'தினத்தந்தி'யின் தலையங்கம் - ஏற்புடைத்தா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

'தினத்தந்தி'யின் தலையங்கம் - ஏற்புடைத்தா?

14.5.2022 நாளிட்ட தினத்தந்தி ஏட்டில் "இந்துமத மரபுகள் காப்பாற்றப் பட வேண்டும்" எனும் தலைப்பில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட் டுள்ளது.

இந்து மத மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இதன் பொருள் என்ன? இந்து மதத்தின் ஆணிவேரே வருணாசிரம தர்மம் தானே? அந்த மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பார்ப்பனர்களைத் தவிர, மற்ற பார்ப்பனர் அல்லாதார் எல்லாம் சூத்திரர்கள்தானே! சூத்திரன் என்றால் யார் என்று மனுதர்ம சாத்திரம் கூறுவது என்ன? (1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், (2) யுத்தத்தில் கைதியாகப் பிடிபட்டவன், (3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், (4) விபசாரி மகன், (5) விலைக்கு வாங்கப்பட்டவன், (6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் (7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் என சூத்திரன் ஏழு வகைப்படுவான் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

இவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறதா தினத்தந்தி?

"மத சம்பந்தமான மரபுகள், வழிபாட்டு முறைகள் நடைமுறையில் கை வைப்பது என்பது தேன் கூட்டில் கை வைப்பது போலாகும். அதுதான் தருமபுர ஆதினம் பட்டினப் பிரவேசம் விஷயத்தில் நடந்து இருக்கிறது" என்று தினத்தந்தி கூறியதோடு நில்லாமல், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் மனிதனை மனிதன் சுமப்பதா, இது மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்து இருப்பதைக் குறை கூறுகிறது தினத்தந்தி.

தருமபுர பண்டார சன்னதி 16ஆம் நூற்றாண்டிலிருந்து பட்டினப் பிரவேசம் நடத்துவதாகவும் - இத்தகைய சம்பிரதாயங்களில் தலையிடக் கூடாது என்று 'தினத்தந்தி' தலையங்கம் தீட்டுவதுதான் மிகப் பெரிய தலையிறக்கமாகும்.

மத சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள் மாற்றத்துக்கு ஆளானதே இல்லையா? தாழ்த்தப்பட்ட மக்களும், நாடார் போன்ற பிற்படுத்தபட்ட மக்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற நிலை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளதா இல்லையா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்கிற அளவுக்கு வந்துள்ளது எல்லாம் - பழைய சம்பிர தாயங்களிலிருந்து மாற்றப்பட்டதுதானே!

இன்றைக்கு 96 ஆண்டுகளுக்கு முன்பே 1926இல் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 3ஆம் தீர்மானம் என்ன கூறுகிறது?

"இந்துக் கோயில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பார்க்கும் பூஜையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது (குடிஅரசு 6.1.1927)

தீர்மானம் போட்டதோடு நிற்கவில்லை. செயல் முறையிலும் பார்ப்பனர் அல்லாதாருக்கான சுயமரியாதை இயக்கம் இறங்கிட வில்லையா?

7.2.1927இல் திருவண்ணாமலைக் கோயிலில் 'திராவிடன்' இதழ் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பன் தலைமையில் தாழ்த்தப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லையா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் கோயில் திருச்சி மலைக்கோட்டைக் கோயில், ஈரோடு  ஈசுவரன் கோயில் உள்ளிட்ட எண்ணற்ற கோயில்களில் தாழ்த்தப்பட்டோரும், நாடார் சமுதாயத்தினரும் உள்ளே செல்ல போராடி வெற்றித் தேடிக் கொடுத்த அந்த சுயமரியாதை இயக்கத்தின் வழி வந்ததுதான் திராவிடர் கழகம் என்பதைத் தினத்தந்தி உணர வேண்டும்.

'சூத்திரர்களைப் போன்று நாடார்களும், ஆலயங்களில் அனுமதிக்கப் பெறுவதில்லை. மிகத் தாழ்ந்த ஜாதியிலுள்ள பெண்களைப் போன்று நாடார் பெண்களும் இடுப்புக்கு மேல் தோள் சேலை அணியலாகாது" ("சுயமரியாதை இயக்கத்திற்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு" முனைவர் பு. இராசதுரை பக்கம் 22).

கோவில்களில் இருந்து வந்த சம்பிரதாயங்கள், மரபுகள் மாற்றப்பட்ட தனால் ஏற்பட்ட உரிமைகள்பற்றி 'தினத்தந்திக்கு'த் தெரியவே தெரியாதா?

திராவிடர் கழகம் ஏதோ இப்பொழுதுதான் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான போர்க் கொடியைத் தூக்கியுள்ளது என்று நினைக்க வேண்டாம்.

1962ஆம் ஆண்டிலேயே எதிர்த்தது. அன்றைய குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியாரைச் சந்தித்து 'இந்த ஓராண்டுக்கு மட்டும் திட்டமிட்டிருந்தபடி தருமபுரம் ஆதின கர்த்தரின் பட்டினப்பிரவேசம்  நடக்கட்டும்; இனி அது நடக்காது என்று கூறிய உத்தரவாதம் எல்லாம் தெரியாமல் தலையங்கம் தீட்டலாமா?

இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதே தருமபுர ஆதின கர்த்தர் திருப்பனந்தானில் பல்லக்கில் பவனி வர ஏற்பாடு செய்யப்பட்டபோது திராவிடர் கழகம் எதிர்த்து அணி திரண்டபோது, பல்லக்கில் பவனி வராமல் நடந்து சென்றாரா இல்லையா? (12.2.2020)

கை ரிக்ஷாவை ஒழித்த ஒரு மாநிலத்தில் மனிதனை மனிதர்கள் சுமக்கும் அநாகரிகத்தை ஆதரிப்பதும் அது மரபு என்றும் - திராவிடர் கழகம் எதிர்க்கக் கூடாது என்றும்  சி.பி. ஆதித்தனாரை நிறுவனராகக் கொண்ட தினத்தந்தி தோள் கொடுத்துத் தூக்கலாமா? வக்காலத்து வாங்கலாமா?

பண்டார சன்னதிகள் பழைய மரபுபடிதான் வாழ்கிறார்களா? குளிர் சாதன வசதியோடு சகல  நவீன வசதிகளோடு தானே வாழ்கிறார்கள் - விமானத்தில் பறக்கிறார்கள். குன்றக்குடி உள்ளிட்ட மடங்களில் பட்டினப் பிரவேசம் கைவிடப்படவில்லையா?

மதம் உட்பட எதுவாக இருந்தாலும் மாற்றம் என்பது தவிர்க்கப்பட முடியாதது; மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது அறிவியல்.

1) வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய்  இருத்தலின், அன்னார் நெடு நிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துத் திருப்பெறவே வானளாவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன" (ஆதாரம்: நூல் "இராஜராஜன் சோழன்" - ஆசிரியர் இரா. சிவசாம்பசிங் சர்மா பக்கம் 93).

இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளுகிறதா தினத்தந்தி? 1927இல் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஜெ.என். இராமநாதன் தாழ்த்தப் பட்டோரை அழைத்துக் கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்குப் படியேறிச் சென்றபோது, அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டி விடப்பட்டார்கள். (கேசரி இதழ்) திருச்சி மலைக்கோட்டையிலும் (25.6.1928) திருவானைக்காவல் கோயி லிலும் (12.8.1928) கூட இவ்வாறே நடந்தன.

இந்த கொடுமைக்கு ஆளானவர்கள் வழி வந்த திராவிடர் கழகம் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக மாற்றப் பணியைச் செய்து வருகிறது. இந்த இயக்கங்களால் பயன் பெற்றவர்கள் - மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல விரும்பலாமா? தலையங்கம் தீட்டலாமா?

சி.பா. ஆதித்தனாரின் மறைவு செய்தியை உள் பக்கத்தில்  போட்டு, பாலக்காடு மணி அய்யர் மறைந்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட பார்ப்பன ஏடுகள் -  இவை எல்லாம் மறந்து விட்டதா?

No comments:

Post a Comment