பிரதமருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு: நீட் விலக்கு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

பிரதமருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு: நீட் விலக்கு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு

புதுடில்லி, ஆக.18 டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.8.2022) சந்தித்துப் பேசினார். அப்போது, 'சதுரங்க ஒலிம்பியாட்’ போட்டியை தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், தமிழ்நாட் டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார். முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகி யோரை முதலமைச்சர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது  ”பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட்” போட்டி, கடந்த ஜூலை 28 முதல் ஆக.9 ஆம் தேதிவரை நடந்தது. ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். 

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந் நிலையில், பிரதமரை சந்தித்து, நன்றி தெரிவிப்பதற்காக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 16.08.2022  இரவு டில்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலர் வெ.இறை யன்பு, முதலமைச்சரின் செயலர்கள் சென்றனர். டில்லி சென்ற முதலமைச்சசரை மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா  டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அன்றிரவு முதலமைச்சர் அங்கு தங்கினார். 

குடியரசுத் தலைவருக்கு - தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பெட்டகம்

இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, 44 ஆவது 'சதுரங்க ஒலிம்பியாட்’ போட்டி நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கிய ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற நூலையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பெட்டகத்தையும் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் பரிசளித்தார்.

அதைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த முதலமைச்சர், அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு  தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாக்களுக்கு அழைப்பு வந்திருந்தது. என்னால் வரமுடியாத சூழல் ஏற்பட்டதால், இன்று அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இருவரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக பேசினர். தமிழ்நாட்டில்  இருக்கும் அரசியல் சூழல், ஆட்சியின் சிறப்புகள் பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு மன நிறைவாக இருந்தது. சென்னையில் நடந்த 44 ஆவது 'சதுரங்க ஒலிம்பியாட்’ போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று பிரதமர் சென்னைக்கு வந்து போட்டியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப் பிதழை நேரடியாக வந்து கொடுக்க வேண்டும்  என்று நினைத்திருந்தேன். அப்போது, கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டேன். தொலைபேசியில் அதுபற்றி சொன்னதை ஏற்று பிரதமர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். போட்டியை தொடங்கி வைத்ததற்கு நன்றி சொல்வதற்காக பிரதமரை சந்திக்க உள்ளேன்.

பிரதமருடன் சந்திப்பு

ஏற்கெனவே பிரதமரிடம் தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளேன். அவற்றில் இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டி யுள்ளது. எனவே, அதையும் நினைவூட்டி, கோரிக்கை களை பிரதமரிடம் தெரிவிக்க இருக்கிறேன். நீட் விலக்கு மசோதா குறித்து ஏற்கெனவே இருந்த குடியரசுத் தலை வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். புதிய குடியரசுத் தலைவர் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளார். அத னால், அவரிடம் எந்தக் கோரிக்கையும் வைக்க வில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான். 

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மாலை 4.30 வரை நீடித்தது. 44 ஆவது  “சதுரங்க  ஒலிம்பியாட்” போட்டி தொடக்க விழாவுக்கு வந்து போட்டியை தொடங்கி வைத்ததற்காகவும், விருந்தோம்பல் குறித்து பாராட்டியதற்கும் பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். பின்னர், தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார்.

பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் அடங்கிய 

நினைவுப் பரிசு!

குறிப்பாக, நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவது, ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது, புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டிற்கு துறைகள் வாரியாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது, நதிநீர் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, பிரதமருக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் 'சதுரங்க ஒலிம்பியாட்’ நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு நூல் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார். 

டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு  நேற்றிரவு முதலமைச்சர் சென்னை திரும்பினார்.

No comments:

Post a Comment