TNPSC Group 4 தேர்வு: ஓ.எம்.ஆர். தாள் நிரப்புவது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

TNPSC Group 4 தேர்வு: ஓ.எம்.ஆர். தாள் நிரப்புவது எப்படி?

TNPSC குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வு; தேர்வு அறைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும், ஓ.எம்.ஆர். தாள் நிரப்புவதற்கான ஆலோசனைகளும் இங்கே குரூப் 4 தேர்வு நாளை ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓ.எம்.ஆர். தாளை எவ்வாறு நிரப்ப வேண்டும், எவ்வாறு விடைகளை குறிக்க வேண்டும், தேர்வு கூடத்திற்கு எத்தனை மணிக்குச் செல்ல வேண்டும், தேர்வறையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். 9 மணிக்குப் பிறகு, அதாவது 8.59க்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முதலில் தேர்வர்கள் தேர்வுக்கு தேவையான நுழைவுச்சீட்டு, பேனா உள்ளிட்ட பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வர்கள் இது ஒரே ஒரு எழுத்து தேர்வு என்பதால், அதிகபட்ச வினாக்களுக்கு பதில் அளிக்க முயற்சிக்க வேண்டும்.

அடுத்ததாக ஓ.எம்.ஆர். தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டவுடன், அது உங்களுக்கு உரியது தானா என நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஓ.எம்.ஆர். மாறியிருந்தால், உங்கள் விடைத்தாள் நிராகரிக்கப்படவோ அல்லது மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவோ வாய்ப்புள்ளது. பின்னர் ஓ.எம்.ஆர். படிவத்தில் தேவையான விவரங்களை கவனமுடன் நிரப்புங்கள்.

ஓ.எம்.ஆர். தாள் இரண்டு பக்கங்களைக் கொண்டதாகவும், இரண்டு பகுதிகளாகவும் இருக்கும். இதில் உங்களுடைய பெயர், பதிவெண், பாடப்பிரிவு, தேர்வு மய்யம், நாள், ஒளிப்படம் உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே அறை கண்காணிப்பா ளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன்பாக ஓ.எம்.ஆர். தாளில் எதையும் செய்யக் கூடாது.

பின்னர் அடுத்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படித்து கையொப்பமிட்டுக் கொள்ளுங்கள்.

ஓ.எம்.ஆர். தாளில் எழுத அல்லது நிரப்ப என எதை செய்தாலும் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவைத் தான் பயன்படுத்த வேண்டும். வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்ததாக வினாத்தாள் கொடுக்கப்பட்ட வுடன் அவற்றில் எல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்தபின், வினாத்தாள் எண்ணை ஓ.எம்.ஆர். தாளில் நிரப்ப வேண்டும். முதலில் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் எழுதிய பின்னர், அதற்கு நேராக உள்ள வட்டங்களை மையிட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

ஓ.எம்.ஆர். தாளில் வட்டங்களை மையிட்டு நிரப்பும்போது - வட்டங்களை முழுமையாக மையிட்டு நிரப்ப வேண்டும். முழுமையாக செய்யாவிட்டால், விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.

அடுத்ததாக விடையளிக்கும்போது, நீங்கள் எந்தக் கேள்விக்காவது விடையளிக்க விரும்பவில்லை என்றால், ணி என்பதை வட்டமிட வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள 200 கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்.

பின்னர் தேர்வு முடிந்த பின்னர், ஒவ்வொரு ஆப்ஷனிலும் எத்தனை வினாக்களுக்கு விடையளித்துள்ளீர்கள் என்பதை அதற்குரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.

இறுதியாக, விடைகளின் எண்ணிக்கையை அறை கண்காணிப்பாளர் எழுதிய பின்னர், கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கையெழுத்திடுங்கள்.

அடுத்ததாக, ஓ.எம்.ஆர். தாளை எக்காரணம் கொண்டும் சேதப்படுத்தக்கூடாது. கைரேகை வைத்த உடன் உங்கள் கையில் உள்ள மை ஓ.எம்.ஆர். தாளில் படாதாவாறு முன்னரே நன்கு துடைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக, தேர்வில் நீங்கள் விடையளிக்கும்போது, வினாக்களை ஒரு முறைக்கு இருமுறை படித்து தெளிவான பின் விடையளியுங்கள். ஏனெனில் ஒருமுறை விடையளித்து விட்டால் பின்னர் திருத்த முடியாது.


No comments:

Post a Comment