புவனேசுவரில் நடைபெற்ற சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் மாபெரும் வெற்றி: இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

புவனேசுவரில் நடைபெற்ற சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் மாபெரும் வெற்றி: இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பு

புவனேசுவர், ஜூன் 22 புவனேசுவரில் நடத்தப்பட்ட சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் நான்காவது கூட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சமூக நலச் சங்கங்களின் பிரதிநிதிகளைத் தவிர, ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இளைஞர்களின் பரவலான பங்கேற்பு காரணமாக மாபெரும் வெற்றி பெற்றது என மகிழ்வுடன் தெரிவிக்கலாம்.

ஒடிசா தலைமைச் செயலகம் எதிரே உள்ள கீதா கோவிந்த் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி காலை 10.30 மணி முதலே மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு காரணமாக அரங்கம் நிரம்பி வழிந்தது.

கூட்டத்திற்கு பத்திரிகையாளர் அசோக்குமார் பரல் தலைமை வகித்தார். ஒடிசா பிற்படுத்தப்பட்டோர் இளைஞர் மற்றும் மாணவர் மன்றத்தின் அமைப்பாளர் பாகேஸ்வர் பிரதான் பிரமுகர்களை வரவேற்றார் மற்றும் கணேஷ்வர் நாயக் வரவேற்புரை ஆற்றினார்.

பிரதம விருந்தினரான பேராசிரியர் தனேஷ்வர் சாஹு புத்தர் காலம் துவங்கி சமூக நீதி பற்றிய ஆழமான விளக்கத்தை வழங்கினார். பிஜோய் பிரதான், ஒடிசா ஓபிசி கவுன்சிலின் செயல் தலைவர் துலேஷ்வர் மேனியா, பிரபுல்ல குமார் குந்தியா (ஆர்பிஅய்), மதுசூதன் சமல் (யூனியன் வங்கி) மற்றும் இளைஞர் அமைப்பின் தலைவர் ஆதித்ய பிரதாப் ஸ்வைன் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர். தனியார்மயமாக்கலுக்கு எதிரான தீர்மானங்கள், தனியார் துறையில் இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமி லேயர் ஒழிப்பு, 50% உச்சவரம்பு நீக்கம் மற்றும் ஓபிசிக்கான வருமான அளவுகோல் திருத்தம் ஆகிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பாளர் கோ.கருணாநிதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் செய்தியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். 

அவரது ஆங்கில உரையை பேராசிரியர் தனேஷ்வர் சாஹு மொழிபெயர்த்து எடுத்துரைத்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் தந்தை பெரியார், டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகளை செய்ததற்காக, ஒடிசா பிற்படுத்தப்பட்டோர் இளைஞர் மற்றும் மாணவர் மன்றம் மற்றும் ஓபிசி கூட்டமைப்பு, ஒடிசா மாநிலத்தின் ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் பரல் அவர்களுக்கு நமது நன்றி.

வரும் வாரங்களில் இந்தச் செய்தியை ஒடிசா மக்களிடம் பரப்புவோம் என்று அங்கிருந்த தலைவர்களும் உறுப்பினர்களும் உறுதியளித்தனர்.

தந்தை பெரியார் குறித்த நூல் 

ஒடியா மொழியில் வெளியீடு:

விழாவில் பேராசிரியர் தனேஷ்வர் சாஹுவால் ஆங்கிலத்தில் இருந்து ஒடியாவில்  மொழிபெயர்க்கப்பட்ட பெரியார் குறித்த புத்தகமான “பெரியார்: ஜீவனி ஓ பாவனா” (தந்தை பெரியாரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள்) நூலினை இளைஞரணி தலைவர் ஆதித்ய பிரதாப் ஸ்வைன் வெளியிட்டார்.  புத்தக வெளியீட்டாளர் அபிராம் மாலிக் (சம்யக் பப்ளிகேஷன்ஸ்) மற்றும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் தனேஷ்வர் சாஹு இருவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.


No comments:

Post a Comment