பெரியார் கொள்கையின் வெற்றிக்கனிதான் பொத்தனூர் சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

பெரியார் கொள்கையின் வெற்றிக்கனிதான் பொத்தனூர் சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா!

தமிழர் தலைவரின் பெருமித உரைச் சுருக்கம்

தொகுப்பு: மின்சாரம்


நூற்றாண்டு விழாவில்  பொத்தனூர் க. சண்முகம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

தந்தை பெரியார் கொள்கையின் வெற்றிக்கனி தான் பொத்தனூர் க.ச. அவர்களின் நூற்றாண்டு விழா என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

3.7.2022 அன்று பொத்தனூர் ஆர்.கே. மகாலில்  நடைபெற்ற பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு (முழு உரை பின்னர்).

தொண்டறம் என்ற ஒன்றைச் சொன்னவர் தந்தை பெரியார்

இல்லறம், துறவறம் என்று பொதுவாகச் சொல்லுவார்கள்; மூன்றாவதாக ஓர் அறத்தைக் கூறியவர். கூறியபடி வாழ்ந்து காட்டியவர் தந்தை பெரியார்! அதுதான் தொண்டறம்! தொண்டு செய்து பழுத்த பழம் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியது அந்தக் கருத்தின் அடிப்படையில்தான்.

தந்தை பெரியார் கூறியபடி வாழ்ந்துகாட்டிக் கொண்டு இருப்பவர் நமது க.ச. அவர்கள்.

மாணவர் பருவத்திலேயே இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவரின் வீட்டுக்கு வராத - வந்து தங்காத இயக்கத் தலைவர்களே கிடையாது என்றே சொல்ல வேண்டும்.

என்னை இந்தவூரில் மேசையில் நிற்க வைத்துப் பேச வைத்தவர் க.ச. அவர்கள். இன்று நான் அவரின் நூற்றாண்டு விழாவில் பாராட்ட வந்திருக்கிறேன். (பலத்த கரஒலி)

பெரியார் தொண்டர்களுக்கு உறவு: ரத்த உறவை விடக் கொள்கை உறவு தான் கெட்டியானது.

இந்த இயக்கம் வளர்ந்தது எங்கே தெரியுமா?

இந்த இயக்கம் வளர்ந்தது மூன்று நட்சத்திர ஓட்டல்களில் அல்ல - பயணியர் விடுதிகளில் அல்ல! பார்பர் ஷாப்புகளில், சலவையகங்களில், கழகத் தோழர்களின் இல்லங்களில் திண்ணைகளில் உறங்குவோம். 

எங்களுக்கெல்லாம் பொத்தனூர் தெரியுமே தவிர போத்தனூர் தெரியாது.

தந்தை பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்டவர்

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு இயக்கத்தில் சிறு புகைச்சல்- எந்த அமைப்பிலும் அவ்வப்போது இது போன்றவை நடக்கத்தான் செய்யும்.

அந்த பட்டியலில் உள்ள சிலர் நம் க.ச. அவர்களின் வீட்டுக்கும் வந்தார்கள். வந்தவர்களை உபசரித்தார் - விருந்து படைத்தார்.

வந்தவர்கள் பிரச்சினையை எழுப்பினார்கள். அவர்களிடத்தில் நமது க.ச. அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? அதுதான் முக்கியம்.

நமது தலைவர் தமக்குப் பிறகு யாரை அடையாளம் காட்டினாரோ, அவர்தான் எனது தலைவர் என்று ஒரே வரியில் பதில் சொல்லி, வந்தவர்களை வழியனுப்பி வைத்தார். அவருக்குப் பெயர் தான் நமது மரியாதைக்குரிய பொத்தனூர் க.சண்முகம் அவர்கள்.

"எது சுய நலம்! எது பொது நலம்?" என்பதுபற்றி தந்தை பெரியார் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

மக்களுக்குத் தொண்டு செய்வதில் எனக்கு மிகப் பெரும் திருப்தி இருக்கிறது. மனிதனுக்கு இந்தத் திருப்தியைவிட சுயநலம் எது என்று கேட்டு, அதன்படி,  தன் வாழ்வையே பொதுத் தொண்டுக்கு ஒப்படைத்தவர் தந்தை பெரியார் அதுதான் எங்களுக்கு வழிகாட்டி.

கழகத்துக்கு நன்கொடைகள்

இங்கே பெரியார் படிப்பகத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டி தம் குடும்ப உறுப்பினர்களின் அன்பான ஒப்புதலுடன் அளித்திருக்கிறார்.

அதேபோல தனது நூறாவது ஆண்டுக்கு - ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் தனக்காக கழகப் பொதுக்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன் அவர்களால் அளிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் (காசோலை) நன்கொடையைப் பெரியார் உலகத்திற்கு என்னிடம் இங்கே அளித்தார். க.ச. அளித்தார் என்றால் இதுதான் தந்தை பெரியார் கூறிய அந்த சுயநலம் என்ற பொது நலம். 

பொத்தனூர் ஊராட்சியின் புரட்சிக்கர ஆணை

பொத்தனூர் பேரூராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்திலேயே பொத்தனூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஜாதியின் பெயரால் உணவு விடுதி நடத்த அனுமதி கிடையாது என்பதுதான் அந்த ஆணை! எத்தகைய புரட்சி 40, 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே!

இந்த வட்டாரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பொறியாளர்கள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்தான் நமது விழா நாயகர் க.ச. அவர்கள்.

நான் 90 வயதில் அதிகமாகப் பயணிக்கிறேன் - பிரச்சாரம் செய்கிறேன் என்று குறைபட்டுக் கொண்டார்கள். நமது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும்கூட சொன்னார்.

அந்த வகையில் பார்க்கப் போனால் நூற்றாண்டு காணும் அய்யா சண்முகம் அவர்களின் முன் நான் சின்ன பையன் (பலத்த கரஒலி)

தந்தை பெரியாரின் கொள்கையினுடைய வெற்றிக் கனிதான் இந்த விழா நாயகரின் நூற்றாண்டு விழா.

க.ச. அவர்களின் வாழ்விணையர்

இந்த நேரத்தில் இந்த விழாவைக் காண அவரின் வாழ்விணையர் நமது சகோதரி சுந்தரம்மாள் இல்லையே என்ற நினைவு நம் நெஞ்சை உறுத்துகிறது.

வந்த கழகத்தவர்களை எல்லாம் உபசரித்து விருந்து படைத்த கரம் அவர்களுடையது. அத்தகையவரின் மறைவிற்குப் பிறகும் தளராமல், தன் இயக்கப் பணியை, கட்டுப் பாட்டின் இலக்கணமாகத் தொடரும் நமது நூற்றாண்டு நாயகர் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்!

வாழ்க பெரியார்!

வாழ்க க.ச.!

என்று பெருமிதமான உரையை நிகழ்த் தினார் கழகத் தலைவர்.


No comments:

Post a Comment