இலங்கை, இத்தாலியிடம் இந்தியா பாடம் கற்று இந்தியப் பொருளாதார நிலையை உயர்த்த முன்வரட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

இலங்கை, இத்தாலியிடம் இந்தியா பாடம் கற்று இந்தியப் பொருளாதார நிலையை உயர்த்த முன்வரட்டும்!

 * ரூபாய் மதிப்பு இழப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி!

* பணவீக்கம் 7 விழுக்காட்டைத் தாண்டி, விலைவாசி விண்ணை முட்டுகிறது!

இந்தியாவில் இப்பொழுது ஏற்பட்டுள்ள பண வீக்கமும், விலைவாசி உயர்வும் வெகுமக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்துவிட்டது. இலங்கை, இத்தாலி நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து பாடம் கற்று, பொருளாதார நிலை இந்தியாவில் சீர்பட உரிய முயற்சியை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

நமது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து சரிந்து தற் போது 80.5 ரூபாய் அமெரிக்க ஒரு டாலருக்கு நிகராக என்ற செய்தி நமது பொருளாதாரம் - நிதி நிர்வாக மேலாண்மை எப்படி? எங்கே? செல்கிறது என்பதையே காட்டுகிறது!

ரூபாய் மதிப்பு இழப்பால் ஏற்பட்ட விபரீதம்

முந்தைய பண மதிப்பு இழப்பு ஓரிரவு அறிவிப்பினால், ஏற்பட்ட பலாபலன் போதிய கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வராமல் ஏற்பட்ட தோல்வி என்பதோடு, ‘‘வெளிநாட்டில் பலர் பதுக்கிய அல்லது சுவிஸ் வங்கிகளில் போன்று தங்களது பணத்தை போட்டு வைத்திருப்பதை இங்கே கொண்டு வருவோம்'' என்று 8 ஆண்டுகளுக்குமுன்பே முழங்கியது உருப்படி யான சாதனை செயல்களாக மலர்ந்தனவா? இல்லை; மிஞ்சியது ஏமாற்றமே!

வேலை கிட்டாதோர் எண்ணிக்கை இளைஞர்களி டையே பெருகிக் கொண்டுள்ளது.

ஒன்றிய அரசில் நிரப்பப்படாத பணிகள் சுமார் பத்து லட்சம் என்று அத்துறை அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்!

பண வீக்கமோ ஏழு சதவிகிதத்தையும் தாண்டி விலை வாசி உயர்வுகள் விண்ணை முட்டும் அளவுக்கு ஆகிவிட்டன.

அடிப்படைப் பொருள்களுக்குக்கூட 

வரி உயர்வு நியாயமா?

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளையின் விலை - இல்லத்தரசிகளின் வேதனைக்குரியதாக உள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துகொண்டே வருவது - விரும்பத்தகாத நிலை - நாளும் கவலை யளிக்கிறது.

விவசாய விளைபொருள்களுக்குரிய ஆதார அடிப் படை விலை (M.S.P.) நிர்ணயம் இன்னமும் செயல் வடிவம் பெறவில்லையே!

வர்த்தகப் பற்றாக்குறை (Trade deficit) கடந்த ஜூன் மாதம் முதல் அதிகரித்து வருகிறது!

ஏற்றுமதி குறைவு - இறக்குமதி அதிகம் என்ற பொருளாதார கீழிறக்கம்

வெளிநாடுகளுக்கு நாம் விற்கும் பொருள்களுக்கு அதிகமாகவே வெளிநாடுகளிலிருந்து நாம் வாங்கும் நிலை - இறக்குமதிக்காக செலவிடும் பணம் அதிகமாக வும், ஏற்றுமதிமூலம் செலவிடும் தொகைக்கிடையே உள்ள வித்தியாசம்தான் இந்த ‘வர்த்தகப் பற்றாக்குறை' என்பது.

‘‘இது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், கடந்த மாதம் (ஜூன்) இறக்குமதிக்காகக் கிடைத்த தொகைக்கும், ஏற்றுமதிமூலம் கிடைத்த தொகைக்கும் இடையில் உள்ள பள்ளம்'' - வித்தியாசம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 399 கோடியாகும். இதற்குமுன் எப்போதும் இப்படி ஏற்பட்டதில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

இந்த ரூபாய் நிகர மதிப்பு - டாலருக்கு நிகராக ரூ.80.5 ஆக மேலும் மேலும் நாளும் நாளும் சரிவதன்மூலம் நமது நாட்டிற்கு முதலீடு செய்து, தொழில் தொடங்க வரவிருப்போரும் யோசித்துத் தயங்கவே செய்வார்கள்!

ஜெர்மனும், ஜப்பானும் எப்படி மீண்டன?

இரண்டாம் உலகப் போரில், மிகவும் பாதிக்கப்பட்டு கீழிறக்கத்திற்குச் சென்ற இரண்டு நாடுகள் ஜெர்மனியும், ஜப்பானும்தான்!

ஆனால், அதற்குப் பிறகு அதிலிருந்து அவை மீண்ட வரலாற்றில் அவர்கள் தங்கள் நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக உயர்த்தி அவற்றை Hard Currencies  (ஜெர்மன் ‘மார்க்' - ஜப்பானிய ‘யென்') என்ற அளவில், தொழில் வர்த்தகத்தில் மற்ற நாடுகளை மிஞ்சும் வகையில் அவை இருந்தன என்பது பொருளாதார வரலாற்றுப் பாடங்கள் ஆகும்!

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தவர்தானே!

மாநிலங்களின் நிதிநிலை அதிகாரத்தில் முக்கியப் பங்கு வகித்த விற்பனை வரி வசூலிக்கும் உரிமையைப் பறித்து, ஒன்றிய அரசு தன்வசம் வைத்து, முழு வசூலை நடத்தி, பிறகு அவ்வப்போது மாநிலங்களுக்குத் தங்கள் மனம்போல் பகிர்ந்தளிப்பது, அதிலும் தாமதம் காட்டு வதுபற்றி இன்றைய பிரதமர், அன்று குஜராத் முதல மைச்சராக இருந்தபோது எவ்வளவு கடுமையாக இந்த ஜி.எஸ்.டி. வரிமுறையை - ஒன்றிய அரசு சட்டமாக்குவதை எதிர்த்தார் என்பது மறந்துவிட்டதா?

எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கரோனா கொடுந்தொற்றுக் காலத்திலும் ஜி.எஸ்.டி. வரி வசூல்மூலம் கிடைக்கும் தொகை பெரும் அளவில் பல கோடி பெருகிய நிலையில், மேலும் மேலும் ஏழை, எளிய, நடுத்தர, சாமானிய மக்களின் இடுப்பை உடைக்கும் வகையில், பாக்கெட் அரிசி, பாக்கெட் தயிர் போன்ற வற்றிற்குக்கூட ஜி.எஸ்.டி. வரி என்றால், அது பரிதாபத்திற்குரிய கொடுமையல்லவா?

பாக்கெட் செய்து விற்றால் வரி, பாக்கெட் செய்யாமல் விற்றால் வரி இல்லை - 

இது என்ன அணுகுமுறை?

அதே பொருள் தனியாக - பாக்கெட் செய்யாமல் விற்றால் வரி இல்லை; பாக்கெட் செய்து விற்றால் வரி என்றால் நியாயம்தானா? இதில் என்ன அணுகுமுறை இருக்கிறது?

சுகாதாரக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், தரமான வற்றை பாக்கெட் செய்து விற்பது தூய்மைக்கேடு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்! அதற்குத் ‘‘தண்டனை'' தருகிறதா ஒன்றிய அரசு?

விலைவாசி நாளும் உயர்ந்து மக்களை அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் விடும்படிச் செய்திடும் நிலையில், இப்படி மேலும் மேலும் துன்பப்படுத்துவது எவ்வகையில் ஏற்கத்தகுந்தது?

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள 

நிலையிலிருந்து பாடம் கற்கவேண்டாமா?

இலங்கையில் ஏற்பட்ட அந்நாட்டு மக்கள் எழுச்சி, முந்தைய ஆட்சியாளர்களான ராஜபக்சே, கோத்தபய வம்சாவளியை, இரவோடு இரவாக வெளிநாடுகளுக்குப் பறக்கிற - தஞ்சம் தேடி அலையும் நிலை போன்று நம் நாட்டிற்கு வராமல் தடுக்க மக்களின் மனவேதனையை அணைக்கும் யதார்த்தத்தை மறந்து, ‘எல்லாம் சரியாக இருக்கிறது' என்று சமாதானப் பிரசங்கம் செய்து கொண்டே இருந்தால் நிலைமை சீரடைந்துவிடுமா?

வரலாற்றிலிருந்து அண்டை நாடு இலங்கையோடு, இப்போது இத்தாலியும் சேர்ந்துள்ளது; முன்பு துருக்கியும் பாடம் எடுத்தது; இதிலிருந்து நாம் பாடம் கற்று, வருமுன்னர் காக்க, மக்கள் அதிருப்தி - அவதி நிலை - வடிக்கும் கண்ணீரைத் துடைக்காமல் இருப்பது ‘‘குறைந்த அரசு; நிறைந்த ஆளுமை'' என்று கூறி, பதவியைப் பிடித்த பா.ஜ.க.வுக்கு அழகாகுமா?

பத்திரிகை சுதந்திரத்தில் உலக மொத்த நாடுகள் 180 இல் இந்தியாவுக்கான இடம் 150

பத்திரிகை சுதந்திரம் உள்ள மொத்த நாடுகள் 180 இல், நமது நாடு 150 ஆவது இடத்தில் இருப்பது ஜனநாய கத்தின் நான்காவது தூணை எப்படி சின்னாபின்னப் படுத்துகிறது ஒன்றிய அரசு என்பதைத்தானே விளக்குகிறது!

பிற நாட்டு அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகி, நம் மக்களுக்கு உரிய விடியல் கிட்டவேண்டும் - ஆட்சியாளர்கள் இணக்கமாக சிந்திக்கத் தவறக் கூடாது.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.7.2022


No comments:

Post a Comment