ஏழு நொடிகளில் மாத்திரை தயார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 14, 2022

ஏழு நொடிகளில் மாத்திரை தயார்!

'தனிநபருக்கென்றே மருந்து தயாரிப்பு' என்ற புதுமை, விரைவில் நடைமுறைக்கு வரும்போலத் தெரிகிறது. அதற்கு, லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள நவீன முப்பரிமாண அச்சியந்திரம் உதவும்.இன்று மாத்திரை மருந்துகள், பெரிய தொழிற்சாலைகளில் எல்லோருக்கும் பொதுவாகத் தயாராகின்றன. ஆனால், ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலமைப்பு, நோயின் தன்மை ஆகியவற்றை உணர்ந்து தயாரிக்கப்படுவதில்லை.

இந்த முறையை மாற்ற, 'பர்சனலைஸ்டு மெடிசின்' என்ற தனி மருந்துத்துறை மெல்ல உருவெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், லண்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள, மாத்திரையை நொடிகளில் அச்சிட்டுத்தரும் முப்பரிமாண அச்சியந்திரங்கள்.

இது எப்படி முடிகிறது? ஒரு உண்ணக்கூடிய பிசினில் மருந்தினை கலந்துவிடுவர். இத்துடன் ஒளி பட்டால் மாற்றமடையும் வேதிப் பொருளையும் சேர்ப்பர். பிறகு, முப்பரிமாண அச்சியந்திரத்தில் இந்த மூலப்பொருட்களை உள்ளிட்டு, அதன் மீது பல்வேறுகோணங்களில் ஒளியினை பாய்ச்சுவர். ஒளி படும் இடங்களில் எல்லாம் மருந்துப் பிசின் கெட்டியாகி, ஒரு திடமான மாத்திரை தயாராகிவிடும். ஒளிக் கதிர்கள் பலகோணங்களில் ஒரே நேரத்தில் பாய்ச்சப்படும் என்பதால், மாத்திரை திடவடிவமாக ஆவதற்கு சில விநாடிகள் போதும்.

லண்டன் ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் உருவாக்கிய முப்பரிமாண மருந்து அச்சியந்திரத்தில், ஒரு பாராசெட்டமால் மாத்திரையை உருவாக்கிக் காட்டியுள்ளனர். இந்த முறையில் மருந்து தயாரிக்கும் முறை பரவலானால், ஒவ்வொரு மருத்துவரின் மேசைக்கு அருகிலும் இந்த அச்சியந்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


No comments:

Post a Comment