சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! (2)

 சகிப்புத் தன்மை - ஓர் உயர்த்தும் ஏணி! (2)

சகிப்புத் தன்மை - என்பதற்கு “பொறையு டைமை" என்ற தலைப்பில் வள்ளுவர் திருக் குறளில் பத்து குறள்களை அடக்கிய ஒரு தனி அதிகாரத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், அவரோ அல்லது அதற்கு தலைப்பிட்டவர்களோ "பொறையுடைமை" என்றே அருமையான தலைப்பைத் தந்துள்ளது ஏன் என்று மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

பெறற்கரிய செல்வங்களில் ஒன்று பொறுத்தல் - சகித்தல் - ஏற்றல் என்று நாம் அடையவேண்டிய அறிவுச் செல்வங்களில் ஒன்றாகவே இதனை விளக்கியுள்ளது வியப்புக்குரியதல்லவா?

அவ்வதிகாரத்தில் ஓர் அருமையான குறள் - எப்படி பொறுத்தல் மனிதனை உயர்த்தும் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ள தோடு, பண்புகளில் தலையாய பண்பாக மனிதர் கள் வாழ்வில் கற்று நிற்க வேண்டிய ஒன்றினையும் விளக்குகிறது.

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று" (குறள் 152)

இதன் கருத்து: 

"பிறர் நமக்கு இழைக்கும் தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது, எப்பொழுதும் போற்றப் படும்; அத்தகைய தீங்கினை நினைவில் கொள் ளாமல் அறவே மறந்துவிடுதல் என்பது அப்படிப் பொறுத்தலைக் காட்டிலும் மிக்க நல்லதொரு செயலாகக் கொள்ளப்படும்."

(நாவலர் உரை)

பொறுத்தலை ஏற்காது மறுப்பவர், ஒறுத்தலை - (தண்டிப்பதையே) விரும்புபவர்களாக இருப் பவர் பலரும் பழிவாங்கும் "மிருக உணர்வுக்கு" தங்களை சிறைக் கைதி போல கூண்டுச் சிறைக் குள் அடைத்துக் கொள்ளுகிறார்கள்; ஆனால் உண்மையான மனிதமோ - மன்னிக்கத் தெரிந் தவன்தான் மனிதன்; மன்னிக்கத் தெரிந்தவனை விடக் கூட ஒரு படி மேலானவன் மறக்கத் தெரிந்தவன் என்ற தத்துவத்தைவிட மனிதகுல வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டும் நெறி வேறு உண்டா?

பழைய காலத்தின் சட்ட வகைகளில் கூட, அடிக்கு அடி, வெட்டுதல் முதலியவையே சரியான தண்டனை என்று வழங்கப்பட்டு வந்த சட்டங்கள் இருந்தன. அறிவு முதிராத காலத்து விதிகள் அவை.

‘அடிக்கு அடி, பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபி (Hummurabi Code) என்ற ஆரம்பக் காலச் சட்டம். 

அதன்பின் சட்டத்தில் இப்படி தண்டனையில் கூட உயர் ஜாதிக்கு லேசான தண்டனை அல்லது விடுதலை, ஒடுக்கப்பட்ட பிரிவு ஜாதியான ‘சூத்திரா‘ பஞ்சமர் போன்ற சங்கர ஜாதி என்று கலப்பு மணத்தால் - வாழ்வில் பிறந்தவருக்குக் கடுந் தண்டனை என்று விதிகள் விதித்த சட்டமே இருந்தது.

குற்றவாளிகளை பேதப்படுத்தி தண்டனை வழங்குதல் என்ற கொடுமையான - மனிதத் தன்மையற்ற செயற்கைத் தன்மையான வர்ண பேதங்களை வாழ வைத்த சட்டம் இப்போது வலுவிழந்த நிலையில் அவர் புதிய அவதாரம் எடுக்க அதனால் பயனடைவோர் முயற்சித்தனர்.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகே, அந்த வன் கிரிமினல் சட்டம் நீக்க, சீர்மையான தண்டனைச் சட்டம் I.P.C. (Indian Penal Code)  வந்தது.

அதன் கருத்தியலும் இப்போதுள்ள தண் டனை வழங்குதல் சட்டத்தின் அறிவு வெளிச் சத்தில் மாறுபட்டு, குற்றம் செய்தவர்களை திருந்தி வாழச் செய்ய அவர்களை ஒறுத்தல் - தண்டிப்பது கடுமையாக என்பதைவிட, அவர்களை மனம் திருந்தி வாழும் நல்ல மனிதர்களாக வாழ வைக்க அரசும், சட்டங்களும், நீதித்துறையும் சிந்திப்பதும் சகிப்புத் தன்மையை அடித்தளமாகக் கொண்டு எழுந்த சிந்தனைகளேயாகும்!

Revenge or Reformation என்பது போன்ற கேள்வி எழுந்து, பழிவாங்குதலால் மானுடத்தைத் திருந்தி வாழச் செய்ய முடியாது! மன்னித்து மறு வாழ்வினைத் தர மாற்று வழி வரை சிந்திப்பதே நல்ல மனிதம் தழைக்கும் மானுடத்தை உருவாக்க முடியும்.

இதற்கு மூலபலம் சகிப்புத் தன்மையே - இல்லையா?

No comments:

Post a Comment