'இமாம் பசந்த்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

'இமாம் பசந்த்!'

பீகார் மாநிலம் பாட்னாவில் முகம்மது ரிஸ்வான்கான் என்பவர் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இவர் கடையில் ராம்தேவ் என்பவர் 25 ஆண்டுகளாகப் பணியாற்றினார்.

ராம்தேவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், கடை உரிமையாளர் ரிஸ்வான்கான் குடும்ப உறுப்பினர் போலவே ராம்தேவ் வாழ்ந்து வந்தார். கடையில் கணக்குகளைப் பராமரிக்கும் பணி அவருடையது.

வயது முதிர்ந்த நிலையில், வேலைகளைப் பார்க்க முடியாத நிலைக்கு ராம்தேவ் ஆளானார். ஆனாலும், கடை உரிமையாளர் பரந்த உள்ளத்தோடும், மனிதநேயத்தோடும் பணிக்கு ஓய்வு கொடுத்தார். ஓய்வு என்று ஆகிவிட்டால் சம்பளம் யார் கொடுப்பார்கள்?

பெருந்தன்மை வாய்ந்த கடை உரிமையாளர் முகமது ரிஸ்வான் வழக்கமான சம்பளத்தையும் கொடுத்து அவரைப் பராமரித்தார்.

இந்நிலையில், ராம்தேவ் மூப்பின் காரணமாக மரணத்தைத் தழுவினார்.

ராம்தேவோ இந்து மதத்தைச் சேர்ந்தவர் - கடை உரிமையாளரோ முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர். கடைக்காரரின் பெருந்தன்மையையும் - பண்பு நலனையும் பாருங்கள்.

இறந்தவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்பதால், கடை உரிமையாளர் முகமது ரிஸ்வான் தமது கடையில் கால் நூற்றாண்டுக் காலம் பணியாற்றி இருக்கிறார் என்ற நன்றி உணர்வோடு, இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்தி உள்ளார்.

இறுதி ஊர்வலத்தில் ஏராளமான  முஸ்லிம் தோழர்கள் பங்கு கொண்டனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேக வேகமாகப் பரவி வருகிறது.

மதம் மனிதனைப் பிரிக்கலாம்; மனிதநேயம் மதத்தைத் தூரத் தள்ளுகிறது. இதற்கு அடையாளம்தான் பாட்னாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு.

காவி பக்தர் ஒருவர் காஞ்சி சங்கராச்சாரியாரியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதிக்கு மாம்பழம் ஒன்றைக் காணிக்கையாகக் கொடுத்தார். மாம்பழத்தின் பெயர் என்ன என்று கேட்டார் சங்கராச்சாரியார்.

'இமாம் பசந்த்' என்றார் பக்தர்.

மாம்பழத்துக்கு ஒரு முசுலிம் பெயரா? பெயரை ராம்பசந்த் என்று மாற்றுவோம் என்றார்.

இவர்கள்தான் ஜெகத் குருக்கள்! இவர்களை ஜெகத்குரு என்று அழைத்தால் பாட்னா இசுலாமிய தோழன் முகமது ரிஸ்வானை மனிதநேய மகாகுரு என்று அழைக்கலாமே!

- மயிலாடன்


No comments:

Post a Comment