பிரகலாதன் அவர்கள் மறையவில்லை - ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அவர் நிறைந்திருக்கிறார் - நம்முடைய ரத்த நாளங்களில் அவர் உறைந்திருக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

பிரகலாதன் அவர்கள் மறையவில்லை - ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அவர் நிறைந்திருக்கிறார் - நம்முடைய ரத்த நாளங்களில் அவர் உறைந்திருக்கிறார்

திராவிடர் கழகத்துக்காரர்கள் - இராணுவத்தைப் போன்றவர்கள் - கட்டுப்பாடு மிகுந்தவர்கள் - இந்த நாட்டை, சமூகத்தைப் பாதுகாப்பவர்கள்! 

குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

குருவரெட்டியூர், ஜூலை 20  பிரகலாதன் அவர்கள் மறையவில்லை - ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அவர் நிறைந்திருக்கிறார் - நம்முடைய ரத்த நாளங்களில் அவர் உறைந்திருக்கிறார்; திராவிடர் கழகத்துக்காரர்கள் என்றால், இராணுவத்தைப் போன்றவர்கள், கட்டுப்பாடு மிகுந்தவர்கள் - அவர்கள் இந்த நாட்டை, சமூகத்தைப் பாதுகாப்பவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம்

கடந்த 3.7.2022 அன்று மாலை குருவரெட்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மானம் அவமானம் பார்க்காமல் தொண்டாற்றுவதுதான் பொதுவாழ்க்கை

தனி வாழ்க்கையில் மானம், தன்மானம் வேண்டும். ஆனால், பொதுவாழ்க்கையில் இறங்கும்பொழுது, மானம் பாராமல் தொண்டு செய்யவேண்டும்.

கேவலப்படுத்துவார்கள், கொச்சைப்படுத்துவார்கள், கடுமையாக எதிர்ப்பார்கள், அவமானப்படுத்துவார்கள், அந்த அவமானங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, அன்னை நாகம் மையார் அவர்களைப்பற்றி, அன்னை மணியம்மையார் அவர்களைப்பற்றியெல்லாம் எவ்வளவு கொச்சைப் படுத்தி இருக்கிறார்கள்.

வேறு யாராவது என்றால், ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா?

ஆனால், அதையெல்லாம் ஏற்றுக்கொண்ட பிறகு, இன்றைக்கு எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக் கிறார் அய்யா அவர்கள். அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மானம் அவமானம் பார்க்காமல் தொண்டாற்றுவது.

அடுத்ததாக, குடிசெய்வார்க்கில்லை பருவம் -

அது வெயிலா? மழையா? புயலா? சூறைக்காற்றா? என்றெல்லாம் பாராமல், பொதுவாழ்க்கையில் இருப்ப வர்கள் தங்களுடைய தொண்டை செய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் பொதுவாழ்க்கை - இதை அப்படியே வரித்துக்கொண்டவர்கள்தான் கருப்புச் சட்டைத் தொண்டர்கள் - சுயமரியாதை வீரர்கள் - அதில் முன்னணியில் சிறந்தவர் இந்தப் பகுதியில், மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் வாழும் அருமைத் தோழர் பிரகலாதன் அவர்களாவார்கள்.

அதற்காகத்தான் அவருக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியமானது.

உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக...

எனவே, இந்த நிகழ்ச்சியை ஓர் அற்புதமான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.

நண்பர்களே, மாநில உரிமைகள் என்று உள்ளவை நமக்காகவா? எங்களுக்காகவா? மேடையில் இருக்கிற கட்சிக்காரர்களுக்காகவா?

கிடையாதே!

உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக.

ஒரு சிறு செய்தியைச் சொல்லுகிறேன்,

இங்கே வரும்போது வருகின்ற வழியில், இரண்டு, மூன்று உயர்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தருவேன் என்று சொன்னார், அமைச்சராக இருக்கும்பொழுது, நாடாளு மன்ற உறுப்பினராக, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்பொழுது - இந்தப் பகுதியால் அவரால் பயன்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு, நம்முடைய நாட்டில் பெண்களைப் படிக்க வைத்தார்களா? படிக்கத்தான் முடியுமா? அதற்குரிய வாய்ப்புகள் உண்டா?

தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும், நீதிக் கட்சியும் இல்லையென்றால், இந்த வாய்ப்புகள் வந்திருக்குமா?

இன்றைக்கு காலையில் வந்திருக்கின்ற ஒரு செய் தியை சொல்கிறேன். விடுதலையில் அறிக்கையாகக்கூட வந்திருக்கிறது.

‘திராவிட மாடல்’ என்றால் என்ன?

‘திராவிட மாடல்’ என்றால் என்ன தெரியுமா?

எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் ‘திராவிட மாடல்’.

இன்னார்க்கு இன்னார் என்பது இல்லை.

இங்கே மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள் யார், என்ன ஜாதி? என்று பார்த்திருக்கிறோமா?

ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன் - இந்தக் கருப்புச் சட்டையை அணிந்துகொண்டால், இதைவிட சமத்துவத்திற்கு வேறு ஒன்றுமே கிடையாது.

அய்யா செல்வராஜ் அவர்கள் சொன்னார், கருப்புச்சட்டையைப்பற்றி.

கருப்புச்சட்டையைப் பொறுத்தவரையில், இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால், நம்முடைய சகோதரர்கள் எல்லாக் கட்சிக்காரர்களும் இங்கே இருக்கிறார்கள்; இங்கே இல்லாதவர்களுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன்.

கருப்புச் சட்டை இல்லாத கட்சிக்காரர்கள் கிடையாது

எல்லோரும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள் இப்பொழுது. முதலில் எங்களிடம் மட்டும்தான் இருந்தது. ஆனால், இப்பொழுது கருப்புச் சட்டை இல்லாத கட்சிக் காரர்கள் கிடையாது. எப்பொழுதாவது போராட வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அரசு ஊழியர்கள் உள்பட, ஆசிரியர்கள் உள்பட கருப்புச் சட்டை அணிகிறார்கள்.

‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக் காரன்’’ என்று ஒரு பழமொழி உண்டு.

இப்பொழுது கருப்புச் சட்டை அணியாத வர்களே கிடையாது - எப்பொழுது அதைப் பயன்படுத்துவார்கள் என்றால், சிலர் அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும்பொழுது பயன்படுத்து வார்களே, அது சீசன் கருப்புச் சட்டை.

எம்.ஜி.ஆர். கருப்புச் சட்டை போட்டார், கலைஞர் கருப்புச் சட்டை போட்டார். அவர் ஏற்கெனவே கருப்புடை தரித்திருந்தவர்.

ஒரு காலத்தில் கருப்புச் சட்டைப் போட்டால், திரும்பிப் பார்க்கின்ற எண்ணம் போய், கருப்புச் சட்டைக் காரனை அடித்த அதே மதுரையில், 25 ஆம் தேதி மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு வந்திருக்கின் றோம்.

இப்பொழுது கருப்புச் சட்டை எல்லா இடங்களிலும் இருக்கிறது. எப்பொழுதாவது போராட்டம் என்றால், கருப்புச் சட்டை அணிந்து போராடுகிறார்கள்.  நியாயம் கேட்கவேண்டும் என்றால், அது கருப்புச் சட்டைதான் அணிந்திருக்கவேண்டும் என்கிற அளவிற்கு வந்தாயிற்று.

அதுமட்டுமல்ல, நீதி கேட்கவேண்டும் என்றால், கருப்புச் சட்டைதான்.

உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வழக்குரைஞர்கள் எல்லாம் ஏன் கருப்புடை அணிந்திருக்கிறார்கள்; நீதிமன்றத்திற்குச் சென்று பாருங்கள், ஏன் நீதிபதிகள் எல்லாம் கருப்புடை அணிந்திருக்கிறார்கள்?

பெரியார் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார்.

ஒரு பக்கம் நீதியையும் கேட்டார்; இன்னொரு பக்கம் என்னை ஏன் கீழ்ஜாதிக்காரன் என்றார்கள்; என்னை ஏன் சூத்திரன் என்று சொன்னார்கள்; என்னை ஏன் பஞ்சமன் என்று சொன்னார்கள்; என்னை ஏன் தொடக் கூடாதவன் என்று சொன்னார்கள்; என்னை ஏன் படிக்கக் கூடாதவன் என்று சொன்னார்கள் என்று கேட்டு, மிகப்பெரிய அளவிற்கு அறிவு உணர்ச்சியை உண்டாக்குவதற்கு, இந்த இழிவை மாற்றவேண்டும் என்பதற்கு கருப்புச் சட்டை அணியச் செய்தார்.

 இன்றைக்கு இந்த இயக்கத்தை உடைக்கவேண்டும் என்பதுதான் மிகப்பெரிய அளவில் முயற்சிகள் நடக் கின்றன.

இங்கே அரசியல் பேச விரும்பவில்லை நான் - ஏனென்றால், எல்லா கட்சி நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள்.

மதம் பிரிக்கிறது - பெரியார் இணைக்கிறார்

இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு எல்லோரையும் பெரியார் இணைக்கிறார். ஆனால், மதத்தால் பிரிக் கிறார்கள்; கடவுள்களால் பிரிக்கிறார்கள்; கட்சிகளாலும் பிரிக்கிறார்கள். பிரிந்த கட்சிகளையெல்லாம் நாங்கள் ஒன்று சேர்த்தால், கட்சிகளை உடைப்பதுதான் அவர் களின் வேலையாக இருக்கிறது.

போகும்பொழுது இரண்டு பேரும் ஒன்றாகப் போகிறார்கள்; வரும்பொழுது இரண்டு பேரும் தனித்தனியாக வருகிறார்கள்.

எல்லாக் கட்சிகளையும் உடைக்கவேண்டும் என்கிற அளவிற்கு அவர்கள் வருகிறார்கள் என்றால், அதனு டைய அடிப்படை என்ன?

திராவிடர் கழகத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய பற்று இருக்கிறது. திராவிடம் என்பது இல்லாமல் இருக்க முடியாது.

பச்சைத் தமிழர் காமராஜர் ஆட்சியை ஆதரிக்கிறேன் என்று ஏன் தந்தை பெரியார் சொன்னார்?

குலக்கல்வித் திட்டம் ஒழிந்திருக்காவிட்டால், நாமெல்லாம் படித்திருக்க முடியாது

அந்தக் காமராஜர் இல்லையானால் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்திருக்க முடியாது; குலக்கல்வித் திட்டம் ஒழிந்திருக்காவிட்டால், நாமெல்லாம் படித்திருக்க முடியாது.

இன்றைக்கு அதைப் பெரிதாக்குவதற்குத்தான் திராவிட மாடல்.

1951 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டதே தந்தை பெரியாரால்  - என்று சொன் னால், பெரியாருக்கு எத்தனை எம்.பி.,க்கள் நாடாளு மன்றத்தில் இருந்தார்கள்?

யாரை நம்பினார் தந்தை பெரியார்?

உங்களை நம்பினார் - மக்களை நம்பினார் - மக்கள் போராட்டத்தை நம்பினார் - 

அவர் நீதி கேட்டுப் போகவில்லை - வீதிக்கு வந்தார்.

இன்றைக்கும், நீதி கேட்டுப் போவதைவிட, வீதிக்கு வந்து உங்களைப் பார்த்து ஆயத்தப்படுவதுதான் எங் களுடைய வேலை - கருப்புச் சட்டைக்காரர்களுடைய வேலை.

அதனுடைய அடிப்படையினால்தான் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அன்றைக்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவில்லையானால், இன்றைக்கு இட ஒதுக்கீடு, சமூகநீதி கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா?

பா.ஜ. கட்சியில் நிறைய பேர் எப்படி சேருகிறார்கள் என்பதை இங்கே அழகாகச் சொன்னார்.

யார் யார் தேடப்படும் குற்றவாளிகளோ,

யார்  யாருக்குப் பணம் கொடுத்து சேர்க்கவேண்டும் என்று கணக்குப் போட்டு ஆள் பிடிக்கின்றனர். 

சின்ன பிள்ளையாரை வைத்தால் இவ்வளவு பணம்; பெரிய பிள்ளையாரை வைத்தால் அவ்வளவு பணம் என்று கொடுக்கிறார்கள்.

ஆனால், இதுவரையில் பணத்தைச் செலவழித்து கட்சியை வளர்த்தவர்களுடைய கட்சி வளர்ந்ததாக வரலாறே கிடையாது.

ஒரு கட்சி மக்களால்தான் வளரவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

மக்களை நம்பினார் தந்தை பெரியார்

அப்படிப்பட்ட நிலையில், மக்களை நம்பினார் தந்தை பெரியார். இன்றைக்கும் நாங்கள் ஏன் ‘விடுதலை’ நாளிதழைப் படியுங்கள் என்று சொல்கிறோம்.

88 ஆண்டுகளாக வெளிவரும் விடுதலையில், விளம் பரங்கள் கிடையாது; கவர்ச்சி செய்திகள் கிடையாது; சினிமா செய்திகள் இருக்காது; பரபரப்பு செய்திகள் இருக்காது; அக்கப்போர் செய்திகள் இருக்காது.

ஆழமான செய்திகளைச் சொல்கிறோம்; அறிவியல் செய்திகளைச் சொல்கிறோம்.

யாருக்காக?

உங்களுக்காக -

திராவிடர் கழகம் ஹெல்த் டிபார்ட்மெண்ட்

அரசியல் கட்சிகள் எல்லாம் மெடிக்கல் டிபார்ட் மெண்ட் போன்றவை. முறையாக வந்து தடுப்பூசிகளைப் போடுவது போன்றதெல்லாம்.

திராவிடர் கழகம் போன்ற சமுதாய இயக்கங்களின் பணி; என்னவென்றால், ஹெல்த் டிபார்ட்மெண்ட் போன்றது.

எங்கெங்கே அசுத்தங்கள் இருக்கின்றன -

எங்கெங்கே நோய்க் கிருமிகள் இருக்கின்றன -

அந்த இடங்களில் எல்லாம் மருந்து அடிக்கின்ற வேலைதான்.

ஹெல்த் டிபார்ட்மெண்ட் பணி என்பது முதலில். அதற்குப் பிறகுதான் மெடிக்கல் டிபார்ட்மெண்ட்.

சுகாதாரத் துறை தன்னுடைய பணியை முடித்தால் தான், மருத்துவத் துறையின் பணி தொடங்கும்.

மறுபடியும் மறுபடியும் ஊசியை வீணாக்கிக் கொண்டிருந்தால் என்னாகும்?

அதே அழுக்கு - அதே கிருமி தொடர்ந்து இருந்தால், என்னாகும்? 

சமுதாய நோய்க் கிருமிகளை ஒழிக்கும் பணிகளை செய்துகொண்டிருக்கின்றோம்!

ஆகவேதான் நண்பர்களே, சுகாதாரப் பணியை  - சமுதாய நோய்க் கிருமிகளை ஒழிக்கும் பணிகளை செய்துகொண்டிருக்கின்றோம்.

அந்தப் பணியை செய்வதுதான் இந்த இயக்கம் - பிரகலாதன் போன்றவர்களுடைய உழைப் பினால்தான் இந்த இயக்கம்.

இன்றைக்குத் தாய்மார்கள், சகோதரிகள், அவருடைய குடும்பத்தினர்கள் எல்லாம் எந்தப் போராட்டம் நடந்தாலும், சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருக்கக்கூடிய குடும்பம் இந்தக் குடும்பம்.

எத்தனை பேர் திராவிடர் கழகத்தில் இருக் கிறார்கள் என்பதைப்பற்றி கவலையில்லை. எண் ணிக்கையைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

நோபல் பரிசு வாங்கியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் நாட்டில்?

அவர்கள் சிறுபான்மையினர் என்று ஒதுக்க முடியுமா?

அவ்வளவு தூரம் போகவேண்டாம் - இந்தியா வினுடைய மக்கள் தொகை எவ்வளவு?

திராவிடர் கழகத்துக்காரர்கள் 

இராணுவத்தைப் போன்றவர்கள்

130 கோடியைத் தாண்டப் போகிறது. இந்த 130 கோடி மக்கள் பாதுகாப்புக்கு யாரை நம்பியிருக்கிறோம்?

ராணுவத்தை நம்பி இருக்கிறோம்.

உள்ளூரில் காவல்துறையை நம்புகிறோம்.

நாட்டின் பாதுகாப்பு ராணுவத்திடம்.

அந்த ராணுவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 2 கோடி, 3 கோடி பேர் இருந்தாலே பெரிய விஷயம்.

அதிலும் இப்பொழுது அக்னிபாத் என்கிற குளறு படிகள்.

அந்த இராணுவத்தினர்தானே நம்முடைய நாட்டைப் பாதுகாக்கிறார்கள்.

அதுபோன்று, திராவிடர் கழகத்துக்காரர்கள் என்றால், இராணுவத்தைப் போன்றவர்கள், கட்டுப்பாடு மிகுந்த வர்கள் - அவர்கள் இந்த நாட்டை, சமூகத்தைப் பாது காப்பவர்கள்.

காவல்துறை எப்படி பணி செய்கிறதோ, அதுபோன்று பணி செய்பவர்கள்.

இந்த இயக்கம் பொதுவான இயக்கமாகும். ஒரு கோவில் கட்டினால், அந்த மதத்தைச் சார்ந்தவர் மட்டும் போவார். ஒரு மசூதி கட்டினால், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டும் போவார்கள். ஒரு சர்ச் கட்டினால், கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் போவார்கள். ஆனால், ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் எல்லோரும் போவார்கள் அல்லவா! அது பொது இடம் அல்லவா!

அதுபோன்று, ஒரு காவல் நிலையம் இருந்தால், எல்லோருக்கும் பாதுகாப்புதானே! ஒரு தீயணைப்பு நிலையம் இருந்தால், எல்லோருக்கும் பாதுகாப்புதானே!

எனவேதான் நண்பர்களே, திராவிடர் கழகம் என்று சொன்னால், ஊருக்கு ஒரு காவல் நிலையம் போல - ஒரு பள்ளிக்கூடம் போல - ஒரு மருத்துவமனை போல - ஒரு தீயணைப்பு நிலையம் போன்றது.

பிரகலாதன் மறைந்தாலும் அவருடைய குடும்பத்தினர் அவருடைய பணியை தொடருகிறார்கள்

அதற்கு சிறந்த தொண்டாற்றக்கூடிய தொண்டர்கள் தான் - டாக்டர்கள் போல இருந்து நோய் தீர்க்கக்கூடிய வர்கள்தான் நம்முடைய அருமை பிரகலாதன் போன்றவர்கள். அவர் மறைந்தாலும், இன்றைக்கு அந்தக் குடும்பத்தினர் அவருடைய பணியைத் தொடருகின்றார்கள்.

தந்தை பெரியார் சிலையை யார் பராமரிப்பார்கள் என்று கேட்டார்கள் - மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

பெரியார் எனக்கு சிலை வையுங்கள் என்று சொல்லவில்லை - யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை.

பிறகு அவர் சொன்னார், எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் சிலை வைக்கவேண்டும் - பகுத்தறிவின் அடிப்படையில் என்று சொன்னார்.

அந்த அடிப்படையில், எந்த ஊரிலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஊரில் உள்ள சிலைக்கு உண்டு. அவ்வளவு பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். பெரிய பெரிய நகரங்களில்கூட இதுபோன்று இல்லை.

இருவரும் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள்

அவர் இல்லாத நேரத்தில், என்ன ஆனாலும் சரி, மேலே சென்று தந்தை பெரியார் சிலையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்; நான் போனவுடன், சகோதரர் இளங்கோவன் அவர்களும் மேலே வந்தார். நாங்கள் இரண்டு பேருமே இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள். எங்களுக்கு இருதயம் இருக்கின்ற காரணத்தினால், இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் வந்தது. பல பேருக்கு அந்த அவசியமே வந்ததில்லை. ஏனென்றால், இருதயம் இல்லை - அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள், சென்னையில் உள்ள தோழர் ஒருவரின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார். தோழர் புது வீடு கட்டியிருந்தார், குறுகலான படி.

‘‘எப்படியும் ஏறுவேன்’’ என்றார் 

தந்தை பெரியார்!

அய்யா அந்தப் படியில் ஏற முடியாது என்பதால், நாற்காலியில் அய்யா அவர்களை அமர வைத்து தூக்கிக் கொண்டு போகிறோம் என்று தோழர்கள் சொன்னார்கள்.

அய்யா அவர்கள், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, திடீரென்று ஒரு வார்த்தையை சொன்னார். அன்றைக்கு என் காதில் விழுந்த அந்த வார்த்தை, இன்றைக்கு நினை விற்கு வருகிறது. பெரியாருடைய மாணவன் என்பது எவ்வளவு பயன்படுகிறது என்பதற்கு உதாரணம் சொல்கிறேன்.

அய்யா அவர்கள், ஒவ்வொரு படியாக மெதுவாக ஏறினார் - மொத்தம் 15 படிகள் - மேலே ஏறினார் அய்யா.

அய்யா நீங்கள் ஏறி வந்தது ஆச்சரியம் என்றோம்.

எப்படியும் ஏறுவேன் என்றார்.

அய்யாவினுடைய வார்த்தை ஜாலம் என்பது இருக்கிறதே, எப்படியும் ஏறுவேன் என்று சொன்னால், எப்படிப்பட்ட சூழலிலும் ஏறி வருவேன்.

எப்படியும் ஏறுவேன் என்றால், எந்த வகையான படியாக இருந்தாலும் நான் ஏறுவேன் என்று சொல்லக் கூடிய அளவில், இந்த நிகழ்ச்சியில் பெரியார் அவர்கள் சொன்னதுதான் என்னுடைய நினைவிற்கு வந்தது.

படி, படி, படி என்று சொல்வதுதான் இந்த இயக்கம். படி, படி, படி என்று மக்களுக்குச் சொல்லி, அவர்களைப் படிக்க வைத்து, எல்லா படிகளையும் தாண்டி, எதிர்ப்புப் படிகளையும் தாண்டி வரும்பொழுது - இந்தப் படிகளை ஏறினால் என்ன? அதுதான் மிக முக்கியமானது.

பிரகலாதன் மறையவில்லை ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் 

அவர் நிறைந்திருக்கிறார்

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பிரகலாதன் அவர் கள் மறையவில்லை - ஒவ்வொருவருடைய உள்ளத் திலும் அவர் நிறைந்திருக்கிறார் - நம்முடைய ரத்த நாளங்களில் அவர் உறைந்திருக்கிறார் என்ற பெருமையோடு, 

நீங்கள் இந்த இயக்கத்தை ஆதரியுங்கள் -

‘விடுதலை’யைப் படியுங்கள் -

கருத்துகளைப் பெறுங்கள் -

உங்கள் நண்பர்களைவிட, உங்கள் எதிரிகளை சரியாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

யார் நண்பர்கள்? யார் எதிரிகள்? இந்தக் கொள்கைக்கு என்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களை எதிரிகளாகவும் -

எதிரிகளை நண்பர்களாகவும் பார்க்கும்பொழுதுதான், ஆபத்து வருகிறது.

எனவேதான், உங்கள் நண்பர்களைவிட, உங்கள் எதிரிகளை சரியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பொழுது உங்களுடைய வழிமுறை தெளிவாக இருக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லி,

சகோதரிகளுக்கு என்னுடைய ஆறுதல் சொல்லி, நானும் ஆறுதல் பெற்று விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பிரகலாதனுடைய சிறப்புகள், நினைவுகள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment