சாமியார் ஆளும் உ.பி.யில் மூடநம்பிக்கைப் 'பேயாட்டம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

சாமியார் ஆளும் உ.பி.யில் மூடநம்பிக்கைப் 'பேயாட்டம்!'

உத்தரப்பிரதேசத்தில் இறந்து போன மகளை உயிர்ப்பிக்க, அகோரி என்னும் அம்மணச்சாமியாரை கூட்டிவந்து பல நாள் பூஜை செய்து அமாவாசை தினத்தன்று அழுகிய பிணத்தின் வாயில் மதுவை ஊற்றி அந்த மதுவை பிரசாதமாக கொடுத்ததால் அதைக்குடித்த 18 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் கர்ச்சனா மாவட்டம் தீஹா கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் 18 வயது மகள் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். திருமணம் ஆகாமல் இறந்துவிட்டதால் அவரது ஆவி ஊருக்குள்ளேயே சுற்றும்; தொடர்ந்து பூஜை செய்தால் அந்த ஆவி மீண்டும் உடலுக்குள் சென்று உயிர் பிழைத்துவிடுவார் என்று சிலர் கூறியதை அடுத்து - இறந்துபோன பெண்ணின் குடும்பத்தினர் அகோரி எனப்படும் சுடுகாட்டு சாமியாரை அழைத்துவந்து 15 நாட்களாக பூஜை செய்துள்ளனர். இந்த நிலையில் இறந்த பெண்ணின் உடல் மீது பூமாலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் அதிகம் போட்டிருந்ததால் பிணவாடையோடு சேர்ந்து பூக்களின் அழுகல் நாற்றமும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமாக வீசியது. 

இந்த நிலையில் அமாவாசை அன்று ஊரார் சிலரை அழைத்து அழுகிய பிணத்தின் வாயில் மதுவை ஊற்றி வழிந்த மதுவை பிரசாதம் என்று சொல்லி அனைவருக்கும் கொடுத்துள்ளார் அந்த அகோரிச்சாமியார். 

அதனைத் தொடர்ந்து ஆடல் பாடல் எனக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது 18 பேருக்கு உடல் நலம் குன்றி. வாந்தி மயக்கம் ஏற்பட்டது, வரிசையாக பலர் மயங்கி விழுவதைப் பார்த்த உடன் அகோரிச்சாமியார் கையில் கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார், 

சாமியார் ஓடியதைக் கண்ட ஊரார் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவக் குழுவினரோடு அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு வீட்டில் பூமாலைகள் அதிகம் சுற்றப்பட்ட ஒரு உடல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். மேலும் அந்த உடலில் உள்ள பூக்களை அகற்றிய போது புழுக்கள் நிறைந்து காணப்பட்டன, இதனை அடுத்து காவல்துறையினர் அங்குள்ளவர்களை விரட்டினர். மயங்கிக் கிடந்தவர்களை உடனடியாக மருத்துவச்சிகிச்சைக்கு அனுப்பிவைத்து பிணத்தை உடற்கூறு ஆய்விற்கு எடுத்துச்சென்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் போது, ஊரில் உள்ள முக்கிய நபரின் 18 வயதுடைய தீபிகா என்ற பெண் இறந்துவிட்டதால் அந்தப் பெண் உடல் பேயாய் மாறுவதை தவிர்ப்பதாகக் கூறி பூஜைகள் செய்துள்ளனர். அமாவாசை நாள் அன்று பூஜையின்போது பிரசாதமாக பிணத்தின் வாயில் மதுவை ஊற்றி அந்த மதுவை அனைவருக்கும் குடிக்க கொடுத்துள்ளனர். 

 இதில் ஊரார் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிலரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் லக்னோ அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற அனைவருக்கும் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண் தானாக இறந்தாரா அல்லது மந்திரவாதியால் நரபலி கொடுக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்துவருகிறோம், தப்பி ஓடிய அகோரிச்சாமியார் பிடிபட்டால் உண்மைகள் வெளிவரும் - அவரைத் தேடி வருகிறோம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வட மாநிலங்கள் அதிலும் குறிப்பாக சாமியார் ஆதித்யநாத்  ஆட்சி புரியும் உத்தரப் பிரதேசம் எந்த அளவு மூடநம்பிக்கை என்னும் பிண நாற்றம் எடுக்கும் பூமியாக அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்றே போதுமானது.

பா.ஜ.க., சங்பரிவார் என்ற அமைப்புகள் மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு "பேயாட்டம்" போடுவதன் கோர விளைவுதான் இந்த அம்மணச் சாமியார்களின் - அகோரிகளின் கோர விளையாட்டு! வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!


No comments:

Post a Comment