரியநாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியர் ஊதியத்திற்கும், மாணவன் வாழ்க்கை செலவிற்கும், போதுமானதாக இருந்துள்ளது என்று ஒப்பியன் மொழி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 400 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு நிலைமை. இதற்கு முழுமுதற் காரணம் வருண தர்மம் தான். ஜாதி தர்மம் தான்.

"கல்வி கற்றல் - கற்பித்தல் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர்ந்த ஜாதியான பிராமணனுக்கு மட்டுமே உரிய உரிமையாகும்".

" சூத்திரனுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது"

"சூத்திரனுக்கு, நான்காம் ஜாதியானுக்கு, எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்க லாகாது"

"குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன் ஆகியோர் மிகவும் ஆபத்தானவர்கள்."

வேதங்களை பிராமணன் படிக்கும் போது சூத்திரன் காதில் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்..!

மீறி அவனே படித்தால் நாக்கை அறுக்க வேண் டும்..! முதலியவைகள் தான் மனு தரும சாஸ்திரம் ஆகும். இதன்படி தான் நம்முடைய சேர சோழ பாண்டிய அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.

இந்த கொடுமையான ஜாதி தர்மம் கோலோச் சியதால்தான் நம் தமிழர்கள் அக்காலத்தில் படிப்பு வாசனை கூட பெற முடியவில்லை. இப்படி ஆரிய பண்பாடு கொடிகட்டிப் பறந்ததால், தமிழர்களுக்கான கல்வி உரிமைகள், அவர்களுடைய நிலங்கள் மட்டுமன்றி, தமிழர்கள் தம் உள்ளங்களையெல்லாம் ஆண்ட மனுதர்மமும், அதனை ஏற்றுக் கொண்ட அரசர்களும், ஜாதியால், மதத்தால், கடவுளால், சனாதனத்திற்குக் கட்டுண்டு, ஏற்றுக் கொண்டதால், நாம் கல்வியிலும் கடையர்களாகி, வெறும் தற்குறி களாக இருந்தோம் என்பது பேருண்மை ஆகும்.

அறிவு தகுதி குறைவால் அல்ல. தமிழர்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நம்முடைய சமுதாயம் கல்வி அறிவற்ற சமுதாயமாக இருந்தது. இந்தக் கொடுமையை உடைத்து "அனைவருக்கும் அனைத்தும்" என்ற நிலைமையை உருவாக்கி "சமூகநீதி" யை கையில் எடுத்து, அனைவரும் படிக்க வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டில்தான் திராவிடர் இயக்கம் போராடியது.

திராவிடர் இயக்கத்தின் போராட்டம் ஏற்பட்ட தற்குப் பின்னர்தான் தமிழர்கள் ஓரளவேனும் கல்வி அறிவு பெற்றார்கள். வேலைவாய்ப்பு பெற்றார்கள்.

ஆமையாய், ஊமையாய் அடங்கி கிடந்த தமிழ் இனம் தங்களுடைய கீழ்மை தன்மையை நினைத்துப் பார்க்கத் தொடங்கியது. எதையும் ஏன் - எதற்கு - எப்படி என்று கேட்க தென்புலத்தில் திராவிடர் இயக்கம் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டு, தமிழர்கள்தம் உள்ளங்களில் எல்லாம் பகுத்தறிவு சிந்தனை முளைவிட்டுக் கிளம்பி, பிற்காலத்தில் எரிமலைக் குழம்பாக பீறிடத் துவங்கியது.

திராவிடர் இயக்க ஆட்சி ஏற்பட்டதற்குப் பின்னர்தான், சமூக நீதி வகுப்புரிமை ஆணைகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், சிறுபான்மையினர், ஆகிய அனைவருக் கும் கல்வி நீரோடையில் இறங்க ஓரளவிற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அதுவரை கல்வி நீரோடைகளில் பார்ப்பன முதலைகள் தான் கிடந்தன.

மீண்டும் பார்ப்பனர்களே கல்வியையும் வேலை வாய்ப்பையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்ற கபட சிந்தனையால்தான், குரூர மனப்பான் மையால்தான், வர்ணாச்சிரம சிந்தனையால்தான் மீண்டும் தமிழகம் திராவிட  கட்சிகளில் இருந்து விடுபட வேண்டும் என்று சனாதன வெறியர்கள் நச்சுப் பாம்புகளாக சீறுகிறார்கள்.

ஒடுக்கப்பட்டோருக்கான மனித உரிமைகளை, கல்வியை, வேலைவாய்ப்பை, சமத்துவத்தை, சம வாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டிட திராவிட கட்சிகள் நூறாண்டு காலமாக உழைத்த உழைப்பு, அதனால் கிடைத்த வெற்றி, உலகத்தில் எந்த போராட்ட தலைவரும், குழுக்களும் ஒரு தலை முறையில் போராடி பெற முடியாத வெற்றியாகும்.

அந்த வெற்றி ஒரு சிறிதும் கீழிறக்கம் கொள் ளாமல், தந்தை பெரியார், தந்தை பெரியாருக்குப் பின்னால் அன்னை மணியம்மையார், இவர்கள் காட்டிய வழியில் எள் முனை அளவும் பிறழாமல், ஓய்வு, அமைதி, கண்ணுறக்கம் கொள்ளாமல், தமிழினத்திற்காக, அதன் விடியலுக்காக எப்போதும் உழைக்கும், ஒப்பாரும் மிக்கரும் இல்லா ஒப்பற்ற தலைவர் விடுதலை ஆசிரியர், அரசியலை விரும் பாத தலைவர் அய்யா கி.வீரமணி தலைமையில் தான், அவரை வழிகாட்டியாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியாக இயங்கும். அப்படிப்பட்ட திராவிட கட்சிகளின் ஆட்சிகளிடமிருந்து தமிழகம் இனி எந்தக் காலத்திலும் விடுபடவே முடியாது என்பதை குருமூர்த்திகள் உணர வேண்டும்.

திராவிட இயக்கங்களின் ஈடு இணையற்ற ஒப்பற்ற உழைப்பால் தமிழர்கள் இன்று கல்வி அறிவு பெற்று அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். இந்த வளர்ச்சியை கண்ட சனாதனம் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு புலம்பு கிறது.

இனி எந்தக் கொம்பனாலும் திராவிட சமுதாயத் தின் வளர்ச்சியை தடுக்க முடியாது.

வளர்ச்சி பெற்ற தமிழர்களால் தமிழகம் பெரியார் மண் என்று முத்திரையிடப்பட்டு, தனது தோளில் சுமந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதை எவராலும் மாற்ற முடியாது.

திராவிட கட்சிகளின் கோட்டை தான். தந்தை பெரியார் மண்தான் தமிழ்நாடு.

குடந்தை க. குருசாமி

 தஞ்சை மண்டல செயலாளர்

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment