ஒருவருக்கு ஒரு பதவி - ஜாதிவாரி கணக்கெடுப்பு - மக்களை நேரடியாக சந்திக்க நடைப்பயணம்- சோனியா காந்தி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

ஒருவருக்கு ஒரு பதவி - ஜாதிவாரி கணக்கெடுப்பு - மக்களை நேரடியாக சந்திக்க நடைப்பயணம்- சோனியா காந்தி அறிவிப்பு


உதய்பூர், மே 16  காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்ட மாநாட்டில், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி, கட்சி பதவி வகிக்க 5 ஆண்டு கால வரம்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு, 2024 மக்களவை தேர்தலை சந்திக்க புதிய வியூகமும் வகுக்கப் பட்டுள்ளது. கடந்த 2014, 2019 ஆம் ஆண்டு களில் நடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ், அதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் ஆட்சியைப் பறிகொடுத்தது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலிலும் தோல் வியை சந்தித்து. தற்போது ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இவ்வாறு தொடர் வீழ்ச்சியால், கட்சியில் தீவிர மாற்றங்களை செய்ய கட்சித் தலைமை முடிவெடுத்தது.

இதற்காக, கட்சியை வலுப்படுத்த மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசின் சிந்தனை அமர்வு கூட்ட மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. 3 நாள் நடந்த இம்மாநாட்டில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொருளாதாரம், விவசாயம், இளைஞர் நலன், சமூக நீதி உள்ளிட்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, மூத்த தலை வர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக் கப்பட்டு, அவர்களின் தலைமையில் ஆலோ சனை நடைபெற்றது.

இதில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையும், அதற்கு முன்பாக குஜராத், இமாச்சல் பிரதேசம், கருநாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநில சட்டப்பேரவை தேர் தலையும் சந்திக்கும் வகையில் கட்சியை வலுப்படுத்தவும், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்தும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும் ஆலோ சிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கூட் டத்தின் 3ஆவது மற்றும் நிறைவு நாளான 15.05.2022 ஞாயிறு அன்று, 6 குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் அறிக் கையை சோனியாவிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் சோனியா தலைமையில் நடந்தது. இதில், ஒருங்கிணைப்பு குழுவின் பல்வேறு பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மாநாட்டின் தீர்மானத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

* கட்சியில் புதிய நபர்களுக்கு வாய்ப் பளிக்கும் வகையில், எந்த ஒரு நபரும் 5 ஆண்டுகளுக்கு மேல் கட்சிப் பதவியில் நீடிக்கக் கூடாது.

* கட்சியின் அனைத்து மட்டத்திலும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

* கட்சி மற்றும் கொள்கை விவகாரங்களில் முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு உத விட கட்சியினுள் அரசியல் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இக்குழு உறுப்பினர்கள் காரிய கமிட்டி குழுவில் இருந்து தேர்ந் தெடுக்கப்படுவார்கள்.

* ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். மற்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தீவிர கட்சிப் பணியாற்றி இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

* கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை செயல்படுத்த செயற்குழு அமைக்கப்படும்.

* அனைத்து மாநிலங்களிலும் அரசியல் விவகாரக் குழு அமைக்கப்படும். மேலும், கட்சித் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய அளவிலான பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

* கட்சியின் தகவல் தொடர்பு அமைப்பு புதுப்பிக்கப்படும்.

* தேர்தல் நிர்வாகத்துக்காக சிறப்புக்குழு நிறுவப்படும். இவைகளுக்காக, பொது நுண் ணறிவு, தேர்தல் மேலாண்மை மற்றும் தேசிய பயிற்சி என 3 புதிய பிரிவை காங்கிரஸ் அமைக்க உள்ளது. இவ்வாறு முடிவு செய் யப்பட்டுள்ளது.

குமரி முதல் காஷ்மீர் வரை
விழிப்புணர்வு பேரணி -சோனியா அறிவிப்பு

கூட்டத்தின் நிறைவு உரையில் சோனியா காந்தி பேசியதாவது: 

உட்கட்சியில் மாற்றங்கள் தேர்வு செய்வது அவசியம் என்பதால் அதற்கான செயற்குழு இன்னும் 2, 3 நாள்களில் அமைக்கப்படும். இதே போல, காரிய கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் ஆலோசனைக் குழு, எனது தலைமையில் அடிக்கடி கூடி அரசியல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தும். இக்குழு கூட்டு முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. அரசியல் விவகாரங்களில் மூத்த தலைவர்களின் பரந்த அனுபவத்தை பெறுவதற்கானது. சிந்தனை அமர்வு கூட்டம் மிகவும் பயனுள்ள, பல னிக்கும் கூட்டமாக அமைந்ததாக நான் உணர்கிறேன். இதில் வழங்கப்பட்டுள்ள பரிந் துரைகள் மாநில மற்றும் மக்களவை தேர்தல் களுக்கான அறிக்கைகளை தயாரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

குழுவின் பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படும் சமூக, மத நல்லிணக் கத்தின் பிணைப்பை வலுப்படுத்தவும், அர சமைப்பை பாதுகாக்கவும், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவும், காந்தியாரின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யிலான ஒருங்கிணைந்த இந்தியா பேரணி தொடங்கப்படும். இதில் நாம் அனைவரும் பங்கேற்கவேண்டும். இதேபோல, பொரு ளாதார பிரச்சினை, வேலையில்லாத் திண் டாட்டம், விலைவாசி உயர்வைக் கண்டித்து  மக்கள் விழிப்புணர்வுப் போராட்டம் இரண்டாம் கட்ட போராட்டங்கள் வரும் ஜூன் 15ஆம் தேதியில் இருந்து முன்னெ டுக்கப்படும். 

இவ்வாறு சோனியா தெரிவித்தார்.

No comments:

Post a Comment