கார்ப்பரேட் + காவிகளின் கரங்களில் மோடியின் ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

கார்ப்பரேட் + காவிகளின் கரங்களில் மோடியின் ஆட்சி!

மோடியின் ஆசீர்வாதத்தால் உலகின் இரண்டாவது பணக்காரராக மாறியுள்ளார் அதானி. இவர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  2014 ஆம் ஆண்டு மே மாதம்  147ஆவது இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க் 2024ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று டிரிப்லட் அப்ரூவ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போதைய ஆண்டு வருமானம் மற்றும் அவர்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி சதவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியுள்ள இந்த நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்து பின்னர் வாங்க மறுத்த அமெரிக்க முதலீட்டாளர் எலோன் மஸ்க் இரண்டாண்டுகளில் உலகின் முதல் டிரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று கணித்துள்ளது.

அதேபோல், இந்தியாவின் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2025ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலரைத் தொடும் என்றும், டிரில்லியன் டாலரைத் தொடும் இரண்டாவது நபராக இருப்பார் அவர் என்றும் கூறியுள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவன தலைவர் ஷாங் இமிங் 2026ஆம் ஆண்டில் இந்த நிலையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் 30 முன்னணி பணக்காரர்களில் 21 பேருக்குத் தங்கள் வாழ்நாளில் டிரில்லியனராகும் வாய்ப்பு உள்ளதாக அந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடியாகும். டிரில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 2029ஆம் ஆண்டு இடம் கிடைக்கும் என்றும், அமேசான் நிறுவனம் ஜெப் பைசாசுக்கு 2030ஆம் ஆண்டில் இடம் கிடைக்கும் என்றும் அந்நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கூகுள் நிறுவனர் லார்ரி பேஜ் (2032), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேனாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் (2032), பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பேர்க் (2034), ஆரக்கிள் தலைமை செயல் அதிகாரி லார்ரி எலிசன் (2036), மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் 2044 இல் டிரில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள். நீண்ட ஆண்டுகளாக தொழில்துறையில் பணக்காரர் இடத்திற்கு போட்டி போட்டுவரும் போது  7 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 147 ஆம் இடத்தில் இருந்த அதானி சூப்பர் சோனிக் ஜெட் வேகத்தில் முதலிடத்தை நெருங்கி உள்ளார்.   

இதற்காக பிரதமர் மோடியின் சிறப்பு ஆசீர்வாதம் அதானிக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட பல ஆயிரம் கோடி ரூபாய். மதிப்புள்ள ஒரு மின் திட்டத்தை இலங்கை அரசு அதானிக்கு கொடுக்கவேண்டும் என்று மோடி நெருக்கடி கொடுக்கவில்லையா? அதனடிப்படையிலேயே அதானிக்கு குறிப்பிட்ட மின் திட்டம் வழங்கப்பட்டதாகவும் அதன் மின்சாரத் துறை தலைவர் தெரிவித்திருந்தார். இதனால்  மோடிக்கு ஏற்பட்ட கோபத்தை தணிக்க இலங்கை அதிபராகவிருந்த கோத்தபயா ராஜபக்சே மின்சாரத்துறைத் தலைவரை பதவியில் இருந்து நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இப்படி ஒரு பிரதமரே முன்னின்று ஆதரவு தெரிவித்த காரணத்தால் தான் 7 ஆண்டுகளில் 150 இடங்களைக் கடந்து 2 ஆம் இடத்தை பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பிரதமராக வந்த காலந்தொட்டு நாடு பொருளாதாரத்துறையில் கார்ப்பரேட்டுகள் கையிலும், சமூக அமைப்பு ஹிந்துத்துவா பேசும் கும்பலின் கரத்திலும், கல்வி, உத்தியோகங்கள், ஆதிக்கஜாதிகளின் கரத்திலும், ஜனநாயகம் குப்பைத் தொட்டியின் காலடியிலும், மதச்சார்பின்மை மண்ணுக்கடியிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளன.

ஆம் பிறகு எதேச்சதிகாரத்தின் கையில் பாசிசக் கொடி ஏந்தி பறந்து கொண்டு இருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!

 .

No comments:

Post a Comment