ஆசிரியரிடம் கற்போம் வாருங்கள் இளைஞர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

ஆசிரியரிடம் கற்போம் வாருங்கள் இளைஞர்களே!

த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணிச் செயலாளர்,

திராவிடர் கழகம்

"மானமிகு ஆசிரியர் அவர்களே,

உங்களது கொள்கை உரத்தையும் - போராட்டக் குணத்தையும், சளைக்காத உழைப்பையும் - வயதை மறந்து செயல்படும் உற்சாகத்தையும் இன்றைய இளைய சமுதாயத்துக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!

இன உணர்வோடு இளைஞர்கள் திரள வேண்டிய காலமிது! 

ஆசிரியர் அவர்களே உங்கள் உழைப்பு வீண் போகாது:

ஆசிரியர் அவர்களே! உங்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி

என்பது - இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் - எந்தச் சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று நான் நடத்திச் செல்வேன் என்பதுதான்.

உங்களது உழைப்பு வீண் போகவில்லை என்பதன் அடையாளம்!

'எனக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விட்டது' என்று தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னபோது, 'உலகத்தில் எந்தச் சீர்திருத்தவாதியும் தனது கொள்கை ஆட்சியில் ஏறி - நடைமுறைக்கு வருவதைப் பார்த்ததில்லை, அய்யா அவர்களே! நீங்கள் அதனையும் பார்த்துவிட்டீர்கள், நீங்கள் சலிப்பு அடையலாமா?'

என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதேபோலத்தான் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை போராளிகளான உங்களுக்கு நான் சொல்வது, உங்களது உழைப்பு வீண் போகவில்லை என்பதன் அடையாளம்தான் இப்போது நீங்கள் பார்க்கும் 'திராவிட மாடல்' ஆட்சி, ஆசிரியர் அவர்களே, இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள். நீங்கள் தேர்தல் - அரசியலுக்கு  வரப்போகிறவர்கள் அல்ல - பட்டம் பதவிகளுக்காக காத்திருப்பவர்கள் அல்ல, அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் அல்ல, ஆனால் அதிகாரத்துக்கு வராமலேயே இனமானம் காக்கும் உங்களது கருத்தியல் வெற்றி பெற்று வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதை விட என்ன வேண்டும்?

  இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக அமைந்திருக்கிறது. நம்முடைய சமூகநீதியை, நாம் பேசிய மாநில சுயாட்சியை, இன்றைக்கு வட மாநிலத் தலைவர்கள், பல முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விழிப்படைந்து வரும் வடமாநில பொது மக்களும் முழங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சாதனை!"

வயதாலன்று உழைப்பால் உயர்ந்தார்

இளைஞர்களே நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமைபடக் குறிப்பிட்டதே மேற் கூறியவையாகும். இவை, மேடை நாகரிகத்திற்காக சொல்லப்பட்டவை அல்ல. முதலமைச்சர் தம் உள்ளத்திலிருந்து பேசியவை யாகும். முதலமைச்சர் மட்டுமன்று,  சட்டப் பேர வையில் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு பராட்டு விழா நடத்த வேண்டும் என்றார் தமிழ்நாட்டரசின் மூத்த அமைச்சர்  துரைமுருகன் அவர்கள்.

இத்தனை போற்றுதலும், புகழப்பெறுதலும், அவரின் வயதால் அடைந்த உயரமன்று, உழைப்பால் உயர்ந்ததாகும் தோழர்களே!

9 வயதில் மேடையேறி அன்று 

தந்தை பெரியார் கண்பார்வையில், தமிழ் நாட்டிலும்,

தரணியிலும் சுற்றிவந்த நம் தலைவர்,

89 ஆம் வயதிலும் தந்தை பெரியாரின் தத்துவங்களை

தரணியெங்கும் தழைக்கச் செய்ய 

வீறுகொண்டு சுற்றி சுழன்றடித்து வருகிறார். 

அதன் ஒரு பகுதிதானே.

நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக்கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பயணமாகும். 

 இப்பெரும்பயணத்தை அறிவித்த நேரத்திலேயே தமிழர் தலைவர் நலன் கருதிய தகைசால் பெருமக்கள் பயணத்தைத் தடுத்த நிலையிலும், 95 வயதில் மூத்திரச் சட்டியுடன் உயிர் போகும் வலி சுமந்து உழைத்தத் தலைவனின் தொண்டனாகிய நான் மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, சமூகநீதிக் கொடி தாழப் பறந்திட அனுமதித்திட முடியாது எனக் கூறி தமிழ்நாடு - புதுச்சேரி என 2 மாநிலம், நாகர்கோயில் முதல் வேப்பேரி வரை 38 மாவட்டங்கள், ஏப்ரல் 3 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 25 வரை 21 நாள்கள் 4700 கிலோ மீட்டர் பயணம் சென்று, தமிழ்ச் சமூகத் திற்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சி, இயக்கத் தோழர்களை போர்க்களச் சிப்பாய்களாகவும், மக்களை போராட்டக் களத்திற்கு ஆயத்தப்படுத்தியும் வந்திருக்கிறார்.

ஆசிரியரிடம் கற்போம்

பயணத்தின் வெற்றியை அறுவடைச் செய்ய  ஏப்ரல் 30 ஆம் நாள் மாநில இளைஞரணி கலந்துரையாடல்  கூட்டத்தை நடத்த பணித்துள்ளார். அன்று மாலையே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் அடாவடித்தனத்தை, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான போக்கைக் கண்டித்து எழும்பூர் தொடர்வண்டி சந்திப்பில்

ஹிந்தி அழிப்புப் போராட்டத்தையும், அதனைத் தொடர்ந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் வடவர்களின் ஆதிக்கத்தைக் கண்டித்தும், இளைஞர்களை உரிமை வென்றெடுக்கும் பணிக்கும் ஆயத்தப்படத்தவுள்ளார். இவை எல்லாம் ஏன் தோழர்களே?

நம் இனத்தின் மீட்சிக்காகத்தானே. 

உரிமைகளை மீட்டெடுக்க

வேண்டிய கடமைப்பாடு காளையர்களே நமக்குதானே

அதிகமுண்டு. 

 எனவே தான் தோழர்களே ஓய்வின்றி உழைக்கவும், சளைக்காமல் - சமரசமில்லாமல் - உணர்ச்சிகளுக்கு ஆளாகமல் பணி செய்யவும் தமிழர் தலைவரிடம் கற்க வேண்டிய பாடம் அதிகம் தோழர்களே. அத்தகைய பயிற்சி சாலையின் தொடக்க வகுப்பு தான் ஏப்ரல் 30 சென்னை பெரியார் திடலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். 

ஆசிரியர் அழைக்கிறார் அணி திரள்வோம் - எதற்கும் 

அணியமாவோம்.


No comments:

Post a Comment