ஆளுநர்கள் அரசியல் செய்வது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

ஆளுநர்கள் அரசியல் செய்வது ஏன்?

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தங்களை முதல்வர்களுக்கு இணையாக செல்வாக்கு உள்ளவர்களாக நினைத்துக்கொண்டு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார்கள்.

 அரசமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள பணிகளை மறந்து பா.ஜ.க. தலைமை சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு வந்த தமிழிசை "தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைத்தால் வரமறுப்பது நாகரீகமானது அல்ல என்கிறார்.   துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சார்பு இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அது ஊழலுக்கு வழிவகுக்கும் இதை தடுக்கத்தான் துணை வேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கின்றனர் என்கிறார். கருப்பு பற்றி பேசுபவர்கள் காவியை பற்றி பேசத்துவங்கி உள்ளனர். "காவி தமிழ்நாட்டில் பெரியது, வலியது என்று எல்லாம் பேசியிருக்கிறார்.

சமீப காலமாக வெளிப்படையாகவே தமிழ்நாட்டிற்கு வரும் போது அரசியல் பேசுகிறார். ஒரு மாநில ஆளுநர், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு  ஒரு மாநில முதலமைச்சர், அரசியல் பாதை, அதன் போக்குகள் குறித்து விமர்சனம் செய்யும்  அதிகாரம் தமிழிசைக்கு யார் கொடுத்தது?அரசியல் அமைப்பில் இதற்கான எந்த விதியும் இல்லை!

பா.ஜ.க. அரசு நியமித்த பன்வாரிலால் புரோகித் அண்ணா பல்கலை துணை வேந்தராக சூரப்பாவை நியமித்தார் சூரப்பா மீது ரூ.80 கோடி அளவுக்கான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிகார அத்துமீறல் என்று பல குற்றச்சாட்டெல்லாம் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் ஆதீன பெரியவர் களுக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. காவியை வைத்து, மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களைத்தான் தமிழ்நாடு புறக்கணித்தே வருகிறது. 

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித் தார்கள், இரண்டு மாநில ஆளுநர் என்ற போதிலும் பட்டாடையை தமிழிசையின்  கைகளில் வீசி எறிந்து அவமதித்தார்கள். அதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல் மீண்டும் மீண்டும் சங்கர மடம் செல்வது  பெருமையாக அவர்களுக்கு  இருக்கலாம்.ஆனால் நாங்கள் சுயமரியாதை இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர்கள் விமர்சிக்கத்தான் செய்வோம்.

ஆறு மாதமாக தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 13 மசோதாக்களை கிடப்பில்போட்டு வைத்திருக்கும் ஆளுநர் ரவியை பற்றி தமிழிசை  கருத்து கூறாமல் மறைமுகமாக தமிழ்நாடு  அரசைக் குறை சொல்கிறார்

தெலங்கானா மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் தமிழிசையும் தனது பணியை சரியாக செய்யகிறாரா? என்ற அய்யம் எழுகிறது.  

கேரளா ஆளுநரோ மதம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்துகொள்கிறார். அங்கு பேசுபவர்கள் அனைவருமே சிறுபான்மையினர் மீது நஞ்சைக் கக்குகின்றனர். அதில் ஒருவர் கேரளத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் குறித்து மிகவும் கொச்சையாகப் பேசி உள்ளார்.  அதையும் கேரள ஆளுநர் அமைதியாக ரசித்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அப்படி பேசிய நபர் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் பணி புரிகிறார். 

இந்த செய்தி அந்த நாட்டு அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டவே அவரை உடனடியாக தங்களின் நாட்டு விசா உரிமையை ரத்து செய்து அவரை வேலையில் இருந்து தூக்கிவிட்டது. இனி அரபு நாடுகளுக்கு வரவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு அவரை நாடுகடத்திவிட்டது. இனி அவர் இந்தியாவில் சங்கிகளோடு சங்கியாக மசூதி முன்பு ஜெய் சிறீராம் கூச்சல் போடுவார், ஆம் அவர் ஆளுநர் முன்பு பேசும் போது கூட இந்திய மண்ணில் ஜெய்சிறீராம் கூறியபோது எனது உடல் சிலிர்த்துவிட்டது என்றார். 

மேற்குவங்க ஆளுநரோ இரட்டை ஆட்சி முறை கொண்ட நாட்டைப் போல் செயல்படுகிறார். அவரே காவல்துறை உள்ளிட்ட நிர்வாகத்துறை கூட்டங்களை நடத்துகிறார். 

மம்தா என்ன கூறினாலும் அதற்கு நேர் எதிரான நடவடிக்கை எடுக்கிறார்.  வகுப்பில் சிறு பிள்ளை அடிக்கடி டீச்சர் இவன் என்னை அடித்துவிட்டான் என்று கூறுவது போல் மணிக்கு ஒருமுறை மேற்கு வங்க அரசு குறித்து உள்துறைக்கு புகார் கூறிகொண்டே இருக்கிறார். 

 சமீபத்தில் அங்கு நடந்துமுடித்த ஒரு தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது, பொதுவாக ஆளும் கட்சி தேர்தல் வெற்றி குறித்து எதிர்க்கட்சிகள் தான் கருத்து தெரிவிக்கும். ஆனால்  பங்களாதேசிகள் அதிகம் வந்துவிட்டார்கள், ஆகையால் வென்றுவிட்டார், என்று மறைமுகமாக ஆளுநர் பேசுகிறார். 

 தமிழ்நாட்டின் ஆளுநர் அரசமைப் பின் படி ஏன் செயல்பட மறுக்கிறார் என்று உச்சநீதிமன்றமே கூறும் நிலைமை ஏற்படும் அளவிற்கு அரசியல் செய்கிறார்.

 கிட்டத்தட்ட பாஜகவின் தமிழ்நாடு முதல்மட்ட தலைவர்களில் ஒருவராக செயல்படுகிறார். 

 பா.ஜ.க.வினர் கமலாலயத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் பேப்பர் போடுபவர்களைப் போல் கையில் மனுக்களை எடுத்துக்கொண்டு போகவும் வரவும் செய்கின்றனர்.  ஆளுநர் எப்படி அவர்களைச் சந்திக்க அனுமதி கொடுக்கிறார் என்று தான் புரியவில்லை. 

 தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுத்தால் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்டு டில்லிக்கு ஓடுகிறார். மீண்டும் வந்து அரசியல் செய்கிறார்.  இதிலிருந்து ஒன்றுமட்டும் தெரிகிறது, அவர் தமிழ்நாட்டு ஆளுநர் என்பதை விட டில்லி மற்றும் தமிழ்நாட்டு பாஜகவின் தகவல் தொடர்பில் பாலமாக இருக்கிறார் என்று தெரிகிறது. 

பேரறிவாளன் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் ஆளுநர் குறித்து இவ்வாறு கூறி இருக்கிறது. “கடந்த 75 ஆண்டுகளில் இத்தகைய நடவடிக்கைகளில் ஆளுநர்கள் வழங்கியுள்ள மன்னிப்பு அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா?” என்று கேட்டுள்ளது. 

 ஆளுநர்கள் தேவைப்பட்டால் பதவி விலகி ஏதாவது கட்சியில் இணைந்து அரசியல் செய்யட்டும். ஆனால் மரியாதைக்குரிய பதவியில் அனைவருக்கும் பொதுவானவராக இருந்துகொண்டு டில்லிக்கு காவடி தூக்க வேண்டாம் - மக்களுக்காக தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி அதைக் கொண்டு செல்ல இரவு பகலாக பாடுபடும் தமிழ்நாட்டு அரசிற்கு வேகத்தடை போடும் நபராகக் இருக்க கூடாது. 


No comments:

Post a Comment