மனுதர்மம் முதல் கூகுள் வரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

மனுதர்மம் முதல் கூகுள் வரை

தொழில்நுட்ப உலகில் உச்சத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பாலின, நிற மற்றும் ஜாதி ரீதியிலான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாகப் பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன. கூகுள் போன்ற நிறுவனங்களில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்மீது பாலின பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஒரே விதமான பதவிகளில் ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குதல் மற்றும் தகுதி குறைவான பணிகளில் பெண்களை பணியமர்த்துதல் எனப் பெண்களை சமமாக நடத்தாமல் பாலின பாகுபாடு காட்டிவருவதாக கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின்மீது புகார்கள் எழுந்தன. இதனைக் கண்டித்து கூகுள் நிறுவனத்தின் மேனாள் பெண் ஊழியர்கள் கூகுள் நிறுவனத்தின்மீது 2017-ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும் கூகுள் நிறுவனம் கலிஃபோர்னி யாவின் சம ஊதியச் சட்டத்தை மீறியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் சார்பாக அதன் வழக்குரைஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

அதில், 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 14 முதல் 236 வெவ்வேறு பதவிகளில் கூகுள் மூலம் கலிபோர்னி யாவில் பணிபுரியும் 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங் குவதாக அறிவித்துள்ளது கூகுள். மேலும் இந்த வழக்கு பற்றி கூறிய கூகுள், “எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் சமத்துவத்தை உறுதியாக நம்புகி றோம். ஏறக்குறைய அய்ந்து ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இருதரப்பிலும் எந்தவொரு ஆதாரங் களும், தகவல்களும் கிடைக்காத நிலையில் இந்த விஷயத்தைத் தீர்ப்பது அனைவருக்கும் நல்லது. இதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம். இந்த ஒப்பந்தத் தினால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் இருந்த பார்ப்பனர்கள் பலர் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் குடியேறி தொழில் நுட்பத் துறையில் பல்வேறு பதவிகளில் உள்ளனர். அதேபோல் பார்ப்பனர் அல்லாத மக்களும் - முதல்தலைமுறை பட்டதாரிகள் - பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மென்பொருள் கல்வியில் நல்லநிலையில் தேறி திறமையானவர்களாக மென்பொருள் நிறுவனங்களில் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். 

 இதுநாள் வரை பார்ப்பனர்களின் கீழ் கைகட்டி நின்ற தாத்தா பாட்டியின் பேரன்கள் இன்று பார்ப்பனரோடு சமமாக அமர்ந்து மேலைநாடுகளில் பணிபுரிகின்றனர். இதனைப் பொறுக்காத மேலை நாட்டில் வேலைபார்க்கும் பார்ப்பனர்கள், தங்களின் கீழ் உள்ளவர்களின் மீது ஜாதிய அடக்குமுறையைத் திணிக்கின்றனர். இது கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. ஆனால் இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பார்ப்பனர் சுந்தர் பிச்சை இதுவரை வாயைத்திறக்கவில்லை.

சுந்தர்பிச்சை சுந்தர் பிச்சை என்று தூக்கி நிறுத்து கிறார்களே, அதன் பின்னணி என்னவென்று இப்பொழுது புரிகிறதா?

பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும், எந்தப் பதவி வகித்தாலும், அவர்களின் மனுதர்மப்புத்தி அவர்களை விட்டு விலகாது.

ஆண் - பெண் பேதம் என்பது தானே மனுதர்மத்தின் சாரம்!

No comments:

Post a Comment