தமிழ்ப் பல்கலை.யில் முதுநிலைக்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

தமிழ்ப் பல்கலை.யில் முதுநிலைக்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், ஆக. 11- தஞ்சாவூரில் 1981ஆம் ஆண்டு தமிழ் ஆய்வுகளுக்கென்றே உருவாக்கப்பட்ட பல்கலைக் கழக மான, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய் வுகள் மட்டுமல்லாது, ஆய்வியல் நிறைஞர், முதுகலைப் பட்டப் படிப்பு,  ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு களும் வழங்கப்பட்டு வருகின்றன.  

அதனொரு பகுதியாக திங்களன்று ஒருங்கிணைந்த முதுகலை மாணவர்களுக்கான கலந்தாய்வும் சேர்க்கையும் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, நாடகத்துறையில் பல்வேறு மாணவ- மாணவிகள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.  விண்ணப்பித்தோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் விதிகளுக்குட்பட்டு  இனவாரி சுழற்சி முறையில் இலக்கியத் துறையில் 50 மாணவ, மாணவியருக்கும், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் 50 மாணவ, மாணவியருக்கும், நாடகத்துறையில் 20 மாணவ, மாணவியர்களுக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.  

இதில் இலக்கியத்துறையில் சேர்க்கை  பெற்ற மாண வர்களில் 25 பேருக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் இனவாரி சுழற்சி அடிப்படையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாதந் தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ. 2000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சேர்க்கை பெற்றவர்களுக்கான உறுதிப்படிவத்தை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் வழங்கினார்.

பொறியியல் கல்லூரி சேர்க்கை

7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம்

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் பொறியியல் இளநிலை படிப்புகளில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேலான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் 2.11 லட்சம் மாணவர்கள் பதிவுசெய்த நிலையில், 1.58 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் 22 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 11 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் சேர்க்கை பெற சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். எனினும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொது கலந்தாய்வில் பங்கேற்று பிடித்தமான கல்லூரிகளில் சேரலாம்.

எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் சேர்க்கை இடங்கள் கிடைக்கும். அவர்களுக்கான கல்விக் கட்டணத் தையும் தமிழ்நாடு அரசே செலுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்தாண்டு 7,876 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment