தேச துரோக குற்றவியல் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

தேச துரோக குற்றவியல் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம்

 உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின் உணர்வை ஒன்றிய அரசு சரியாகப் புரிந்து கொண்டு தேச துரோக குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

நாட்டின் தேச விரோத குற்றவியல் சட்ட விதிகள் பயன்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சுதந்திரமான பேச்சுரிமைக்கு எதிரானசக்திகள்மீது விழுந்த ஒரு பேரிடியைப் போன்றது இது. "அரசுக்கு எதிராக உணர்வுகளைத் தூண்டும் வகையில்  பேசுவது, எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது போன்ற ஏதோ ஒன்றை செய்வது இந்திய குற்றவியல் சட்ட 124-ஏ ஆவது விதியின்  கீழ்குற்றம் என்று கூறும் பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த சிலருக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை வரவேற்கத்தக்கதாக இருப்பதாகும்". தனது ஆணையில், "இந்திய குற்றவியல் சட்ட 124ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள், மேல் முறையீடுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றவியல்தண்டனை சட்ட 124ஏ பிரிவின்கீழ் புதியதாக எந்த ஒரு தேச துரோக குற்றச் சாட்டையும் பதிவு செய்யவோ அல்லது அத்தகைய வழக்குகளில் தொடர் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளவோ செய்யாமல் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. இந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், காலம் கடந்த சட்டங்களினால் ஏற்படும் சுமையைக் குறைக்கும் பிரதமரின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு இந்த தேச விரோத குற்றவியல் சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்ததில் இருந்து பிறந்ததாகும். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், கருத்து மாறுபடுபவர்கள்மீது இந்த தேச விரோத சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதிலிருந்து பழி வாங்கும் மனோபாவம் கொண்ட அரசுகளையும், ஆளும் கட்சி ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் தடித்த தோல் கொண்ட காவல்துறை அதிகாரிகளையும் தடுத்து நிறுத்துவதற்கு தங்களது ஆணை மட்டுமே போதாது என்று கருதிய உச்சநீதிமன்றம், புதியதாக தேச விரோத வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டால், இந்த ஆணையையும், ஒன்றிய அரசின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டு தங்கள் பகுதியில் உள்ள நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறலாம் என்பதற்கான சுதந்திரத்தையும் உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்துள்ளது.

தேச துரோக சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்னமேயே அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேச துரோகம் என்றால் என்ன என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு 1962ஆம் ஆண்டில் நிர்ணயித்த வரையறைகளை காவல்துறை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றங்களில் பல நேரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஒழுங்கீனமான போக்கை உருவாக்குவது அல்லது அத்தகைய செயல்களில் ஈடுபடுவது அல்லது சட்டம் - ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிப்பது அல்லது வன்முறையைத் தூண்டுதல் ஆகியவை மட்டும்தான் தேச துரோகக் குற்றம் என்ற வரையறைக்குள் வரும் என்று உச்சநீதிமன்ற விளக்கத்தை 1962ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால், காவல்துறையினர், அரசை பலமான சொற்களாலும், கடுமையான மொழியாலும் குறை கூறி விமர்சனம் செய்யும் எவர் ஒருவர் மீது  வேண்டுமானாலும் தேச துரோக குற்றச்சாட்டைப் பிறப்பிப்பதையே நடைமுறையாகக் கொண்டிருந்தனர்.

இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வியே, 60 ஆண்டுகளுக்குமுன் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டுமா என்பதுதான். இந்திய குற்றவியல் தண்டனை சட்ட விதிகளின் கீழ் பேச்சு சுதந்திரத்துக்குத் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று கருதினால் உச்சநீதிமன்றம் இந்த 124ஏ பிரிவு விதியினை நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால், பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் தேச துரோக குற்றச்சாட்டு பிறப்பிப்பதற்கு தவறாக இந்த சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது என்ற ஓர் உயர்ந்த நோக்கம் நிறைவேறுவதற்கு உதவி செய்யும்.

ஒரு நிபுணர் குழு பரிந்துரைத் திருப்பதாகக் கூறப்படுவதுபோல் நாட்டின் இறையாண்மை, நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் செயல்கள் மட்டுமே தேச துரோகக் குற்றமாகக் கருதப்படும் என்ற வகையில் அந்த சட்டப் பிரிவுக்கு ஒன்றிய அரசு திருத்தம் செய்து, உச்சநீதிமன்றத்தால் அந்த சட்டப் பிரிவு செல்லாது என்று அறிவிப்பதைத் தடுக்கலாம். இந்த சட்டப் பிரிவினை மறுபரிசீலனை செய்யப் போவதாக ஒன்றிய அரசு கூறியபோது, இந்த 124ஏ சட்டப் பிரிவு அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் விசாரணை கால வரையறையின்றி, தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் உணர்வுகளை ஒன்றிய அரசு நன்கு அறிந்துகொண்டு அதற்கு செவி சாய்த்து, அந்த சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்வதற்கு தக்க பயன் நிறைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி 'தி இந்து' 12-5-2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment