விளங்காத 'விஜய பாரதங்கள்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

விளங்காத 'விஜய பாரதங்கள்!'

12.8.2022 நாளிட்ட ஆர்.எஸ்.எஸின் 'விஜயபாரதம்' என்ற 

வார ஏடு  "ஒரே வழி, மொழி வழி சுதேசியம்" என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. 

"ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ ஆட்சி மொழியாகவோ அரசு மொழியாகவோ நிச்சயம் ஆக முடியாது. அப்படி ஆனால் மற்ற மொழிகள் பாதிக்கப்படும்; காலப்போக்கில் அழிந்துவிடும். இதில் மாற்றுக் கருத்து இல்லை" 'மலையாள மனோரமா நியூஸ்' சார்பில் 'இந்தியா 75' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு இது. மாற்றுக்கருத்து இல்லையாம். ஸ்டாலின் சொன்னது தவறான கருத்து. அதற்கு நிச்சயம் மாற்றுக் கருத்து உண்டு. சரியான கருத்து என்று அதற்குப் பெயர்.

வெள்ளையனின் எதேச்சாதிகாரம் ஆங்கிலத்தை திணித்தது. வெள்ளையன் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் எத்தனையோ நூற்றாண்டுகளாக இமயம் முதல் குமரி வரை ஹிந்து கலாசாரம் மட்டுமே ஒரே தேசமாக உருவாக்கியிருந்தபோது, மக்களை இணைத்த மொழி எது என்ற புரிதல் இல்லாமல், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல், முதலமைச்சர் மொழித் திணிப்பு வாய்ப்பாட்டை மீண்டும் ஒருமுறை ஒப்பிக்கிறார்.

பாரத அரசில் காங்கிரஸ் தர்பார் நடந்த காலமெல்லாம் விவேகமற்ற முறையில் ஹிந்தியைத் திணிக்க முயன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்கும் சக்திகளின் பாட்டுக்கு ஆட்டம் போட்ட அவலம் நீடித்தது. தமிழை உலகின் முதன்மை மொழி என்று பறைச்சாற்றி, பாரதத்தின் மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்ற கருத்தை பா.ஜ.க அரசு கடந்த எட்டே ஆண்டுகளில் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்தாயிற்று. இப்போது வந்து கிடைக்கிற மேடைகளை பயன்படுத்தி ஸ்டாலின் மொழிக் காழ்ப்பை விதைத்து மக்களைப் - பிரித்து மோதவிடும் வெள்ளையன் சூழ்ச்சிக்கு தன்னையறியாமல் துணைபோவது விபரீதம்.

தொன்று தொட்டு திருத்தல தரிசனத்திற்காகவும் திரவியம் தேடுவதற்காகவும் பல்வேறு மொழி பேசுவோர் பாரத பூமியில் இடைவிடாமல் நாலா திசையிலும் சென்று வருவதும் குடிபெயர்வதும் நிகழ்ந்து கொண்டே இருந்ததே, அப்போதெல்லாம் மக்களை இனிமையான சூழலில் எந்த மொழி இணைத்தது என்று கண்டறிந்து உண்மையான வரலாற்றுத் தகவலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது. நேர்மாறாக, மொழியை பூச்சாண்டியாக்கிக் காட்டும் பத்தாம் பசலிப் பழக்கத்தை மாநில முதலமைச்சர் கைவிட மறுக்கிறார். கடை விரிக்கிறார். இவர் சரக்கை வாங்கத்தான் ஆளில்லை.

பாரதம் மொழிகள் நிறைந்த தேசம். 'எந்த ஒரு பாரத மொழியானாலும் மக்களை பிரிக்கத்தான் முடியும்; இணைக்க முடியாது' என்று வெள்ளையனின் எச்சமான ஆங்கில மொழியில் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்து விட்டுப் போனதை இன்றைய தலைமுறை நம்பப் போவதில்லை. எல்லா விஷயங்களிலும் வியாபிக்கும் சுதேசி உணர்வு, மொழி விஷயத்தில் மட்டும் விலகி நிற்குமா என்ன?" இதுதான் விஜயபாரதத்தின் தலையங்கம்.

வெள்ளையன் வருவதற்கு முந்தைய கால கட்டத்தில் எத் தனையோ நூற்றாண்டுகளாக இமயம் முதல் குமரி வரை ஹிந்து கலாச்சாரம் மட்டுமே ஒரே தேசமாக உருவாகி இருந்ததாம். 

எந்த கால கட்டத்திலும் இந்தியா ஒரே தேசமாக இருந்த தில்லை என்ற அரிச்சுவடி கூடத் தெரியாமல் எழுதுகிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு.

புராணங்கள் இதிகாசங்களில்கூட 56 தேசங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளன. 

அதுவும் ஹிந்துக் கலாச்சாரம் மட்டும்தான் இருந்ததாம் என்று வெள்ளைக்காரனை ஏகடியம் செய்து எழுதப்பட்ட இதே தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வெள்ளையன் கொடுத்த பெயர் தான் 'ஹிந்து' என்று இவர்களின் லோகக் குருவான மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார் (தெய்வத்தின் குரல்).

ஹிந்துக் கலாச்சாரம் என்பது ஒரு கலாச்சாரம்தானா? ஒரே கலாச்சாரம் தானா? சிவன் சாமி ஊர்வலம் வந்தால் வைணவக் கோயில் கதவை இழுத்துச் சாத்துவானேன்?

வைணவத்திலேயே வடகலை, தென் கலைக் கலாச்சாரச் சண்டை ஊர் சிரித்த ஒன்றாயிற்றே.

இன்னும் ஒரு 'அக்மார்க்' நகைச்சுவை என்ன தெரியுமா? பாரதத்தின் மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்று அறிவித்தது மோடி ஆட்சிதானாம். எட்டாவது அட்டவணையையே ஏற்படுத்தியதே நாங்கள் தான் என்று மார் தட்டினாலும் தட்டு வார்களோ!

கடவுள் பிர்மாவே பொய் சொன்னான் என்பதற்காகத் தானே அவனுக்குக் கோயில் இல்லாமல் போனது எல்லாம் திருவண்ணாமலை தலப் புராணத்தைப் படித்தால் தெரிந்து கொள்ளலாமே.

ஒற்றை மொழி ஆட்சி என்பது ஆகாத ஒன்று என்று முதல் அமைச்சர் மானமிகு, மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னது முற்றிலும் சரியே! முதல் அமைச்சருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க விஜயபாரதங்கள் முந்திரிக் கொட்டைத்தனமாக மூக்கை நீட்ட வேண்டாம். வெள்ளைக்காரன் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்யும் 'விஜயபாரத' பார்ப்பனக் கூட்டம் உடை, உறையுள், கல்வி வரை வாழ்க்கை முறைகளை எல்லாம் யாரைப் பின்பற்றுகிறார்களாம்? இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் ஜெர்மன் படித்தவர்களாயிற்றே இந்த மாம்பலம், மயிலாப்பூர் கூட்டம்!

No comments:

Post a Comment