“பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வது மூடத்தனமே!” - துக்ளக் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

“பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வது மூடத்தனமே!” - துக்ளக் ஒப்புதல்

கேள்வி: எஸ்றா சற்குணம் அரசியல் பேசினால் மதச்சார்பின்மை. மதுரை ஆதீனம் அரசியல் பேசினால் மதவாதம் என்கிறார்களே, இது என்ன மாதிரியான மனநிலை? 

பதில்: இதுதான் மைனாரிட்டி தாஜா, ஹிந்து துவேஷ செக்யுலர் மனநிலை

- துக்ளக், 20.4.2022

மதுரை ஆதீனம் இன்னொன்றும் சொல்லியுள்ளாரே, ‘நான் சைவன், ஹிந்து அல்ல!’ என்று சொல்லியிருக்கிறாரே - அதைப் பற்றியும் குருமூர்த்தி குடுமி சிலாகிப்பது தானே!

சுப்பிரமணியசாமி காஞ்சி சங்கரமடம் சென்றால் சங்கராச்சாரியாரோடு  சரி சமமாக “ஜாம் ஜாம்“ என்று அமர்ந்திருக்கிறார் - ஒன்றிய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சங்கரமடம் சென்றால் தரையில் உட்கார வேண்டியிருக்கிறதே - அதையும் சிலாகிக்கலாமே!

அவாள் ஆடினால் பரதம் - இவாள் ஆடினால் சதுர் என்கிறாளே, அதையும் சற்றுச் சிலாகிக்கலாமே!

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சன்னதியில் அத்துமீறி ஆகமங்களுக்கு விரோதமாக நுழைந்தாரே - இராமேசுவரம் இராமநாதன் கோயிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி அத்துமீறி, ஆகமவிதிகளை மீறிக் கர்ப்பக் கிரகத்தில் நுழைந்ததும், இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாண்பமை. இராமநாத் கோவிந்த், பூரி ஜெகந்நாதன் கோயிலிலும், அஜ்மீர் பிர்மா கோயிலிலும் வழிபடச் சென்ற போது தடுக்கப்பட்டாரே -அதைப் பற்றியும் குடுமிகள் சிலாகிக்கக் கூடாதா?

கேள்வி: பத்திரிகை மோகம், செல்போன் மோகம், டி.வி.மோகம் இவற்றில் எது உயர்வானது?

பதில்: இன்றைய நிலையில், எதுவும் எதையும் விட உயர்வானதல்ல. எது எதை விட மோசம் என்று வேண்டுமானால் கூறலாம்.

துக்ளக் - 20.4.2022

கல்லைக் கடவுள் என்பதை விட மோசடி, சாக்கடையும், கழிவும் கலக்கும் நீரை புனிதம், அதில் குளித்தால் பாவம் போகும் என்பதும் மோசமா - மோசடியா?

கேள்வி: தங்கள் அபிமான நடிகரின் நூறு அடி ‘கட்அவுட்’ மீது, உயிரைப் பணயம் வைத்து ஏறி, பாலாபிஷேகம் செய்து, பணத்தை வீணடிக்கும் ரசிகர்களைப் பற்றி?

பதில்: கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்குப் பாலாபிஷேகம் செய்வது மூட நம்பிக்கை, முச்சந்தியில் நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்களுக்கும், பாலாபிஷேகம் செய்வது முற்போக்கு, இததான் திராவிடச் சித்தாந்தம் தமிழகத்தில் செய்திருக்கும் சமூக நீதிப்புரட்சி.

- துக்ளக், 20.4.2022

கோவில்களில் நடக்கும் பாலாபிஷேக மும், நடிகர் நடிகைகளுக்கு அரசியல் தலைவர்களுக்குச் செய்யும் பாலாபிஷேக மும், மூடநம்பிக்கைதான் என்று ‘துக்ளக்‘ ஒப்புக் கொண்டதற்கு பாராட்டு!

இதில் திராவிடச் சித்தாந்தம் எங்கிருந்து வந்தது? சமூக நீதி எங்கிருந்து வந்தது? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வேலைதானே இது?

எப்படியோ, கோயிலில் கடவுளுக்குப் பாலாபிஷேகம் செய்வது முட்டாள்தனம் என்று ஒப்புக் கொண்டது வரை சரி!

கேள்வி: வெளிநாடுகளில் தமிழர் பண்பாட்டை விட்டுக் கொடுக்காத தமிழக அரசியல்வாதி யார்? 

பதில்:  ராஜாஜி - காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவராக இருந்த ராஜாஜியை அமெரிக்கா அழைத்தது. அவர் அங்கு சென்றார். இங்கு எப்படி வேஷ்டி அணிந்து இருந்தாரோ, அங்கும் அப்படியே பயணம் செய்தார். அன்று உலகின் தலைசிறந்த தலைவராகக் கருதப்பட்ட ஜான் எஃப். கென்னடியை அதே உடையில் சந்தித்துப்  பேசினார்  பாரம்பரிய உடையில் இருந்த ராஜாஜியைப் பார்த்த கென்னடி, ‘‘அது போன்று சிந்தனையில் துல்லியமாகவும், மொழியில் அழகாகவும் பேசிய ஒருவரைப் பார்ப்பது அரிது’’ என்று கூறி னார். உடன் இருந்த இந்திய தூதுவர் பி.கே. நேரு, ‘’தனது காரியதரிசிகள், அவருக்காகக் காத்திருந்த மற்றவர்களைப் பற்றிச் சீட்டுக்களை கென்னடியிடம் அடிக்கடி கொடுத்த போது, அவர்களை விரட்டி அடித்த கென்னடி, ராஜாஜியால் ஈர்க்கப்பட்டார்’’ என்று குறிப்பிட்டார். நவீன கோட் போட்டால் தகுதி கூடாது. பாரம்பரிய வேஷ்டி கட்டினால் குறையாது.

- துக்ளக், 20.4.2022

ராஜாஜி வேட்டி கட்டியது சாதாரணமான தல்ல - பஞ்சக்கச்சம் அதை மறைப்பானேன்? ஆட்சிக்கு வந்தால் குலக்கல்வி - இதையும் சேர்த்து பேச வேண்டியதானே!

சரி. ராஜகோபாலாச்சாரியார் அமெரிக்கா வுக்குச் சென்றாலும் பஞ்சக் கச்சத்தோடு சென்றார் - வி.வி.கிரி அய்யரும், ஆர்.வெங்கட் ராமய்யரும் கோட், ஷூட்டுடன் சென்றனரே, அது எப்படியாம்?

அதுவும் சிங்கப்பூர் சென்ற வி.வி.கிரி அய்யர்வாள் தனக்குப் பிராமண சமையல் வாள் தான் வேண்டும் என்று அடம் பிடித்ததையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாமே!

 கேள்வி: “காஷ்மீர் ஃபைல்ஸ்” மாதிரி “குஜராத் ஃபைல்ஸ்” எடுக்க வேண்டும், என்று, கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று கல் எறிகிறதே காங்கிரஸ்? 

பதில்:  கோத்ரா ரயில் நிலையத்தில், இஸ்லாமிய பயங்கர வாதிகள் அயோத்தியிலிருந்து வந்த 59 ராம பக்தர்களை, ரயில்வே பெட்டியில் வைத்துப் பூட்டி, பெட்ரோலை ஊற்றி உயிருடன் கொளுத்திப் படுகொலை செய்தார்கள். அதனால் துவங்கியது குஜராத் கலவரம். கோத்ராவைக் காட்டாமல் குஜராத் ஃபைல்ஸ் துவங்காது. அதைக் காட்டினால், கலவரத்தைத் தூண்டியது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று தெரிந்துவிடும். கலவரத்தை மோடி தூண்டினார் என்று அவதூறு கூறி வரும் காங்கிரஸ் மீது கல்லெறிவார்கள் மக்கள். அப்பாவி பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டு காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்டதையும், பயங்கர வாதிகள் தூண்டியதால் நடந்த குஜராத் கலவரத்தையும் ஒன்று என்று ஏடாகூடமாகப் பேசி, தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்ள காங்கிரஸால் மட்டுமே முடியும்.

-துக்ளக், 20.4.2022

கோத்ரா ரயிலில் ஏற்பட்ட நிகழ்வுக்கான குற்றவாளிகள் யார் யார்? என்று கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால் சரி.

அவ்வாறு செய்யாமல், சம்பந்தமே இல்லாத அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்துவது எப்படி? பெஸ்ட் பேக்கரி நெருப்பில் முசுலிம் குடும்பத்தினரை விறகைக் கட்டுவது போல் கட்டி எரித்தது எப்படி? நிறைமாதக் கர்ப்பிணி பெண்ணின் குடலைக் கிழித்து கருவை வெளியில் எடுத்து நெருப்பில் வீசி எறிந்து குதியாட்டம் போட்டது எப்படி?

அட ஈவு இரக்கமற்ற பிண்டங்களே, உங்களை என்ன சொல்லி அழைப்பது? 

உ.பி. முசாபர்பூர் கலவரத்துக்குக் காரணம் யார்? (எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்ற கும்பலாயிற்றே!)

கேள்வி: பா.ஜ.க. மதவாதக் கட்சியா?

பதில்: பா.ஜ.க. மதவாதக் கட்சி என்றால், அனைத்துக் கட்சிகளும் மதவாதக் கட்சிகள்தான். எந்த மதவாதத்தை, எப்போது யார் ஆதரிக்கிறார்கள் என்ற ஒன்றுதான் வித்தியாசம்.

- துக்ளக் - 20.4.2022

அதில் பா.ஜ.க. மதவாதக் கட்சி என்பதைத் துக்ளக் இப்பொழுதாவது ஒப்புக் கொண்டதே!

இந்தியா இந்துக்களின் நாடு, ஒரே நாடு, ஒரே மதம் என்று பச்சையாகப் பேசும் ஒரே கட்சி பா.ஜ. தானே! மற்றவர்கள் யாரும் அப்படிக் கூறுவது கிடையாதே!

எந்த மதவாதத்தையும் நாம் ஏற்பதில்லை.

மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து

மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே!


No comments:

Post a Comment