Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
எம்.சி.ராஜா பிறந்த தினம் இன்று (17.6.1883)
June 17, 2022 • Viduthalai

 

வரலாற்றில் ம‌றக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில், ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னிய தமிழக ஆளுமை.

ஒடுக்கப்பட்டோர் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914இல் மறைந்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனி வாசன் தென்னாப்பிரிக்காவில் நிலை கொண்டிருந்தார்.  நாடு தழுவிய‌ அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர் எம்.சி.ராஜா. எனவே தான் அக்காலத்து ஆளுமைகளால் 'பெருந் தலைவர்' என மரியாதையோடு அழைக்கப்பட்டார்.


எம்.சி.ராஜா (17.06.1883 - 20.08.1945) ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆரம்பகால‌ நிர்வாகிகளுள் ஒருவரான மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாக சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்டில் பிறந்தார். ராய‌ப்பேட்டை வெஸ்லி மிஷன் பள்ளி யிலும், சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் படிப்பை முடித்த இவர், பின் அதே இடங்களில் ஆசிரியராக பணியாற்றினார். எளிய முறையில் கற்பிப்பது பற்றி ஆசிரியர்களுக்கு எம்.சி. ராஜா எழுதிய அளவை (Logic Text book) நூலே, கற்பிக்கும் முறை குறித்து தமிழில் வெளியான முன்னோடி நூலாக கருதப்படுகிறது.மாணவர்களுக்காக சிறுசிறு இலக்கண நூல்களையும், நீதிநூல்களையும் எழுதி யுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாளுடன் இணைந்து மழலையர் பாடல் நூலை, 'கிண்டர் கார்டன் ரூம்' ('Kinder Garden Room) என்ற தலைப்பில் வெளியிட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை உணர்ந்த எம்.சி.ராஜா சென்னையில் பல்வேறு இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார். கல்வியின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் வளர்ச்சியை காண முடியும். அரசியல் அதிகாரத்தை பெற முடியும். எனவே எம் மக்களுக்கு இலவச கல்வியை கற்க அனுமதி தாருங்கள் என்று ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். 1917-இல் தொடக்க கல்வி கல்விக்குழு, 1919-இல் தொடக்கக் கல்வி மசோதாவிற்கான சட்ட வரைவு குழு, உயர்கல்வி மறுசீரமைப்புக்குழு, சென்னைப் பல்கலைக்கழக செனட் என பல குழுக் களில் பங்கேற்று கல்வி உரிமைக்காக போராடினார்.

ஆதி திராவிடர் அடையாளம்

1910-களில் அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கிய எம்.சி.ராஜா, அயோத்திதாசரின் ஆதி திராவிட மகாஜன சபைக்கு புத்துயிரூட்டினார். 

1916-இல் அதன் செயலாளராக பொறுப்பேற்று தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரு,பம்பாய், இலங்கை என பல இடங்களில் பரவிய கிளைகளின் செயல்திட்டத்தை வகுத்தளித்தார். 1917-இல் மாண்டேகுவையும், 1919-இல் செம்ஸ்போர்டையும் சந்தித்து ஒடுக்கப்பட்டோ ருக்கான அரசியல் உரிமையைக் கோரி மனு அளித் தார். இதன் தொடர்ச்சியாக 1919-இல் எம்.சி.ராஜா சென்னை மாகாணச் சட்டசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய தேசத்தின் சட்டசபைக்குள் நுழைந்த முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் அரச பிரதிநிதி என தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் தாய்மொழி கல்வி உரிமை, கல்வி கொள்கையில் நீதி, மேனாள் ராணுவ வீரர்களுக்கு நிலமும் வேலையும்,சிறுபான்மையோர் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம் என சட்டசபையில் பல விவகாரங்களை எழுப்பினார். 

ஒடுக்கப்பட்டோருக்கான சமூக உரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் கோரிய எம்.சி.ராஜா 1927-ல் ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற வரலாற்று நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். வரலாற்றிலும் இலக்கியத்திலும் அவருக்குள்ள ஆழமான அறிவும், கள அனுபவமும் வெளிப்பட்ட இந்நூல் இந்திய ஜாதி சமூகத்தின் உண்மையான முகத்தை ஆட்சியாளருக்கு காட்டியது. 1928-இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பினை ஏற்படுத்திய எம்.சி.ராஜா லண்டனுக்கு போய், “இந்தியாவில் 130 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற பின்னரும்கூட, தாழ்த்தப்பட்ட வர்களாகிய நாங்கள் அதே நிலையில் இன்னமும் இருக்கிறோம் என்ற உண்மை கெட்ட வாய்ப்பானது” என வாதிட்டார்.  தமிழகத்தை மய்யமாகக் கொண்ட எம்.சி.ராஜா, ஒட்டுமொத்த தேசத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உருவெடுத்திருந்தார்.

காங்கிரஸ், நீதிக்கட்சி, தொழிற்சங்க செயல்பாடு என அன்றைய அரசியலில் நிகழ்ந்த அனைத்திலும் ஒடுக்கப்பட்டோரின் குரலாக எம்.சி.ராஜா ஒலித்தார்.  

அவரது ஆழமான அறிவும், தீர்க்கமான செயலும், ஆங்கிலப் பேச்சும் ஆட்சியாளர்களையும், மற்ற தலைவர்களையும் எம்.சி.ராஜா பக்கம் திருப்பியது. இதனால் சென்னை மாகாண நீதிபதி (1919), நாடாளு மன்ற‌ சபாநாயகர் (1934),சென்னை மாகாண வளர்ச்சித் துறை அமைச்சர் (1937  நீதிக்கட்சி ஆட்சியில்) என பல பதவிகள் அவரைத் தேடி வந்தன.

அம்பேத்கருடன் இணைந்த எம்.சி. ராஜா

தன் வாழ்வின் முற்பகுதியிலே தேசிய தலைவராக கொண்டாடப்பட்ட எம்.சி.ராஜா பிற்பகுதியில் அக்கால சூழலுக்கு முரணான சில முடிவுகளை எடுத்தார். இந்திய அரசியலில் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமையின் வருகை ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் எம்.சி.ராஜாவுக்கு 1930-இல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு நழுவியதால், அம்பேத்கரிடம் முரண்பட்டார். இந்த கொள்கை முரணை அன்றைய காங்கிரஸாரும், ஊடகங்களும் பகையாக வளர்த்தெடுத்தன.

இதனால் பூனா ஒப்பந்தம், அம்பேத்கரின் இந்து மத துறப்பு அறிவிப்பு என சில விவகாரங்களில் வரலாறு எம்.சி.ராஜாவை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தியது. இத்தகைய முரண்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குழுக்களின் ஆரம்ப நாட்களில் இருந்தே தொடர்ந்ததை பார்க்க முடிகிறது. அம்பேத் கரின் நியாயமான போராட்ட‌த்தை  விரைவாகவே உணர்ந்த‌ எம்.சி.ராஜா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பூனா ஒப்பந்த விவகாரத்தில் நானே என்னை மன்னிக்க முடியாத அளவுக்கு தவறு செய்து விட்டேன் என வருந்திய எம்.சி.ராஜா, ''அம்பேத்கரே எங்கள் பிரதிநிதி’'என முழங்கினார்.

1942-ஆம் ஆண்டு பூனாவில் நடந்த‌ அம்பேத்கரின் பிறந்த நாள் கூட்டத்தில் பங்கேற்ற எம்.சி.ராஜா அவருடன் ம‌னம்விட்டுப்பேசினார். அதன் பின்னர் கிர்ப்ஸ் குழு, சீல் குழு ஆகியவற்றில் அம்பேத்க‌ருடன் இணைந்து செயல்பட்டார். ''தன் மக்களுக்கு தன்னுடைய‌ சொந்த முயற்சியினால் அரசியல் உரிமைப் பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தாலே எம்.சி.ராஜா அத்தகைய‌ முடிவை எடுத்தார். வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை இரு பெரும் ஆளுமைகள் ஒரே மாதிரியாக அணுக முடியாது'' என தன்  'அறவுரை' இதழில் குறிப்பிடுகிறார் மறைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அறிஞர் அன்பு பொன்னோவியம். 

நன்றி:   பாஸ்கரன் சிறீனிவாசன்


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn