ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு பயந்து குழந்தைகளின் ஊட்டச்சத்தில் துரோகம் செய்யும் பாஜக - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு பயந்து குழந்தைகளின் ஊட்டச்சத்தில் துரோகம் செய்யும் பாஜக

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் கருநாடகா முட்டை வழங்க உள்ளது. ஆனால் கருநாடக அரசின் இந்த திட்டத்திற்கு அங்குள்ள இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து மதிய உணவில் முட்டைகளைச் சேர்ப்பது பெரும் விவாதப் பொருளாகி வருகிறது

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டை  வழங்கும் திட்டத்தை கருநாடக அரசு முன்வைத்துள்ளது. இது சூடான சமைத்த உணவின் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க உலகின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும்.

ஆனால் இந்த திட்டத்தை கருநாடகாவில் உள்ள சில்லரை ஹிந்துத்துவ அமைப்பினர் எதிர்க்கின்றனர். இதனால் இந்ததிட்டம் கருநாடக அரசின் இறுதி ஒப்புதலுக்காகக் கிடப்பில் போடப்படும் நிலைக்குச்சென்றுவிட்டது.

 இந்தத் திட்டம், மாநிலத்தின் பல பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை மற்றும் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவை குழந்தைகளிடையே அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அடுத்தடுத்த ஆய்வுகளின் பின்னணியில் வந்துள்ளது. 

அய்ந்து வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், சுமார் 20% ஊட்டச்சத்து குறைவுள்ளவர்களாகவும் இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கண்டறிந்துள்ளது.

 “தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்துகொண்டு வருகிறது.”

 குழந்தைகளுக்கு உணவு வழங்குவ தற்கான முதல் முயற்சி 1920 ஆம் ஆண்டு வாக்கில் பழைய மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், தமிழ்நாடு மீண்டும் முன்னோடியாக இருந்தது, 1956 ஆம் ஆண்டில் முதலமைச்சர் காமராஜர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கேரளாவில் 1961 ஆம் ஆண்டு முதல் ஒரு மனிதாபிமான நிறுவனத்தால் நடத்தப்படும் மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் இருந்து வருகிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மாநில அரசு அதிகாரப்பூர்வமாக இந்த முயற்சியை மேற்கொண்டது, இதன் மூலம் கேரளாவை பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்ட நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக மாற்றியது. அடுத்த சில ஆண்டுகளில், பல மாநிலங்கள் இத்திட்டத்தைத் தொடங்கின, இறுதியாக 1995 இல், ஒன்றிய அரசு இந்த திட்டத்தில் கவனம் செலுத்தியது.

 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2,408 பகுதிகளில்  1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒன்றிய நிதியுதவித் திட்டமாக இது தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 8 ஆம் வகுப்பு வரைக்கும் விரிவுபடுத்தியது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளான டில்லி மாநகராட்சிகள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு (வயது 6 முதல் 14 வரை) வரை பயிலும் 11.80 கோடி குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013  (NFSA) இன் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு 10,233 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, அதே நேரத்தில் மாநிலங்கள் 6,277 கோடி ரூபாய் செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது ஒரு திட்டம் மட்டுமல்ல, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்  (NFSA)  , 2013, மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா அண்ட் அதர்ஸ் (2001) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் உள்ள அனைத்துப் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கும் சட்டப்பூர்வ உரிமையாகும்.

மெனு ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. ஆனால், அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு ஆகியவற்றால் ஆன உணவின் ஊட்டச்சத்துக் கூறுகள் ஆரம்ப வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 450 கலோரிகளையும் 12 கிராம் புரதத்தையும் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நடுநிலை பள்ளிக் குழந்தைகளுக்கு, 700 கலோரிகள் மற்றும் 20 கிராம் புரதம் தேவை. சில மாநிலங்கள் துணை ஊட்டச்சத்தாக பால், முட்டை, சிறுதானி யங்களில் செய்யப்பட்ட இனிப்பு பொருட்கள் அல்லது பழங்கள் போன்ற கூடுதல் பொருட்களையும் வழங்கி வருகின்றன. அதற்கான செலவுகள் மாநில அரசாங்கத்தால் ஏற்கப்படுகின்றன.

 சைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை மற்றும் வாழைப்பழங்கள் தற்போது 13 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் முட்டை வழங்குகிறது; ஆந்திரா, வாரத்தில் குறைந்தது அய்ந்து நாட்கள்; தெலங்கானா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், வாரத்திற்கு மூன்று முறை; ஜார்கண்ட், ஒடிசா, திரிபுரா மற்றும் புதுச்சேரி, வாரத்திற்கு இருமுறை; பீகார், கேரளா, மிசோரம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லடாக்  வாரத்திற்கு ஒரு முறை; மற்றும் சிக்கிம், மாதத்திற்கு ஒருமுறை வழங்கி வருகிறது. 

நாடாளுமன்றத்தில் ஆண்டு வேலைத் திட்டம் மற்றும் திட்டத்தின் நிதிநிலை அறிக்கை ஆவணங்களின்படி. குஜராத், கருநாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், உத்தரகண்ட், லடாக் மற்றும் புதுச்சேரி ஆகியவை பால் வழங்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கும்.

 மற்ற உணவுப் பொருட்களில், மேற்கு வங்காளத்தில் பாலாடைக்கட்டி மற்றும் காளான் குறைந்த அளவில் வழங்கப்படுகிறது, அதே சமயம் ஆந்திரா மற்றும் மகாராட்டிரா ஆகியவை சிறுதானிய இனிப்பு வகைகள் வழங்குகின்றன. லட்சத்தீவில் கோழிக்கறியும் வழங்கப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் விலை அதிகம். ஆனால், இந்தியாவில் ஜாதிய இறுக்கங்கள், மதப் பழைமைவாதம் மற்றும் பிராந்திய வேறுபாடுகள் காரணமாக உணவுக்கான பட்டியல் என்பது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதனால், விவாதம் அரசியலாகவும் மாறுகிறது. இதன் விளைவாக, குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதன் பலன்களைக் காட்டுவதற்கு, மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட ஆய்வு அமைப்புகளின் தொடர்ச்சியான அறிவியல் ஆய்வுகள் இருந்தபோதிலும், பல மாநிலங்கள் பள்ளி மதிய உணவு மெனுவில் முட்டைகளை சேர்ப்பதில் தயக்கம் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக சத்தீஸ்கர் மாநிலத்தின் மதிய உணவில் இருந்து 30-35% மாதிரிகளில் குறைந்த அளவு புரதத்தைக் கண்டறிந்தது, வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டைகளைக் கொடுப்பதன் மூலம் சிக்கலைச் சமாளிக்க முடிவு செய்தது, ஆனால் இந்து அமைப்பு களின் எதிர்ப்பை எதிர்கொண்டது.

 மத்தியப் பிரதேசத்தில், அங்கன்வாடிகளில் முட்டைகளைச் சேர்க்கும் காங்கிரஸ் அரசின் முடிவை, 2020இல் பாஜக அரசு ரத்து செய்தது. கருநாடகாவில், இந்து அமைப்புகள்  மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்களால் முட்டைகள் சேர்க்கப்படுவதற்கான திட்டங்கள் கடந்த காலங்களில் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பல மாநிலங்கள் இந்து அமைப்புகளின் எதிர்ப்பிற்கு பயந்து முட்டைக்கு மாற்றாக வாழைப்பழம் மற்றும் கொண்டைக்கடலை, தளியா எனப்படும் நவதானியக்களியை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு வாரத்தின் பல்வேறு நாட்களில் மிளகு முட்டை, வெங்காய தக்காளி மசாலா முட்டை,  என பல்வேறு கலவைகளில் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.

-------

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 

இந்தியாவில்தான் அதிகம்: ஆய்வில் தகவல்

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வு நிறுவனமான யர்னஸ்ட் யங் (இஒய்) சார்பில் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இந்தியாவில் 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் மரணம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளது. எனினும், உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகள் இந்தியாவில்தான் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37 சதவீத குழந்தைகள் எடை குறைவுடன் உள்ளனர். 39 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையிலும், 21 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்தே இல்லாமலும், 8 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டும் இருப்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்தே இல்லாமல் நோஞ்சானாகிப் போகும் குழந்தைகளின் விகிதம் உயர்ந்து வருகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

------

விதிகளின்படி, முதன்மை வகுப்புகளில் உள்ள ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.4.97 மற்றும் நடுநிலை வகுப்புகளில் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.7.45 என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 60:40 விகிதத்திலும், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு மற்றும் காஷ்மீர் 90:10 விகிதத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களில் 100% செலவுகளை ஒன்றிய அரசு ஏற்கிறது.

ஆனால் பால் மற்றும் முட்டை போன்ற கூடுதல் பொருட்களை வழங்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதிக பங்களிப்பு செய்கின்றன. சமையல்காரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்ற கூறுகளும் ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் அதே விகிதத்தில் பிரிக்கப்படுகின்றன. 

இருப்பினும், உணவு தானியங்கள் மற்றும் அவற்றின் போக்குவரத்துக்கான முழுச் செலவையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது, மேலும் திட்டத்தின் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுக்கான செலவினங்களையும் கையாளுகிறது.


No comments:

Post a Comment