போற்றுவோம் போற்றுவோம் பொதிகைத் தமிழால்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

போற்றுவோம் போற்றுவோம் பொதிகைத் தமிழால்!

மறைமலை இலக்குவனார்


ஒடுக்கப்பட்டோர் உயர்வினை அடைய

அடிமைத் தளையை உடைத்து நொறுக்கி

'விடுதலை' தந்தார் தந்தை பெரியார்!

'விடுதலை' இன்றேல் விடுதலை ஏது?

கெடுதலைப் போக்கி உரிமையை மீட்டுத்

திராவிட  உணர்வும்  சுயமரி யாதையும்

நாடிநரம்பினில் ஓடச்செய்தது  'விடுதலை!'

திராவிட மொழிகளில் தமிழின் தலைமை

திருக்குறளருமை பரப்பிய பெருமை

விளக்கிய நாளிதழ்  'விடுதலை' மட்டுமே!

அய்யா எழுத்து அனைத்தும் கற்று

மெய்யாய்த் தமிழினம் மேன்மை பெற்றது!

பேனா பிடித்தார் பெரியார் என்றால்

பீரங்கி என்றே ஆரியம் அதிர்ந்தது!

சடசட என்றே  ஒடிந்து விழுந்தன

ஜாதியின் பெயரால் அமைந்த சதியெலாம்! 

கடவுள் அனைவரும் காணாமல் போயினர்!

எழுதுகோல் ஏந்திய பெரியார் அவர்களால்

பழுதெலாம் நீங்கித் தமிழினம் உயர்ந்தது!

விழுதுகள் போன்றே திராவிட  இயக்கம்

இதழ்கள்  இருநூறு இனிதே பெற்றது.

திராவிட இயக்க இதழ்களின் தோற்றம்

பெரியார் வழங்கிய பெருங்கொடை அல்லவா?

அய்யா  பணித்த ஆணையை ஏற்று

ஆசிரியர்  என்றே பொறுப்பினை ஏற்றார்

அன்புத் தலைவர் வீரமணி அவர்கள்!

அறுபது ஆண்டாய் அகிலம் அனைத்தும்

ஆசிரியர் எனும்சொல் அவரையே குறிக்கும்!

மாசெலாம் நீங்கித் தமிழினம்  மாண்புற

ஆசிரியர் அய்யா அறுபது ஆண்டாய்

விடுதலைப் பொறுப்பை வீறுடன் தாங்கிய

அறுபது ஆண்டு நிறைவைப் போற்றுவோம்!

உடல்நலம் பற்றிய கவலை  கொள்ளாது

உழைப்பது ஒன்றே உயிரின் இயக்கமாய்

களைப்பும் அயர்வும் சலிப்பும் கடிந்து

முறுவல் முகத்துடன்  முனைப்புடன் செயற்பட

ஆசிரியர் அய்யா ஒருவர்க்கே இயலும்!

உலகம் சுற்றிடும் பரப்புரைப் பயணமும்

கழகம் தாங்கிடும் இயக்கப் பணிகளும்

பல்கலைக் கழகம் பேணிடும் அலுவலும்

அரசியல் தலைவரின் அணுக்கம் விலகாது

அவ்வப் பொழுதில் நடத்திடும் கூட்டமும்

சமூகநீதி  குறைவற விளங்கிடச்

சட்ட நுணுக்க ஆய்வும் அறிக்கையும்

சற்றும் பிசகாது மேற்கொளும் திறமும்

என்றும் குறையாமல் ஏற்றுக் கொண்டே

விடுதலைப் பொறுப்பும் நடத்திடும் சிறப்பு

வியப்பாய் வையகம் போற்றுதே அய்யா!

இன்னும் அறுபது ஆண்டுகள் இப் பணி

இனிதே நிகழ்த்துக!கனிவாய் வணங்கினோம்!

போற்றுவோம் போற்றுவோம் பொதிகைத் தமிழால்

சாற்றுவோம் ஆயிரம் வாழ்த்துகள்  மகிழ்வோடு!

ஆசிரியர் அய்யா வாழ்க வாழ்க

அருமைத் துணையார் அன்புறு மக்கள்

கழகச் சுற்றமும்  கண்மணித் தொண்டரும்

அனைவரும் வாழ்க! அன்புடன் வாழ்த்துவோம்!

அய்யா ஏந்திய தன்மானக் கேடயம்

'விடுதலை' என்னும் விடிவெள்ளி போற்றுவோம்!

No comments:

Post a Comment