பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உலகச் சுற்றுச்சூழல் கோட்பாட்டினைச் சுமக்கும் வளாகம் - பெருமையோடு பறைசாற்றுவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உலகச் சுற்றுச்சூழல் கோட்பாட்டினைச் சுமக்கும் வளாகம் - பெருமையோடு பறைசாற்றுவோம்

முனைவர் விஜய் அசோகன்
அறிவியல் ஆராய்ச்சியாளர், சுவீடன் மற்றும் வருகைதருப் பேராசிரியர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம்

மரபுசாரா எரிசக்திப் பயன்பாடுகள், நிகரச் சுழியக் கரிம வெளியீடு (net zero carbon)  போன்ற கோட்பாடுகள் உலகெங்கும் விவாதிக்கப்படுவதும், ஆய்வுகுட்படுத்துவதும், அரசுசார் கொள்கை வடிவமைப்புகளில் இடம்பெறுவதும் என கூட்டுப் பரிணாமங்களின் தொகுப்பாக மாறி நிற்கின்றன. 

குறிப்பாக, பல்கலைக்கழக, அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளில், திட்ட மேலாண்மைகளில் உலகெங்கும் இருக்கும் கல்விக் கழகங்கள் முனைப்பாகச் செயல்பட்டு, சுற்றுச்சூழல் மேம்பாட்டில் பங்காற்றி வருகின்றன. இந்திய ஒன்றிய அளவிலுமே கூட ஜூலை 2021இல் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் உட்பட 12 உயர்தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள்    (Higher Educational Institutes)  நிகரச் சுழியக் கரிமக் கல்வி வளாகங்களை உருவாக்க உறுதிமொழி எடுத்துள்ளன. அதன் பின், இதுவரை 250 இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் அத்தகைய உறுதிமொழிகளை ஏற்றுள்ளன.

உலக அளவிலேயே கூட, Times Higher Education Climate Impact Forum, இல், 68 நாடுகளைச் சார்ந்த 1,050 பல்கலைக்கழகங்கள், உலகக் கூட்டு ஒப்பந்தங்களில் ஒன்றான 2050ற்குள் நிகரச் சுழியக் கரிம வெளிப்பாடுக் கோட்பாட்டில் இணைவதாகவும் அதற்கேற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வித்திட்டங்களைச் செயற்படுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.

நம் பெரியார் மணியம்மை வளாகத்தின் தொலைநோக்குப் பார்வை

காலச்சூழலின் தேவைக் கருதி, தற்பொழுது விழிப் புணர்வுப் பெற்று, பல்வேறு பல்கலைக்கழகங்களும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக் கோட்பாட்டில் ஒவ்வொன்றாக இணைந்து வரும் நிலையில், தஞ்சையில் வீற்றிருக்கும் நம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்) பல்வேறு சுற்றுச்சூழல் கோட்பாட்டினை தாங்கி நிற்கும் பெருமைமிகு வளாகமாக தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளதை நான் நேரில் கண்டு வியந்து போனேன்.

நிகரச் சுழியக் கரிம வளாகம்

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தினுள்  பேணிக்காக்கப்படும் 4500 குறுஞ்செடிகளும் 26,000 உள் ளூர் மரவகைகள் மற்றும் அருகிவரும் மரவகைகள் ஆகிய வற்றால், நாளொன்றிற்கு 8.4 டன் ஆக்சிசன் (உயிர்வளி, oxygen) உமிழப்படுகிறது, 1.6 டன் கார்பன் டை-ஆக்ஸைட் உறிஞ்சப்படுகிறது. 

மாற்றுக்கட்டுமானப் பொருட்கள் (Alternative Building Materials) வகைகளான பாவுநன் கட்டைகள்(Paver Blocks), , இரட்டைப்பிணைக் கட்டைகள் (Interlocking Blocks),  உள்ளீடற்றக் கட்டிடக்கல்/குடைவுக் கட்டைகள், (Hollow Blocks)  போன்றவை புதுமைத் தொழில்நுட்பப் பயன்பாட்டால் உருவாக்கப்பட்டு, வளாகத்தின் உள்கட்டு மானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பெரியார் காகித மறுச்சுழற்சி மய்யம், அனைத்துக் காகி தங்களையும் மீண்டும் பயன்படும் பொருளாக உருமாற்றம் செய்கிறது. மறுச்சுழற்சி மய்யத்தில், வளாகத்தினுள் கிடைக் கும் காகிதங்களோடு, வலுவூட்டிகளாக பஞ்சுக்கழிவுகளையும் இணைத்து உயர்தரப் பொருட்கள் உருவாக்கப்பட்டுகிறது.

பல்கலைக்கழக வளாகங்கள் எங்கும் ஒளிஉமிழ்வு இருமுனைய (Light Emitting Diodes)விளக்குகளுக்கு மாறி வருகின்றன. இத்தகைய விளக்குகள் வெண்சுடர் எரிவிளக்கு  (Incandescent Lamps)  ஒளிஉமிழ்வு விளக்கு களை விட 75% குறைவான ஆற்றலைப் பயன்படுத்தக் கூடியது, இறுகிய கிளர் ஒளி விளக்குகளை  (Compact Flourescence Light)  விட 25% குறைவான ஆற்றலைப் பயன்படுத்தக்கூடியது, அதோடு, LED வகை விளக்குகளை மறுசுழற்சியிட இயலும், நச்சுப் பொருட்கள் அற்றவை என்ப தால் சூழலியல் கேடுகள் ஏதுமில்லை. 

சாலை மாசுக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு

14.02.2020 அன்று பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்த வலியுறுத்தியும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தியும் மாசுக் கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்விற்காகவும், வாகனமில்லா நாள் No vehicles day  கொண்டாடப்பட்டது. இதற்கெல்லாம் முன்பிருந்தே, கரிம உமிழ்வினைக் கட்டுப்படுத்தவும் தொடர் பிரச்சாரங் களும் விழிப்புணர்வு விளக்கங்களும் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்ததால், பேராசிரியர்களும் மாணவ, மாண விகளும் உள்ளார்ந்த உணர்வுடன் பங்குபற்றி இருந்தனர்.

“வாகனமில்லா நாள்” அன்று, பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளும் நடந்தோ, மிதிவண்டியிலோ, பொதுப்போக்குவரத்திலோ மட்டுமே வந்து, இத்தகையச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு, பொது மக்களுமே கூட விழிப்புணர்வு பெற்றனர். அதனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை இத்தகையப் பசுமைப் போக்குவரத்திற்கென பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தால், தஞ்சாவூரின் பெரு நகரச் சாலையில் நாளொன்றிற்கு 65 மகிழுந்துகளும் 520 இருச்சக்கர வாகனங்களும் செல்வது தவிர்க்கப்பட்டது. 

அதேபோன்று, நெகிழிப் பயன்பாடுகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

பசுமை அறிவியல் (Green Science) திட்டங்கள்:

காகித மறுசுழற்சித் திட்டம் மட்டுமல்ல, பல்கலைக் கழகத்தினுள் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை,  உயிரிவழி மீத்தேனாக்கம், மண்புழு உரம் (Vermicompost), போன்ற பல்வேறு பசுமை முன்முனவுகள் (Initiatives)  தொடங்கப்பட்டுள்ளன.  இதனோடு, மழைநீர் சேகரிப்புத்திட்டங்கள், நுண்ணீர் பாசனம், ஈரப்பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் (Mulching Technology)  போன்ற வைகளும் வளாகத்தினுள்ளேயே செயற்படுத்தப்பட்டு வரு கின்றன. பசுமைத்திட்டங்கள் உட்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சிச் செயற்பாடுகளில் (Sustainable Development Activities)  மிக முக்கியமான பகுதி சுழற்சிமுறை பொருளா தாரம்  (Circular Economy). பல உலக நாட்டுப் பல்கலைக் கழகங்களும் இத்தகைய சுழற்சி முறை பொருளாதாரத்திற்காக தற்பொழுது தான் செயல்திட்டங்களை வகுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது...

நவீன உலகில் பல்கலைக்கழகங்களின் பங்கு:

இவைப்போன்ற செயற்திட்டங்கள் எத்தகைய முக்கியத் துவத்தை நவீன உலகில் பெற்றுள்ளன என்பதற்கு சில உலக உதாரணங்களை நாம் பார்ப்போம்.

காலநிலை மாற்றங்களின் எதிர்விளைவுகளை சமாளித்து மீட்டெடுக்க பல்கலைக்கழகங்களின் பங்கே பெரியது, முன் னெப்பொழுதிலும் விட கல்வித்துறையின் செயற்பாடுகள் இதனை நோக்கிக் கூர்மைப்படுத்துவது மிக அவசியமென வும், பெரு நிலப்பரப்பை உள்ளடக்கிய பல்கலைக்கழக வளா கங்களில் பசுமை அறிவியல் செயற்திட்டங்களை நடை முறைப்படுத்துவதன் வழி, வருங்காலத் தலைமுறைகளையும் பயிற்றுவிப்பதோடு இதன் பங்கு பொதுமக்களுக்கும் உடனடியாக சென்று சேர்ந்துவிடும் என பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் சூழலியல் கூட்டமைப்பின் இயக்குநர் ஃபியானோ கூடுவின் The Guardian இதழில் ஆகஸ்ட் 2020இல் தெரிவித்திருந்தார்.

இதேபோன்றதொரு கருத்தினை, Engineering Policy Advisor மேட் ரூணே IMechE நவம்பர் 2020இல் வெளியிட்ட  “the push for net zero in higher education institutions”  என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவர, இங்கிலாந்தின் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுத்து, பசுமை அறிவியல் திட்டங்களை பலமுனைகளில் விரிவுப்படுத்தச் செய்கின்றனர் எனவும் University College of London ன் நிலையான சூழலியல் துறைத் தலைவர் ரிச்சர்ட் ஜாக்சன் தெரிவித்திருந்தார். 

2021இல் United Nations Climate Change Conference (COP26)  ஒட்டியக் காலப்பகுதியில், உலக நாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியச் செயற்திட்டங்கள் என  566 பல்கலைக்கழகங்கள் இணைந்து வழங்கிய பல்வேறு ஆய்வறிக்கைகளைக் குறிப்பிட்டு வெளியான“The race to net Zero : How global universities are performing”  என்ற ஆவணத்தில் விரிவாக விளக்கப் பட்டிருந்தன. அதில், ஏனைய கல்வி மய்யங்களின் பங்க ளிப்பு உலக அளவில் ஒருங்கிணைய வேண்டிய அவசியத் தையும் வலியுறுத்தி, கூட்டு ஆய்வுகளிலும் கூட்டு செயற் திட்டங்களிலும் உலகப் பல்கலைக்கழகங்கள் இணைய COP26  மாநாட்டில் பங்கு பெறும் உலக நாட்டுத் தலைவர் கள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டியது.  பல்வேறு நவீன அறிவியல் துறையின் வளர்ச்சிகளில் ஒன்றாக காலநிலைக் கல்வியும் (Climate Literacy)  சமீபகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இப்படி உலக அரங்கில் 2020-2021 காலக்கட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்ற பல்வேறு பசுமை அறிவியல் திட்டங்களை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தி வருவது சாதாரணமானவை அல்ல! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஏற்கெனவே சாதித்துக் காட்டிய மேற்கூறிய பசுமை அறிவியல் திட்டங்கள் இந்திய ஒன்றியத்தினுள் இருக்கும் ஏனையப் பல்கலைக் கழகங்களுக்கும் நல் எடுத்துக்காட்டாக நாம் காட்ட வேண் டியுள்ளது. அய்க்கிய நாடுகள் சபையின் நீடித்த நிலையான வளர்ச்சிக் குறிக்கோள்களுள் ஒன்றான இத்தகையத் திட் டங்களை நம் கல்வி நிலையங்களில் பேராசிரியர், மாணவ, மாணவிகளின் பங்களிப்போடும் ஆலோசனைகளோடும் நாம் செய்துவருவது, உலக அரங்கில் ஒலிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment