ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்  மக்களை வெளியேற்றும் பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவான முதலமைச்சர் அறிக்கைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே, மக்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் இருக்கக் கூடாதா?

- தமிழ்ச்செல்வன், சிறுபாக்கம்

பதில்: உயர்நீதிமன்றத்தில் (உச்சநீதிமன்றத் திலும்கூட) முற்போக்கு சிந்தனையுள்ள நீதிபதிகளும் உள்ளனர். அதேபோல சிலர் மேனாள் அரைக்கால் சட்டை ஆர்.எஸ்.எஸ். “ஷாகா பயிற்சியாளர்”களாக இருந்ததோடு, இன்றும் அந்த மனப்பான்மையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, தாங்கள் எழுதும் தீர்ப்பிலும் அதனை பிரதிபலிக்கிறார்கள்.

இதனால் இப்படிப்பட்ட பொதுநலம் பிறழ்ந்த தீர்ப்புகள் வெளிவருகின்றன - மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவேதான் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களை “கண்கொத்திப் பாம்புபோல” சமூகநீதிப் போராளிகள் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

******************************

கேள்வி 2:  ஹிந்துத்துவாவைச் சேர்ந்த சிலிப்பர் செல்கள் தமிழ்நாடு அரசுத்துறையிலும் ஊடுருவி இருப்பதாக பொது வெளியில் பேசப்படுகிறதே?

- மன்னை சித்து, மன்னார்குடி

பதில்: உண்மைதான், களையெடுக்க வேண்டியது முதலமைச்சர் - அவரது பொதுத்துறை, காவல்துறை நுண்பிரிவின் பாற்பட்டது. இவர்களது கூட்டுப் பங்களிப்பு மூலம் நடைபெற வேண்டியது அவசர அவசியம். இல்லையேல் ஆட்சி முதலமைச்சரிடத்தில்; ஆளுமை அவாளிடத்தில் என்கிற ஆபத்தான போக்கே செயல் வடிவம் பெறும்.

******************************


கேள்வி 3:  இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கற்றுத் தரும் பாடம் என்ன?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: “சர்வ - அதிகாரம் தமக்கு” என்ற மனக்கோட்டை மணாளர்கள் வெளிநாடு தப்பி ஓடி, உயிருக்குப் பாதுகாப்புத் தேட முயற்சிப்பது - பரிதாபம் தொடர் கதையாகும் என்பதே!

******************************

கேள்வி 4:  சிதம்பரம் தீட்சிதர்கள் மீது 21 முதல் தகவல் அறிக்கைகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ?

- அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: மில்லியன் டாலர் கேள்வி. உடனடியாக இதுபற்றி நமது திராவிடர் கழகச் சட்டத்துறை வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்பரிகாரம் தேட வேண்டும் - அதுதான் ஒரே வழி!

******************************

கேள்வி 5:  சங்பரிவார் கும்பல் தமிழ்நாட்டிலும் தங்களின் சமூக பிரித்தாளும் பணிகளைத் தொடங்கிவிட்டதே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: “ஆரிய மாயை” யின் தனித்துவமே அதுதான். விபீடணன், பிரகலாதன், அனுமான், சுக்கிரீவன், குரங்குப் பட்டாளம் என்ற புராண கற்பனைகள் எதற்கு? இப்படிப்பட்டவை தொடரத்தானே!

******************************

கேள்வி 6:  பள்ளிகளில் புராணக் கதைகளைக் கற்பிக்கும் நீதிபோதனை வகுப்புகளுக்குப்  பதிலாக திருக்குறள் வகுப்புகளை நடத்தினால் என்ன?

- த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: நல்ல யோசனை. அது மட்டுமல்ல. பவுத்த அறம், நாலடியார் (சமண நூல்), பகுத்தறிவுக் கருத்துகள் - இவற்றின் அடிப்படையில் வகுப்பெடுக்கச் செய்தால் மனிதநேயமும் ஒழுக்கமும் தழைத்தோங்கி - இளையர் உள்ளத்தில் விதையாகும்.

போதைகள் ஒழிப்பு முக்கியத்துவம் பெற தனி நேரம் அதில் ஒதுக்கப்பட வேண்டும்.

******************************

கேள்வி 7:  துப்புரவுப் பணிகள் நிரந்தரமாக இருக்கும்போது, பணியாளர்களை மட்டும் தற்காலிகமாக வைத்திருப்பது மோசடி அல்லவா?

- அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

பதில்: அவர்கள் பணிதான் உண்மையான Essential Services - இன்றியமையாப் பணி. அவர்கள் தேவையை இந்த அரசு நிறைவு செய்யவில்லையானால் வேறு எந்த அரசு செய்யும்?

******************************

கேள்வி 8:  அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை ஒரே சீராக்காமல் தகைசால் பள்ளிகள் என்ற தரம் உயர்த்திய பள்ளிகளைப் புகுத்துவது சரியா? மும்மொழிப் பிரச்சினையைத் தவிர நவோதயாவுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

 - முரளிகிருஷ்ணன், கல்லக்குடி

பதில்: நல்ல கேள்வி: பள்ளிக் கல்வித்துறைதான் இதனை விளக்க முன்வர வேண்டும்.

******************************

கேள்வி 9: உச்சநீதி மன்றம் தேசத் துரோக வழக்குப் பிரிவுகளை ரத்து செய்துள்ளது. அந்த பிரிவுகளில் கைதானவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை என்ன செய்வது?

- இன்பத் தமிழன், உல்லியக்குடி

பதில்: வழக்கு முடிந்து முழுத் தீர்ப்பு வரட்டும். அதற்குள் ஏன் இந்த அவசர அவசியமான ஆசை?

******************************

கேள்வி 10:  “ஒன்றியத்தில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி” என்னும்போது உள்ளாட்சிகளுக்குத் தன்னாட்சி வேண்டாமா? உள்ளாட்சி அமைப்புகளின் முடிவுகளை அதிகாரிகளே எடுக்கும் நிலை தொடர்கிறதே?

- கண்ணன், விக்கிரமங்கலம்

பதில்: என்ன தோழரே, இப்போதுதானே உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டு புரிதல் ஏற்படுகிறது. அதற்குள் அவசரப்படலாமா? உங்கள் கேள்வியில் உள்ள நியாயங்கள் எவராலும் மறுக்கப்பட முடியாதவைதான். சற்றுப் பொறுத்திருங்கள் - மாநில நிதி நிலைமை சரியாகட்டும்!

மாநில அரசு நிதிப்பற்றாக்குறை சற்று குறையட்டும்.

முதலில் உள்ளாட்சித் துறையில் தேர்வானவர்களுக்கு - அதுபற்றிய சட்டப் பிரிவுகளுடன் வகுப்புகளை - புரிதல்களை - நல்ல நிர்வாக ஆளுமை அனுபவம் பெற்றவர்களைக் கொண்டு தக்க பயிற்சி அளிப்பது முன்னுரிமைப் பணியாகும். அவர்களை, குறிப்பாகப் பெண்களைச் சுதந்தரமாக இயங்கப் பக்குவப்படுத்துவதும், வாய்ப்புத் தருதலும் மிகவும் முக்கியமாகும்.

No comments:

Post a Comment