வங்கிக்கடனில் மோசடி திமிங்கலங்களை விட்டுவிட்டு சிறு விவசாயிகளை நசுக்குவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

வங்கிக்கடனில் மோசடி திமிங்கலங்களை விட்டுவிட்டு சிறு விவசாயிகளை நசுக்குவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, மே 17- மத்தியப் பிரதேசத்தில்  மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் படிதார் என்ற விவசாயி, பாங்க் ஆப் மகாராட்டிராவில் கடன் பெற்றிருந்தார். ஒருமுறை சமரச திட்டத்தில் கடனை செலுத்த தயாராக இருந்தார். அதன்படி, 36.50 லட்சம் ரூபாய் செலுத்த வங்கி உத்தரவிட்டது. அதில், 35 லட்சம் ரூபாயை அவர் செலுத்தினார். இதற்கிடையே, மொத்தக் கடனான, 50.50 லட்சம் ரூபாயையும் செலுத்தும்படி அவருக்கு வங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த் அடங்கிய அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:

தான் வாங்கிய கடனை நேர்மையுடன் செலுத்த இந்த விவசாயி முன்வந்தார். வங்கியுடன் செய்த சமரச ஒப்பந்தத் தில், 95 சதவீதத்தை அவர் செலுத்தியுள்ளார். ஆனால், கூடுதல் தொகை செலுத்தும்படி அவருக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.பெரிய அளவில் கடன்களை வாங்கி ஏமாற்றிய திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், இவரைப் போன்ற சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா?இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இதில் எழுப்பப்பட்டுள்ள சட்டம் தொடர்பான கேள்விகள், உரிய வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படும்.

-இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


No comments:

Post a Comment