ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: அ.தி.மு.க.விலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவாரா?

- கே.கதிரொளி, சேலம்

பதில்: அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இப்போது இது முக்கியமான கேள்வி அல்ல. இந்த பொம்மலாட்டக் கூத்துகளுக்கு முக்கிய காரணமான டில்லி - பா.ஜ.க.வை எஜமானர்கள்போலவே கருதி, அடகு வைக்கப்பட்ட கட்சியான அ.தி.மு.க. மீட்கப்படுமா? என்பதே, முக்கியம்.

அது நடந்தால், பிறகு அங்கே பல பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பது இயல்பானதாகும்!

- - - - -

கேள்வி:  மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளை உடைப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறதே, பாரதீய ஜனதா கட்சி?

- பி.வேல்விழி, நெல்லை.

பதில்: ஒரு சில மாநிலங்களைத் தவிர, மக்கள் வாக்குகளால் அது பதவிக்கு வந்ததாக வரலாறு இல்லை. பிரதமர் மோடி வாங்கியுள்ள வாக்குகள் (2014, 2019) பெரும்பான்மையான 60 விழுக்காடு வாக்குகளா? இல்லை, 37, 40 சதவிகிதம்தான் என்பது குறிப்பிடத்தக்க தாகும். வெற்றி பெற்ற கட்சிகளை உடைத்து, எம்.எல்.ஏ., எம்.பி.,க்களை விலைக்கு வாங்கித்தான் இந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி, சுமார் 10 மாநிலங்களில் அந்த வகையில் ஆட்சி அமைத்துள்ளது. அதற்குத் துணை போக அங்கே மாநில ஆளுநர்கள் என்ற பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள்போல் உள்ளவர்கள்! ஜனநாயகக் கேலிக் கூத்து - சந்தை வியாபாரம்! ‘ஆயாராம் காயாரம் பேரம் - மகாமகாக் கேவலம்!’ ஆனால், யாருக்கும் வெட்கமில்லை. 75 ஆவது ஆண்டு சுதந்திரம் இப்படித்தான் அரசமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது!

- - - - -

கேள்வி:  மகாராட்டிராவில் புதிதாக முதலமைச்ச ராகப் பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, எங் களுக்குப் பின்னால் ஒரு பாறையைப் போல நின்று ஆதரவளிப்பதாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார் என்று கூறியுள்ளாரே?

- பா.கண்மணி, சென்னை

பதில்: விபீஷணனுக்கு இராமர்கூட்டம் ‘ஆழ்வார்’ பட்டம் கொடுத்த நினைவு வருகிறது அல்லவா?

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் படலம் மீண்டும் அரங்கேறுகிறதே?

- மு.செல்வம், செங்கல்பட்டு

பதில்: மோடி பிரதமரானால், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை தீரும் என்று ஆரூடம் கூறியவர்களைத் தேடுங்கள் - ‘பரிசு’ கொடுப்பதற்காக!

- - - - -

கேள்வி: கடவுள் மறுப்பாளர்கள் நூறு வயதையும் கடந்து வாழ்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?

- சி.எழிலன், கோவை

பதில்: கடவுள் மறுப்பாளர்கள் - தன்னம்பிக்கை யாளர்கள் - தன் செயலுக்குத் தானே பொறுப்பேற்று, தனி மனித ஒழுக்க வாழ்வு வாழுகிறார்கள்.

எந்தப் பாவத்தைச் செய்தாலும் ‘பாவ மன்னிப்பு’, ‘கழுவாய்’, ‘பிராயச்சித்தம்‘ உண்டு - தப்பித்துக் கொள் ளலாம் என்று கருதிடாமல், உழைக்கும் மனப்பான்மை உள்ள தொண்டறம் புரிவோர் - அதனால்தான் ஆயுள் நீடிப்பு - மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்.

- - - - -

கேள்வி:  கன்னியாகுமரி ஆதிகேசவப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவின்போது இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து, நீதிமன்றம் உத்தரவிடக் கோரிய வழக்கினை நீதிபதிகள் தள்ளுபடி செய்து அறிவுறுத்தி யுள்ளனர். இதற்குப் பிறகாவது இந்துத்துவாவாதிகள் திருந்துவார்களா?

- கி.இராமலிங்கம், செம்பியம்

பதில்: கடவுள்களை வணங்குவது கூட மத அடிப்படை என்பதால்தான் - இந்தக் ‘கடவுளை மற, மனிதனை நினை’ ஏன் என்பது இப்போதாவது புரிகிறதா?

- - -  -  -

கேள்வி: தமிழ்நாட்டின் விடியலாய் அமைந்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி போன்று ஒன்றியத்தில் அமைவது எப்போது?

- ச.அருட்செல்வன், பெண்ணாடம்.

பதில்: காலம் கனியும்; கனிந்தும் வருகிறது!

- - - - 

கேள்வி: சமூகநீதிக்காக ஓங்கி ஒலிக்கின்ற தமிழ் நாட்டைப்போல் (எ.கா.-நீட் எதிர்ப்பு) நாடுதழுவிய அளவில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒலிப்பதற்கான திட்டம் குறித்து...?

-க.ஆற்றல்அரசி, அயப்பாக்கம்.

பதில்: முதலில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே முக்கியம். தமிழ்நாட்டில் நாம் சாதித்துக் காட்டுவோம். பிறகு அது தானே இந்திய ஒன்றியம் முழுவதும் பரவும்.

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் 'ஒலிம்பியாட் செஸ்' போட்டி நடைபெறுவது குறித்து....?

- கா. சிவகுமார், வேலூர்

பதில்: பெருமையான தி.மு.க. மாடல் ஆட்சியின் மணிமுடியின் மீது பதித்த வைரக்கல்!

- - - - -

கேள்வி: கொடநாடு குற்றவாளிகள் கண்முன் இருக்கிறார்கள் என்று சொல்கிறாரே, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ்?

- பா.விஜயலட்சுமி, உதகை

பதில்: கண்முன் உள்ள குற்றவாளிகளைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்காமல், அவரைத் தடுப்பது எது? யார்? அவர் ஏன் இத்தனை ஆண்டு கள் ‘மவுன விரதம்‘ இருந்தாரோ - புரியவில்லையே!

பிரிந்தவர் பேசினால், பல உண்மைகள் வெளி வரும் போலிருக்கிறது!

No comments:

Post a Comment