கோவாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்களை வளைத்தது போல் கேரளாவிலும் கிறிஸ்தவர்களை வளைக்க பா.ஜ.க. திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

கோவாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்களை வளைத்தது போல் கேரளாவிலும் கிறிஸ்தவர்களை வளைக்க பா.ஜ.க. திட்டம்

 பா.ஜ.க. பச்சோந்தி போன்றது. எங்கு இருக்கிறதோ அதற்கேற்ப நிறம் மாறி தன்னை நல்லவன் போல் காட்டிக்கொண்டு தான்  விரித்தவலையில் சிக்கிய வர்களை மடக்கிப் போடும் குணம் அதற்கு உண்டு. 

 இந்தியாவில் கிறிஸ்தவர்களின் தலைமையிடம் எது என்றால் அதை கோவா என்று கூறுவார்கள்.  வாஸ்கோடாகாமா வந்து இறங்கிய இடம் கோழிக்கோடு, பிற்காலத்தில் கோவா போர்ச்சுகீசியர்களின் இந்திய தலைமையகமாக மாறியது. 

கோவாவின் கொங்கணிகள் பெரும்பாலும் மீன்பிடித் தொழி லைச் செய்துவந்ததால் அவர்களை அன்றைய காலகட்டத்தில் இருந்த வேதமரபை பின்பற்றியவர்கள் ஒதுக்கி வைத்தனர். அதே நேரத்தில் போர்ச்சுகீசியர்கள் கொங்கண் மீனவர்களை அரவ ணைத்ததால் சில ஆண்டுகளிலேயே கோவாவில் கத்தோலிக்க மதத்தை கொங்கணிகள் பின்பற்றினர். அதன் தாக்கம் மேற்கே  குஜராத் கடற்கரை துவங்கி கிழக்கே ஒடிசா கடற்கரை வரை மீனவர்கள் கத் தோலிக்க மதத்திற்கு மாறினர். அதிலும் தென் இந்தி யாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலமக்கள் கிறிஸ்தவ மதத்தை அதிகம் பின்பற்றினர். 

அதே போல் வடகிழக்கு மாநி லங்களுடன் முதல் முதலில் மக்கள் தொடர்பை ஏற்படுத்தியது ஆங்கி லேயர்கள், ஆகையால் வட கிழக்கு மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டனர். 

 இந்த நிலையில் சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்கை காரணமாக பெருவாரியான கிறிஸ்தவர்கள், இஸ்லாமி யர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர். அதே போல் மாநிலக்கட்சிகளும் மாநில சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வாக்குறுதி அளித்ததால் திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு சிறுபான்மை மக்கள் பெரிதும் ஆதரவு அளித்தனர். 

ஆனால் மேற்கு, மத்திய மாநி லங்களில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இணை யாக எதுவும் வளர முடியாததால் சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சியை மட்டுமே நம்பி இருக்கும் சூழல் உருவாகியது.

தங்களின் பாசிசக் கரத்தினைக் கொண்டு இந்தியா முழுமையையும் பற்றத்துடிக்கும் ஹிந்துத்துவ அர சியல் பிரிவான பாஜகவிற்கு கோவா, கேரளா போன்ற மாநிலங்களில் பெருவாரியான கிறிஸ்தவர்களை வளைப்பது அத்தியாவசியமாகி விட்டது. மத்திய, வட இந்திய மாநிலங்களில் பசுமாட்டை தெய்வமாகக் கும்பிட்டு பசுவதைக்குத் தடை போட்ட பாஜக வட கிழக்கு மாநி லங்களில் மாட்டிறைச்சியை மாநில உணவாகவும், எளிதில் கிடைக்கும் வகையிலும் வசதிகள் செய்து தரு வோம் என்றும் தேர்தல் அறிக்கை யில் வாக்குறுதி கொடுத்தது. 

 அதே நேரத்தில் அங்கு உள்ள பெரும்பான்மை கிறிஸ்தவர்களி டையே பல குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களிடையே உள்ள போட்டிகளைப் பயன்படுத்தி தனக்கு சாதகமான குழுக்களை வளைத்துப்போட்டு அந்தக் குழுக்கள் மூலம் பா.ஜ.க. என்பது ஹிந்துக் களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்குமான கட்சி தான் என்று நம் வைத்தது. மேலும் அங்கு இத்தனை ஆண்டுகளாக  ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு ஊழல் புகார்களை சுமத்தி மக்களிடையே காங்கிரசுக்கான ஆதரவைக் குலைத்து விட்டது, அதே போல் அங்கிருந்து நாகாலாந்து, மேகாலயா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்த பிரிவினைவாதக் குழுக்களோடு சேர்ந்து அவர்களுக்கு பல போலி வாக்குறுதிகளை அளித்து பாஜக வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து விட்டது. 

 இதே பாணியை கோவாவில் பயன்படுத்தி முதலில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைத்தது, அதன் பிறகு கிறிஸ் தவர்களுக்குப் பல சலுகைகளை அள்ளிக் கொடுத்து கோவாவையும் வளைத்துப் போட்டது. 

தற்போது ஆட்சிக்குத் தேவை யான வாக்குகளை வைத்திருக்கும் சிறுபான்மையின மக்கள் தொகை யைக் அதிகமாகக் கொண்ட கேர ளாவை நோக்கி தனது பார்வையைத் திருப்பி உள்ளது.  உள்ளூர் பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக தேசியப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி உள்ளார். இதற்கு மாநில பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவிக்காத நிலையில் அவர்களை சமாதானப்படுத்தி கிறிஸ்தவர்களிடையே பா.ஜ.க.வை கொண்டு செல்லும் திட்டங்களை வகுத்துவருகிறது.

  தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்களை பா.ஜ.க.வின் முக்கியப் பொறுப்பில் அமரவைத்து மெல்ல மெல்ல மக்களிடையே பா.ஜ.க.வைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமே நேர் எதிர்க்கொள்கை கொண்ட மாநில மாகவும், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மாநில நலன்களுக்கு ஒன்றிய அரசு எதிராக நிற்கும் போது, சமரசமில்லாமல் எதிர்த்துநிற்கும் குணம் கொண்ட அரசுகளாக உள்ளது. 

2024 ஆம் ஆண்டில் நடை பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்த லுக்காக இந்த இரண்டு மாநிலங் களிலும் தங்களது கட்சியை வளர்க்க பணத்தை வாரி இறைப்பதோடு சிறுபான்மையின மக்களையும் மடக்க பாஜக தலைமை களமிறங்கி உள்ளது.

- 'பாணன்'


No comments:

Post a Comment